Published:Updated:

தூத்துக்குடி: மந்தைக்குள் துள்ளிச்சென்ற ஆட்டுக்குட்டி! - மேய்த்தவரை காலில் விழவைத்த கொடூரம்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள்
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள்

மேய்ச்சலின்போது ஆட்டுக்குட்டி ஒன்று மற்றொருவரின் மந்தைக்குள் புகுந்ததால், குட்டியைப் பிடிக்க முயன்றவரின் சமூகத்தைச் சொல்லி மற்றொரு சமூகத்தினர் அவதூறாகப் பேசி, காலில் விழவைத்து மன்னிப்புக் கேட்கவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் தாலுகா ஓலைக்குளம் கிராம், வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், ஆடு மேய்க்கும் தொழில் செய்துவருகிறார். இவருக்கும் ஆடு மேய்த்துவரும் அதே ஊரைச் சேர்ந்த சிவசங்குவுக்கும் ஒரே இடத்தில் ஆடுகளை மேய்த்தது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில், கடந்த 8-ம் தேதி மேய்ச்சலின்போது பால்ராஜின் ஆடுகளில் ஒரு குட்டி, சிவசங்குவின் ஆட்டு மந்தைக்குள் சென்றுவிட்டதாம். மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சிவசங்குவின் உறவினர்கள் சிலர், பால்ராஜை சிவசங்குவின் காலில் விழுந்து கும்பிட்டு மன்னிப்புக் கேட்கச் சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவசங்குவின் காலில் விழும் பால்ராஜ்
சிவசங்குவின் காலில் விழும் பால்ராஜ்

சிவசங்குவின் காலில் பால்ராஜ், விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோவும் சமூக வளைதளங்களில் வைரலானது. இந்தநிலையில், மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன், தனது ட்விட்டர் பக்கத்தில்,``வட இந்திய மாநிலங்களில் மட்டுமல்ல, தமிழ்நாட்டுலும் தொடரும் அநாகரிகம். கயத்தார் அருகே ஓலைக்குளம் கிராமம், ஆதிக்குடியினத்தைச் சேர்ந்தவரின் ஆடுகள், தங்களின் கொல்லைப் பகுதியில் எப்படி நுழையலாம் என இந்தக் கேவலத்தை அரங்கேற்றியிருக்கிறார்களாம்” எனக் குறிப்பிட்டு, அந்த வீடியோவையும் இணைத்துப் பதிவிட்டிருக்கிறார்.

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரிடம் புகார் மனு அளித்திருக்கிறார் பால்ராஜ். இது குறித்து அவரிடம் பேசினோம். ``என்னோட சொந்த ஊரே ஓலைக்குளம் கிராமம்தான். எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுய்யா... ஆடு மேய்க்குறதுதான் என்னோட தொழில். எங்கிட்ட 90 செம்மறி ஆடுகள், 10 வெள்ளாடுகள்னு மொத்தம் 100 உருப்படி இருக்கு. இதையெல்லாம் மேய்ச்சலுக்கு அழைச்சுட்டு வீடு திரும்புறதுதான் என்னோட தினசரி வேலை. மானாவாரி நிலங்களில் நாள் கணக்குல கிடையும் போடுவேன். என்னைப் போலவே இதே ஊரைச் சேர்ந்த சிவசங்கு என்பவரும் சுமார் 100 ஆடுகள் வரை மேய்ச்சல் தொழில் செய்துட்டு வர்றாரு.

பால்ராஜ்
பால்ராஜ்

கடந்த 8-ம் தேதி சாயந்தரம் சுமார் 5 மணி இருக்கும். என்னோட ஆடுகளை, எங்க கிராமத்துப் பக்கத்துல இருக்குற திருமங்கலக்குறிச்சி குளத்தின் நடுப்பகுதியில் மேய்ச்சுக்கிட்டிருந்தேன். சிவசங்குவும் பக்கத்துலயேதான் அவரோட ஆடுகளை மேய்ச்சுக்கிட்டிருந்தார். அப்போ என்மந்தையில இருந்து ஒரு ஆட்டுக்குட்டி, துள்ளியோடி சிவசங்குவோட மந்தைக்குள்ள போயிட்டுது.

உடனே பதறிப்போயி அந்த ஆட்டுக்குட்டியைப் பிடிக்கப் போனப்போ, சிவசங்கு என்னைப் பார்த்து, `எலேய் எவ்வளவு திமிரு இருந்தா என்னோட ஆட்டு மந்தைக்குள்ள வருவ?’னு சொல்லி, அவர் கையிலவெச்சிருந்த கம்பால என்னை அடிக்க வந்தாரு. `ஆட்டுக்குட்டி தன்னால ஓடி வந்துருச்சு. அதுக்கு என்னை ஏன் திட்டுறீங்கய்யா?’னு கேட்டேன்.

சிவசங்குவின் காலில் விழும் பால்ராஜ்
சிவசங்குவின் காலில் விழும் பால்ராஜ்

`என்னல எதிர்த்தாப் பேசுற? இருலே... உன்னை என்ன செய்யுறேன்னு பாரு’னு சொல்லிட்டு வேகமாக நடந்தார். நான் ஆடுகளை மேய்ச்சுக்கிட்டு ஊரை நோக்கி நடந்தேன். அப்போ, சிவசங்குவோட மகன் சங்கிலிபாண்டியும் மகள் உடையம்மாளும் என்னைக் கம்பால அடிச்சாங்க. `எங்கப்பாட்ட போயி மன்னிப்பு கேளு. இல்லேன்னா, உன்னை இங்கேயே கொன்னுருவோம்’னு சொல்லி மிரட்டி கீழே தள்ளிவிட்டாங்க. சிவசங்குவும் அங்கேதான் இருந்தாரு.

`ரோலிங் சேர்... சாதிப் பிரச்னை... தர்ணா!’ - மயிலாடுதுறை ஊராட்சி சர்ச்சைப் பின்னணி

நானும் பயந்து போயி, கையைக் கும்பிட்டு மன்னிப்புக் கேட்ட படியே, அவரோட காலுல மூணு தடவை விழுந்து எந்திரிச்சேன். இதை அதே ஊரைச் சேர்ந்த மகேந்திரன், மகாராஜன்னு ரெண்டு பேரும் செல்போனில் வீடியோ எடுத்தாங்க. அப்போகூட நான் எதுவும் நினைக்கலை. அந்த வீடியோவை சமூகவ லைதளங்கள்ல பெருமையா பகிர்ந்தாங்க. காலுல விழுந்த அவமானத்தைவிட, இந்த அவமானத்தால ரொம்ப மனவேதனையும், மன உளைச்சலுமாகிடுச்சு. தன்னால துள்ளி ஓடுன ஆட்டைப் பிடிக்கப் போனது ஒரு குத்தமாய்யா..?” எனக் குமுறினார்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது

பால்ராஜின் புகாரின் அடிப்படையில், சிவசங்கு, சங்கிலி பாண்டியன், உடையம்மாள், பெரியமாரி, வீரைய்யா, மகேந்திரன், மகாராஜன் ஆகிய ஏழு பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கயத்தார் காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆடு மேய்ப்பவரை காலில் விழவைத்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு