Published:Updated:

முறிந்த விலா எலும்புகள்; பாதிக்கப்பட்ட நரம்புகள்!- கேரள மக்களை அச்சத்தில் ஆழ்த்திய லாக்கப் டெத்!

சத்யா கோபாலன்

‘நெடுங்கண்டம் காவலர்களுக்கு குற்றவாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற சிறிது அறிவுகூட அவர்களுக்கு இல்லை' எனக் கடுமையாகச் சாடியுள்ளார் கேரள அமைச்சர் எம்.எம்.மணி

ராஜ்குமார்
ராஜ்குமார்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகாமன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தன் நண்பர்களுடன் இணைந்து ஹரிதா ஃபைனான்சியர் (Haritha Financiers) என்ற சிறிய கம்பெனி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் ஜூன் 12-ம் தேதி பண மோசடி விவகாரம் தொடர்பாக நெடுங்கண்டம் (Nedumkandam) போலீஸார் ராஜ்குமாரை கைது செய்துள்ளனர்.

கேரளப் போராட்டம்
கேரளப் போராட்டம்
ANI

அவரை அழைத்துச் சென்று நான்கு நாள்கள் கழித்துத்தான் ராஜ்குமார் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ரெக்கார்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்குமார் போலீஸ் காவலிலிருந்த நாள்களில் அவரை காண வேண்டும் என உறவினர்கள் கேட்டுள்ளனர். ஆனால், உறவினர்களின் கேள்விக்குக் காவலர்கள் தரப்பில் எந்த ஒரு முறையான பதிலும் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து ஜூன் 21-ம் தேதி காவலில் இருக்கும் போதே ராஜ்குமார் உயிரிழந்தார்.

ராஜ்குமாரின் மரணத்துக்கான காரணத்தை அறிந்துகொள்ள போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து ராஜ்குமாரின் பிரேதப்பரிசோதனையில் கிடைத்த தகவல்கள் அனைத்தும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அவரின் உடலில் அதிக காயங்கள் இருந்த காரணத்தினால் ராஜ்குமார் இறந்ததாக பிரேதபரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராஜ்குமாரின் தாய்
ராஜ்குமாரின் தாய்

மேலும் அவரின் மார்பு எலும்பைத் தவிர மற்ற விலா எலும்புகளும் முறிந்துள்ளன. ராஜ்குமாரின் பாதத்தில் பல மணி நேரமாகக் காவலர்கள் தாக்கியதால் அவரின் கால் நரம்பு பாதிக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேதப்பரிசோதனை அறிக்கையைத் தொடர்ந்து ராஜ்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.

பின்னர், ராஜ்குமார் இறந்த வழக்கு, கேரளக் குற்றவியல் துறைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் கிடைத்த சாட்சியங்கள் மற்றும் விசாரணைகள் அனைத்தும் மனதை ரணமாக்கும் விதமாகவே உள்ளது. ஜூன் 12-ம் தேதி ராஜ்குமார் அழைத்துச் செல்லப்பட்ட பிறகு காவலர்கள் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவர் காவலிலிருந்த நான்கு நாள்களும் ராஜ்குமாருக்கு உணவு வழங்கப்படவில்லை, அவரை தூங்கவும் அனுமதிக்கவில்லை’ எனக் கூறப்பட்டுள்ளது.

சிறை
சிறை

இதே பண மோசடி வழக்குத் தொடர்பாக ஹரிதா ஃபைனான்சின் மற்றுமோர் இயக்குநரான ஷாலினி என்பவரும் கைது செய்யப்பட்டு கடந்த ஜூலை 1-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். ராஜ்குமார் கொலை தொடர்பாகப் பேசியுள்ள ஷாலினி, ‘நானும், ராஜ்குமாரும் இணைந்துதான் அழைத்துச் செல்லப்பட்டோம். காவலர்கள் எங்கள் இருவரையும் பலமாகத் தாக்கினர். ஆனால் ராஜ்குமாரை மட்டும் மண்டியிடக் கூறி பிரம்பால் சரமாரியாகத் தாக்கினர். மோசடி செய்த பணத்தை விரைவில் ஒப்படைத்து விடுகிறேன். என்னை விட்டுவிடுங்கள் என ராஜ்குமார் எவ்வளவோ கெஞ்சினார். ஆனால், காவலர்கள் சற்றும் இரக்கம் காட்டாமல் இன்னும் 24 மணி நேரத்துக்குள் பணம் வந்து சேரவேண்டும் என அடித்தனர்.

