Published:Updated:

`பட்டனை அழுத்தியதும் 5 நிமிடத்தில் வந்த போலீஸ்!' - சென்னைப் பெண்ணுக்குக் கைகொடுத்த காவலன் செயலி

சென்னை இளம்பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர்கள் குறித்து காவலன் செயலி மூலம் தகவலைத் தெரிவித்தார். 5 நிமிடங்களில் வந்த காவலர்கள் அந்த 2 பேரையும் பிடித்துள்ளனர்.

காவலன் செயலி
காவலன் செயலி

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழகக் காவல்துறை எடுத்துவருகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு செயல்பட்டுவருகிறது. அதோடு காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.

காவலன் செயலி
காவலன் செயலி

அவசர தேவை காலகட்டத்தில் பெண்கள் காவலன் செயலி மூலம் தகவலைத் தெரிவித்தால் அடுத்த 5 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்துக்கு போலீஸ் டீம் வந்துவிடும். இதனால் காவலன் செயலி இன்று பெரும்பாலான பெண்களின் செல்போன்களில் இடம்பிடித்துள்ளது. சென்னை ஆர்.கே.நகர் பகுதியிலிருந்து காவலன் செயலி மூலம் நேற்றிரவு 8.30 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் ஆர்.கே.நகர் காவல் நிலையத்துக்கும் ஒரு தகவல் வந்தது.

உடனடியாக ஆர்.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீஸார், செயலி மூலம் தகவல் தெரிவித்த ஆர்.கே.நகர், ஆஸ்வல் கார்டன், சி.பி.சாலை பகுதிக்குச் சென்றனர். தகவல் கிடைத்த 5 நிமிடங்களுக்குள் அவசர உதவி கோரிய பெண்ணின் வீட்டுக்குள் போலீஸார் சென்றனர். அப்போது, அங்கு 2 நபர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் போலீஸாரைப் பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். அவர்கள் இருவரையும் தும் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர்.

தாவூத்
தாவூத்
Vikatan

விசாரணையில் அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சலீம் (41), தாவூத் (38) எனத் தெரியவந்தது. இவர்கள் இருவரும் பெண்ணின் வீட்டுக்கு வந்தபோது கூரியர் நிறுவனத்திலிருந்து வருவதாகக் கூறியுள்ளனர். விசாரணையில் அவர்கள் இருவரும் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என்று தெரிந்தது.

தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடந்துவருகிறது. எதற்காக அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் தாவூத்தும் சலீமும் நுழைந்தார்கள் என்று கேள்விக்கு இருவரும் எந்தவித பதிலும் சொல்லாமல் அமைதியாக இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

சலீம்
சலீம்

விசாரணையில் தாவூத் பர்மாவில் வேலைப் பார்த்து வருகிறார். நண்பர் ஒருவரின் மூலம் அந்தப் பெண்ணின் செல்போன் நம்பர் கிடைத்துள்ளது. இதனால் தாவூத், சலீம் ஆகிய இருவரும் தவறான எண்ணத்தில் அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இதில் தாவூத் நாளை விமானத்தில் பர்மா செல்ல திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.