Published:Updated:

குடும்பச் சண்டையால் ரயில்நிலையம் வந்த சென்னை மாணவி! -நள்ளிரவில் காஷ்மீர் இளைஞரால் நேர்ந்த துயரம்

சென்னை எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையத்தில் நள்ளிரவில் தனியாக நின்ற மாணவியிடம் அன்பாகவும் ஆறுதலாவும் பேசிய இளைஞரால் அந்தச் சிறுமிக்குக் கொடுமை நேர்ந்துள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம்
சென்னை எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம்

எப்போதும் பரபரப்பாகக் கணப்படும் சென்னை எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையத்தில்தான் அந்தக் கொடுமை நிகழ்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் பிளாட்பாரத்தில் வழக்கம்போல ரயில்வே போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பிளாட்பாரத்தில் உள்ள இருக்கையில் கண்ணீர்மல்க சிறுமி ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் அருகில் இளைஞர் ஒருவர் உடைமைகளோடு அமர்ந்திருந்தார். அவர்கள் இருவரையும் போலீஸார் விசாரித்தனர். அப்போது சிறுமி கூறிய பதிலும் இளைஞர் கூறிய தகவலும் முன்னுக்குப்பின் முரணாகவே இருந்தது.

சென்ட்ரல் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம்
சென்ட்ரல் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம்

இதனால் சந்தேகமடைந்த போலீஸார் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருவரிடமும் தனித்தனியாக விசாரித்தனர். ஆண் காவலர்கள், சிறுமியிடம் விசாரித்தபோது அவரால் முழுத் தகவல்களையும் கூறமுடியவில்லை. இதையடுத்து இன்ஸ்பெக்டர் புஷ்பவள்ளி தலைமையிலான போலீஸார் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது அந்தச் சிறுமி, ரயில்நிலையத்தில் இரவு நடந்த கொடுமையைக் கூறியிருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீஸார் அந்த இளைஞரிடம் விசாரித்தனர். அப்போது அவர், அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்று மறுத்தார். இதையடுத்து போலீஸார் தங்கள் பாணியில் விசாரித்தபோது நடந்த உண்மையை அந்த இளைஞர் ஒப்புக்கொண்டார்.

ரயில்வே போலீஸாரிடம் பேசினோம். ``எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள பகுதியில் குடியிருக்கும் அந்தச் சிறுமி, 10-ம் வகுப்பு படித்துவருகிறார். மேலும் அந்தச் சிறுமியின் குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியது. சிறுமியின் பெற்றோருக்கு ஒரேநேரத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் மூன்றாவதாகப் பிறந்தவர்தான் இந்தச் சிறுமி.

இந்தச் சூழ்நிலையில், குடும்பத்தில் நடந்த சில சம்பவங்களால் வீட்டைவிட்டு வெளியேறியவர், சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளார். ரயில் மூலம் வெளியூர் சென்று ஏதாவது ஒரு வேலை செய்து வாழலாம் என்று கருதியவர், ரயில் நிலைய பிளாட்பாரத்தில் காலை முதலே அமர்ந்திருந்தார். ஆனால், ரயிலில் ஏறுவதற்குப் பயம். யார், தன்னை அழைத்துச் செல்வார் என்று கேள்விகளோடு பிளாட்பாரம் முழுவதும் சுற்றி வந்திருக்கிறார்.

சென்ட்ரல் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம்
சென்ட்ரல் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம்

ரயில் நிலையத்தில் வழக்கம் போல ரயில்கள் வந்து, புறப்பட்டுக் கொண்டிருந்தன. அதை வேடிக்கை பார்த்த சிறுமிக்கு நேரம் சென்றது தெரியவில்லை. பகல் முடிந்து இரவு நேரம் வந்தது. அப்போதும் சிறுமி பிளாட்பாரத்திலேயே காத்திருந்தார். இந்தச் சமயத்தில் நீண்ட நேரம் சிறுமியின் நடவடிக்கைகளைக் கவனித்த இளைஞர் ஒருவர் அவரிடம் பேச்சுக் கொடுத்துள்ளார்.

சிறுமிக்கு உணவு, ஸ்நாக்ஸ், டீ ஆகியவற்றை வாங்கிக் கொடுத்து அன்பாக கவனித்துள்ளார். அதன்பிறகு சிறுமி குறித்த விவரங்களைக் கேட்டறிந்த அந்த இளைஞர், என்னோடு ஜம்மு காஷ்மீருக்கு வருகிறாயா என்று கேட்டுள்ளார். அதற்கு சிறுமியும் ஓகே என்று கூறியுள்ளார். அதன்பிறகு இருவரும் தங்களின் குடும்பக் கதை என நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இரவு நேரத்தில் சிறுமியுடன் அந்த இளைஞர் பேசிக்கொண்டிருப்பதை அருகில் இருந்தவர்களும் சந்தேகத்துடன் பார்க்கவில்லை.

நேரம் செல்லச் செல்ல பயணிகள் எண்ணிக்கை பிளாட்பாரத்தில் குறைந்தது. அதைத் தனக்குச் சாதகமாக்கிய அந்த இளைஞர், சிறுமியை அழைத்துக்கொண்டு காலியான ரயில் பெட்டிக்குள் ஏறியுள்ளார். அங்கு சிறுமியிடம் தவறான முறையில் நடந்திருக்கிறார். இதன்பிறகு, சிறுமி மட்டும் கண்ணீர்மல்க பிளாட்பாரத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறியிருக்கிறார் மாணவி.

இதையடுத்து அந்த இளைஞர் மீது போக்ஸோ மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் வழக்கு பதிந்துள்ளோம். விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் மோகன்லால் (27) என்பதும் ஜம்மு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. சென்னையில் மருத்துவம் தொடர்பான வேலை செய்துவருவதாகக் கூறியுள்ளார். ஊருக்குச் செல்ல வந்த இடத்தில்தான் சிறுமியிடம் அவர் தவறாக நடந்துள்ளார்.

representational image
representational image

இதையடுத்து, சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தோம். அவர்கள் வந்து சிறுமிக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து, அந்தச் சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடந்துள்ளது. நீதிமன்றத்திலும் சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் மோகன்லால், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு நடப்பதால் சிறுமி, சென்னையில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்" என்றனர்.

இந்தச் சம்பவம் நடந்து இரண்டு வாரங்களான நிலையில் தற்போதுதான் வெளியில் தெரியவந்துள்ளது. ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்கள், பெண்களுக்குப் பாதுகாப்பானவையாக இருக்கின்றனவா.. இதில் உங்கள் கருத்து என்ன?