Published:Updated:

திருவள்ளூர்: கொலையில் முடிந்த பழக்கம் - சாக்குப்பையில் இளைஞர் சடலத்துடன் சிக்கிய தம்பதி!

கைது செய்யப்பட்ட தம்பதி
கைது செய்யப்பட்ட தம்பதி

திருவள்ளுவர் மாவட்டம், மீஞ்சூர் அருகே கணவன், மனைவி சேர்ந்து இளைஞர் ஒருவரை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த காட்டூர் பகுதியில் நேற்று முன்தினம் போலீஸார் வழக்கம்போல் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையின் பட்டா புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு சாலையில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனம் ஒன்று அதிவேகமாக வந்திருக்கிறது. போலீஸார் அந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்த முயன்றபோது நிற்காமல் வேகமாகக் கடந்திருக்கிறது. இதனால், போலீஸார் அந்த வாகனத்தை விரட்டிப்பிடித்தனர்.

கொலை
கொலை
Representational Image

அந்த இருசக்கர வாகனத்தில் பயணித்த வடமாநிலத் தம்பதியர், ரத்தக் கறை படிந்த சாக்கு மூட்டையை வைத்துக்கொண்டு முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்திருக்கிறார்கள். சந்தேகமடைந்த போலீஸார் அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையைத் திறந்து பார்த்திருக்கிறார்கள். அப்போது அதில் ஆண் சடலம் ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, கணவன்-மனைவி இருவரையும் கைதுசெய்து விசாரித்ததில், அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. போலீஸ் விசாரணையில், கைதுசெய்யப்பட்ட கணவன் - மனைவி இருவரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது.

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``மீஞ்சூரை அடுத்த ராமநாதபுரம் பகுதியில் கட்டட வேலை செய்வதற்காக உத்தரப்பிரதேசத்திலிருந்து ஏராளமானோர் வந்து தங்கியிருக்கிறார்கள். அவர்களில், தேவேந்திரசிங்கும் (41) அவருடைய மனைவி சாயா-வும் (33) அடங்குவர். ராமநாதபுரம் பகுதியில், சாயாவைத் தனியாக விட்டுவிட்டு தேவேந்திரசிங் அடிக்கடி வெளியூருக்கு வேலைக்குச் சென்றுவிடுவார்.

தேவேந்திரசிங் ஊரில் இல்லாத நேரத்தில், சாயாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் இருவரும் நெருக்கமாகப் பழகியிருக்கிறார்கள். கணவர் தேவேந்திரசிங் ஊரில் இல்லாத நேரத்தில் சாயா, மனோஜைச் சந்தித்து நெருக்கமாக இருந்திருக்கிறார்.

தேவேந்திரசிங் - சாயா தம்பதி
தேவேந்திரசிங் - சாயா தம்பதி

மனோஜ், `நான் உன்னைக் காதலிக்கிறேன். வாழ்ந்தால் உன்னுடன்தான் வாழ்வேன். நாம் நிரந்தரமாக ஒன்றாக வாழ வேண்டும்’ என்று கூறி சாயாவை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்திருக்கிறார். இந்தநிலையில் மனோஜ், சாயாவிடம், `நான் உன்னுடன் நிரந்தரமாக வாழ வேண்டும், நீ என்னுடன் வந்து விடு. இல்லையென்றால் உன் கணவரின் மொபைலுக்கு நாம் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் அனுப்பிவிடுவேன்' என்று மிரட்டியிருக்கிறார்.

மனோஜின் மிரட்டலை எதிர்பார்க்காத சாயா, அதிர்ச்சியில் செய்வதறியாமல் தன் கணவரிடம் நடந்த எல்லாவற்றையும் கூறியிருக்கிறார். மனைவி கூறியவற்றைக் கேட்டு ஆத்திரமடைந்த தேவேந்திரசிங், சாயாவுடன், நேற்று முன்தினம் இரவு மனோஜ் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது மனோஜ், தேவேந்திரசிங்கையும் சாயாவையும் ஆபாசமாகத் திட்டியதாகச் சொல்கிறார்கள். இதனால், ஆத்திரமடைந்த கணவன், மனைவி இருவரும் உருட்டைக்கட்டை, சுத்தியல் கொண்டு மனோஜைப் பலமாக தலையில் தாக்கியிருக்கிறார்கள். இதில் படுகாயமடைந்த மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

இதனால், அதிர்ச்சியடைந்த இருவரும் கொலையை மறைக்கும் நோக்கில் மனோஜை சாக்கு மூட்டையில் போட்டு நள்ளிரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் எங்காவது வீசிவிட்டுத் தப்பித்துவிடத் திட்டமிட்டிருந்தனர். அதன்படி, நள்ளிரவு 2 மணி வரை காத்திருந்தவர்கள் வெளியில் ஆள்நடமாட்டம் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு சடலத்தை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காட்டூரிலிருந்து வாயலூர் நோக்கிச் சென்றபோது சிக்கியிருக்கிறார்கள்’’ என்றனர்.

காட்டூர் போலீஸார் இருவரையும் கைதுசெய்து விசாரித்துவருகிறார்கள். அவர்கள் வைத்திருந்த சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு