காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரான முகமது யாசின் மாலிக் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி 2019-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார். தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், காஷ்மீரின் அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு டெல்லி என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமை) நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``தீவிரவாத இயங்கங்களுக்கு நிதி வழங்கியதாக யாசின் மாலிக் மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. யாசின் மாலிக்கின் சொத்து விவரம்குறித்து அவரிடம் பிரமாணப் பத்திரம் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறோம். மேலும், தண்டனை விவரம் வரும் 25-ம் தேதி அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தனர்.
