Published:Updated:

`திருமணத்தை வியாபார ஒப்பந்தமாகத் தரம் தாழ்த்தாதீர்கள்!' - இளம்பெண்ணின் மரணம் குறித்து பினராயி விஜயன்

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

``திருமணம் என்பது குடும்பத்தின் அந்தஸ்தையும் கௌரவத்தையும் காட்டுவதற்கான நிகழ்வு அல்ல. அப்படி நினைப்பவர்கள் சொந்த பிள்ளைகளை விற்பனை சரக்காக மாற்றுகிறார்கள் என்று அர்த்தம்."

கேரள மாநிலம் கொல்லம் சாஸ்தாங்கோட்டை பகுதியில் விஸ்மயா என்ற இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். விஸ்மயாவுக்கும், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டரான கிரண்குமாருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில், அவருக்கு வரதட்சணையாக வழங்கப்பட்ட காரின் மதிப்புக் குறைவு எனக்கூறி விஸ்மயாவை கிரண்குமார் டார்ச்சர் செய்ததாகக் கூறப்படுகிறது. வரதட்சணை பிரச்னையால் விஸ்மயா கடந்த திங்கள்கிழமை இறந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதே சமயம், கணவர் வீட்டின் பாத்ரூமில் தூக்கில் தொங்கிய நிலையில் விஸ்மயாவின் உடல் மீட்கப்பட்டதால் அது கொலையா, தற்கொலையா என்று அறிய முழுமையான பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டுக்காக போலீஸார் காத்திருக்கின்றனர்.

ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மாணவியான விஸ்மயாவின் திருமணத்தின்போது மாப்பிள்ளைக்கு 1.20 ஏக்கர் நிலம், 100 பவுன் நகை, சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார் ஆகியவற்றை வரதட்சணையாக வழங்கியுள்ளனர். இது போதாது என கணவர் வீட்டார் டார்ச்சர் செய்ததால் விஸ்மயா தற்கொலை செய்துகொண்டுள்ள இந்தச் சம்பவம் கேரளத்தை உலுக்கியுள்ளது.

வரதட்சணை பிரச்னையால் மரணமடைந்த விஸ்மயா
வரதட்சணை பிரச்னையால் மரணமடைந்த விஸ்மயா
கேரளா: வரதட்சணையாகக் கொடுத்த காரின் மதிப்பு குறைவு; இறந்துகிடந்த மனைவி; 
நடந்தது என்ன?

இளம் பெண் விஸ்மயாவின் மரணம் கேரள முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் அதிரவைத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ``நாட்டில் வரதட்சணை தடை செய்யப்பட்டு 60 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் பல வடிவங்களில் அதிக வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் நடைபெற்று வருகிறது. இது கொடுமையான சமூக விபத்தாகும்.

திருமணம் என்பது குடும்பத்தின் அந்தஸ்தையும் கௌரவத்தையும் காட்டுவதற்கான நிகழ்வு அல்ல. அப்படி நினைப்பவர்கள் சொந்த பிள்ளைகளை விற்பனை சரக்காக மாற்றுகிறார்கள் என்று அர்த்தம். திருமணத்தையும், குடும்ப வாழ்க்கையையும் வியாபார ஒப்பந்தமாகத் தரம்தாழ்த்தக் கூடாது" என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் விஸ்மயாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் கூறுகையில், ``வளர்த்து, பெரியவளாக்கி, அதிக கனவுகளோடு மற்றொரு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட விஸ்மயாவுக்கு இப்படி நேர்ந்தது மிகவும் வருத்தமாக உள்ளது.

விஸ்மயாவின் தாய்க்கு ஆறுதல் கூறும் அமைச்சர் வீணா ஜார்ஜ்
விஸ்மயாவின் தாய்க்கு ஆறுதல் கூறும் அமைச்சர் வீணா ஜார்ஜ்
மதுர மக்கள்: "வரதட்சணை கொடுமை, வாழ்க்கையே முடிஞ்சதுனு நினைச்சேன்! ஆனா..."- `முயல் சத்யா'வின் கதை!

பெண்களுக்கு எதிரான இதுபோன்ற அக்கிரமங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. வரதட்சணை சம்பிரதாயத்துக்கு எதிராக கேரளத்தில் பொது விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும். வரதட்சணை கொடுக்க மாட்டோம், வரதட்சணை வாங்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்க வேண்டும். வரதட்சணைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்" என்றார்.

சி.பி.எம் நிர்வாகி பி.கே.ஸ்ரீமதி தனது முகநூல் பக்கத்தில், ``பணம் மற்றும் நகை மீதான மனிதனின் பேராசையைத் தீர்ப்பதற்காக, பெண்களைப் பலிகொடுக்கும் காட்டுமிராண்டித்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திருமணச் சடங்குகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். கண்ணூரில் உள்ள முஸ்லிம் குடும்பங்களில் நடப்பதுபோன்று திருமணம் முடிந்ததும் கணவன் தன் மனைவியின் வீட்டில் சென்று வசிக்க வேண்டும்.

பி.கே.ஸ்ரீமதி
பி.கே.ஸ்ரீமதி

கொலை, தற்கொலை என இதுபோன்று நடக்கும் சம்பவங்கள் பெரிய அவமானத்தை உண்டாக்குகின்றன. நியாயப்படி பார்த்தால் பெண்ணின் பெற்றோருக்கு ஆண் பணம் கொடுத்து திருமணம் செய்ய வேண்டும். இல்லையென்றால் மனைவி வீட்டுக்குச் சென்று கணவன் வசிக்க வேண்டும். அப்படி நடந்தால் பெண்களுக்கு மனரீதியான பிரச்னையோ, மரணமோ நடக்காது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு