Published:Updated:

`தங்கைக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்திக்க... இல்லைன்னா?'- தட்டிகேட்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த துயரம்

மணிகண்டன், காளிதாஸிடம், `தினேஷின் தங்கைக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்த வேண்டும்' என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். ஆனால், அதைக் காதில் வாங்காத காளிதாஸ், 'மரியாதையா போயிருங்க' என்று கத்தியைக் காட்டி மிரட்டியிருக்கிறார்

கொலை செய்யப்பட்ட மணிகண்டன்
கொலை செய்யப்பட்ட மணிகண்டன்

நண்பனின் தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபரை தட்டிக்கேட்ட இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம், கரூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொலை செய்தவர்கள் இளைஞர்கள் என்பதும், கஞ்சா போதையில் கொலை செய்திருப்பதும் தெரியவந்து, போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மணிகண்டன்
மணிகண்டன்

கரூர் தான்தோன்றிமலை வா.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர், மணிகண்டன் (வயது 19). இவரின் நண்பர் தினேஷ். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில், தினேஷின் தங்கையை, அதே பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் ஒருதலைப்பட்சமாகக் காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. தனது காதலை ஏற்க மறுத்த, தினேஷின் தங்கையைத் தினமும் வழிமறித்த காளிதாஸ் தன்னை காதலிக்க வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அதோடு, 'எனது காதலை ஏத்துக்கலைன்னா, உன் முகத்துல ஆசிட் ஊத்திருவேன். உன்னை ஆள் வச்சு கொலை பண்ணி, காக்கா, கழுகுக்கு இரையா போட்டிருவேன்' என்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

`எவ்வளவோ சொன்னோம், அவர் கேட்கவில்லை!' -கரூரில் தொழிலதிபரை எரித்துக்கொன்ற மனைவி, மகன்

இதனால், பயந்துபோன அந்தப் பெண், தன் அண்ணன் தினேஷிடம், காளிதாஸ் தன்னை காதலிக்கச் சொல்லி மிரட்டுவதைப் பற்றி சொல்லி அழுதிருக்கிறார். இதனால் கோபமான தினேஷ், தன் நண்பர் மணிகண்டனிடம் சொல்லியிருக்கிறார். மணிகண்டன் தினேஷையும் இன்னும் சில நண்பர்களையும் அழைத்துக்கொண்டு, காளிதாஸை தட்டிக்கேட்கச் சென்றிருக்கிறார்.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

அங்கே சென்ற மணிகண்டன், காளிதாஸிடம், தினேஷ் தங்கைக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்திக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். ஆனால், அதைக் காதில் வாங்காத காளிதாஸ், 'மரியாதையா போயிருங்க' என்று கத்தியைக் காட்டி மிரட்டியிருக்கிறார். மணிகண்டன் விடாமல் காளிதாஸை எச்சரிக்க, கோபமான காளிதாஸ் இன்னும் ஐந்து இளைஞர்களைச் சேர்த்துக்கொண்டு, மணிகண்டன், தினேஷ் உள்ளிட்டவர்களைத் தாக்கியிருக்கிறார். இதனால், தினேஷ் மற்றும் அவரின் நண்பர்கள் தப்பித்து ஓடியிருக்கிறார்கள்.

ஆனால், காளிதாஸ் கும்பலிடம் மணிகண்டன் மட்டும் மாட்டிக் கொண்டுள்ளார். சிறிது நேரம் கழித்து, சம்பவ இடத்தை வந்து பார்த்த தினேஷ் உள்ளிட்ட நண்பர்கள், மணிகண்டன் கத்திக் குத்து காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததைப் பார்த்து பதறிப்போயிருக்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மணிகண்டனை மீட்டு, இருசக்கர வாகனம் மூலம் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மணிகண்டன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து, தான்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மணிகண்டனை கொலை செய்த ராஜேஷ், ஸ்ரீதர், ராமமூர்த்தி, சூர்யா உள்ளிட்ட ஆறு பேர்களைக் கைது செய்தனர். மணிகண்டனை கத்தியால் குத்திக் கொன்ற காளிதாஸ் உள்ளிட்ட ஆறு பேரும், கஞ்சா அடித்ததோடு, மதுபோதையிலும் இருந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

கொலை செய்யப்பட்ட மணிகண்டன்
கொலை செய்யப்பட்ட மணிகண்டன்

"கஞ்சா புழக்கம் கரூர் மாவட்டத்தில் அதிகரித்துவிட்டதுதான், இதுபோன்ற கொலைகள் சர்வசாதாரணமாக நடப்பதற்கு காரணமாகிவிட்டது. சமீபத்தில், மயிலம்பட்டியில் ஒன்றரை ஏக்கரில் கஞ்சா பயிரிட்டிருந்த அரசியல் கட்சி பிரமுகரை கைது செய்தார்கள். கரூர் மாவட்டம் முழுக்க கஞ்சா விற்பனை சக்கைப்போடு போடுது. கரூர் மாவட்டக் காவல்துறை கஞ்சா புழக்கத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.