ராஜ்குமாரை கொலை செய்யும் நோக்கில்தான் காவலர்கள் அவரை தாக்கினர். ஜூலை 13-ம் தேதி ராஜ்குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் செல்லும்போது அவரின் உடலிலிருந்த காயங்களைப் பார்த்து மருத்துவரே அதிர்ந்தார். உடனடியாக ராஜ்குமாரை கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அதை அலட்சியப்படுத்திவிட்டு அவசரகதியாக என்னையும் ராஜ்குமாரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கடுமையாகத் தாக்கப்பட்டதும் ராஜ்குமாரின் உடல்நிலை மிகவும் மோசமானது. அதனால், ஜூன் 20-ம் தேதி பீர்மேடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காததால் மறுநாள் ஜூன் 21-ம் தேதியே உயிரிழந்துவிட்டார்” எனக் கூறியுள்ளார்.

போராட்டம்
போராட்டம்
ANI

ராஜ்குமாரின் இறப்புக்கு காவலர்கள்தான் காரணம் என்பதற்கு அவரின் உறவினரும், மற்றொரு கைதியும் சாட்சியாக உள்ளனர். ராஜ்குமார் தாக்கப்பட்டதை விவரித்த அவரின் உறவினர் ஹக்கிம், ‘ மோசடி வழக்கில் தொடர்புள்ளதாகக் கூறி கடந்த ஜூன் 15-ம் தேதி என்னையும் காவலர்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். நான் காவல்நிலையத்துக்குச் சென்றபின் தான் தெரிந்தது உள்ளே என்ன நடக்கிறது என்ற விசயங்கள்.

காவலர்கள் என்னையும் சரமாரியாகத் தாக்கினர். நான் இருந்த அறைக்கு அருகில் மற்றொரு அறையில் பயங்கர அலறல் சத்தம் கேட்டது. அது ராஜ்குமாரின் குரல்தான். காவலர்கள் அவரை கடுமையாக அடித்துக்கொண்டிருந்தனர். காவலர்கள் என்னைத் தாக்கியபோது நான் சிறைக் கம்பிகளை இறுக்கப் பிடித்துக்கொண்டதால் அது சற்று வளைந்துவிட்டது. இதைக் கண்டதும் காவலர்கள் என்னை மிரட்டத் தொடங்கினர். அந்தக் கம்பிகளை நான் சரிசெய்து தரவில்லையெனில் ஜாமீனில் வெளிவரமுடியாதபடி என் மீது வழக்குத் தொடரப்படும் எனக் கூறினர். பின்னர் என் அம்மா அதைச் சரிசெய்ய வேண்டியிருந்தது” எனப் பேசியுள்ளார்.

கேரள காவல்துறை
கேரள காவல்துறை

கேரளக் காவலர்கள் தாக்கிய காரணத்தால் ஒருவர் மரணமடைந்துள்ளார் என்ற சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவலர்கள் மீது குற்றம் உறுதியான நிலையில் எஸ்.ஐ சபு உட்பட இரண்டு காவலர்களை குற்றவியல் காவல்துறையினர் கைது செய்திருந்தனர். சபு குற்றவியல் காவலர்களின் விசாரணையில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று ஒரு பெண் காவலர் உட்பட மேலும் ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் இடுக்கியைச் சேர்ந்த ஜார்ஜ் வடக்கன் என்பவர் அம்மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளார். அதில் கேரளாவில் கடுமையாகக் குற்றங்களுக்குள்ளான 1,129 காவலர்கள் இன்னும் பணியில் உள்ளனர். கேரளாவில் காவலர்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் இடுக்கியில் ஒருவர் சிறையில் இறந்துள்ளார். இதன் மூலமாகவே பல காவலர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கிறது. அவர்களின் செயல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். கேரளாவில் தொடரும் லாக்கப் டெத்தால் அம்மாநில மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.