Published:Updated:

`பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்யணும்!' - ஏழைக் காதலியைக் கொன்று புதைத்த ராணுவ வீரர்

சிந்து ஆர்

பணக்காரப் பெண்ணை திருமணம் செய்ய இடையூறாக இருந்த ஏழைக் காதலியைக் கொன்று புதைத்த ராணுவ வீரர்.

ராகிமோள்
ராகிமோள்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அம்பூரி பகுதியைச் சேர்ந்தவர் அகில் (26). இவருக்கும், பூவாறு திருபுறம் பகுதியைச் சேர்ந்த ராகி மோள் (29) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மிஸ்டு கால் மூலம் பழக்கம் ஏற்பட்டது. எர்ணாகுளத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்த ராகிமோளுக்கு அகிலைவிட வயது அதிகமாக இருந்தபோதும் இவர்களின் காதலில் தடங்கல் ஏற்படவில்லை. இந்தநிலையில் அகிலுக்கு இந்திய ராணுவத்தில் வேலை கிடைத்தது. இதையடுத்து அகிலின் வீட்டார் ஏழைப் பெண்ணான ராகிமோளை காதலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அகில் மற்றும் ராகுல்
அகில் மற்றும் ராகுல்

இதனால், கடந்த பிப்ரவரி மாதம் அகிலும் ராகிமோளும் ஒரு கோயிலில் வைத்து ரகசிய திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 21-ம் தேதி அகில் விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். அப்போது அகில் வீட்டார் பணக்காரப் பெண் ஒருவரை திருமணம் செய்ய பேசி முடித்துள்ளனர். இதை அறிந்த ராகிமோள் தனது காதல் குறித்தும், அகிலுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் எனவும் அகிலின் வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்ய ராகிமோள் இடைஞ்சலாக இருந்ததால் அகிலுக்கும், அவரது வீட்டாருக்கும் கோபம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த ஒன்றாம் தேதி எர்ணாகுளம் செல்வதாகக் கூறிச்சென்ற ராகி மோள் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ராகிமோளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். ராகிமோளின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது அது ஆம்பூரியில் ஒரு பூட்டிய வீட்டில் இருப்பதாக அடையாளம் காட்டியது. போலீஸார் பூட்டியிருந்த வீட்டை ஆய்வு செய்தபோது, பின்புறம் புதிதாக‌ சில மரங்கள் நடப்பட்டிருப்பதை பார்த்தனர். சந்தேகத்தின்பேரில் அந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது அங்கு ராகிமோளின் உடல் புதைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்.

ராகிமோள்
ராகிமோள்

போலீஸார் நடத்திய விசாரணையில் பணக்காரப் பெண்ணை திருமணம் செய்வதற்காக அகில், அவரது சகோதரர் ராகுல் மற்றும் அவரது உறவினர் ஆதர்ஷ் ஆகியோர் சேர்ந்து ராகிமோளைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பைச் சேர்ந்த அகிலின் நண்பரான ராணுவ வீரர் ரதீஷின் காரை இரவல் வாங்கியிருக்கிறார்கள். ராகிமோளை நெய்யாற்றின்கரைக்கு வரவழைத்து காரில் ஏற்றி, தான் புதிதாக வீடுகட்டும் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார் அகில். அப்போது அகிலின் சகோதரர் ராகுல் முதலில் ராகிமோளின் கழுத்தை நெரித்துள்ளார். ராகிமோள் மயங்கியுள்ளார், இருப்பினும் அவர் உடல் அசைந்தது. இதைத் தொடர்ந்து அகில், காரில் தயாராக வைத்திருந்த நைலான் கயிறுகொண்டு ராகிமோளின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

கொலைசெய்ய பயன்படுத்திய கார்
கொலைசெய்ய பயன்படுத்திய கார்

அதன்பிறகு வீட்டின் பின்புறம் நான்கு அடி ஆழத்தில் குழி தோண்டி நிர்வாண நிலையில் புதைத்துள்ளனர். உடல் சீக்கிரம் அழுகிப்போகவேண்டும் என்பதற்காக உப்பு போட்டு புதைத்துள்ளனர். ராகிமோளின் உடலை புதைத்த இடத்தில் பாக்குமரக் கன்று நட்டதுடன் காய்ந்த கம்புகளையும் அந்த இடத்தில் போட்டுவைத்துள்ளனர். செல்போன் சிக்னல் காட்டிக்கொடுத்ததை தொடர்ந்து அகிலின் சகோதரர் ராகுல், உறவினர் ஆதர்ஷ் ஆகியோரை போலீஸார் ஏற்கெனவே கைது செய்ததைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வைத்து அகிலை கைது செய்தனர்.

பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்வதற்காக ஏழைக் காதலி கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.