Published:Updated:

ஒரு கொலை... இரண்டு தற்கொலை... விபரீதமாகிப்போன ஃபேஸ்புக் காதல் விளையாட்டு!

ஃபேஸ்புக் காதல் விளையாட்டு
பிரீமியம் ஸ்டோரி
ஃபேஸ்புக் காதல் விளையாட்டு

சருகில் வீசப்பட்ட குழந்தை... டி.என்.ஏ பரிசோதனையில் அதிர்ச்சி!

ஒரு கொலை... இரண்டு தற்கொலை... விபரீதமாகிப்போன ஃபேஸ்புக் காதல் விளையாட்டு!

சருகில் வீசப்பட்ட குழந்தை... டி.என்.ஏ பரிசோதனையில் அதிர்ச்சி!

Published:Updated:
ஃபேஸ்புக் காதல் விளையாட்டு
பிரீமியம் ஸ்டோரி
ஃபேஸ்புக் காதல் விளையாட்டு

பல நேரங்களில் உண்மைகள் நம்ப முடியாதவையாக இருக்கின்றன. கற்பனையை விஞ்சுகிற அளவுக்கு திகிலாகவும் இருக்கின்றன. மொத்த கேரளாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்தச் சம்பவமும் சினிமாவை விஞ்சுகிற ஷாக் ரகம்!

‘‘என் அனந்துவுடன் ஒரு நாளாவது என்னை வாழ அனுமதியுங்கள். பின், எத்தனை நாள் வேண்டுமானாலும் என்னைச் சிறையில் அடைத்துக்கொள்ளுங்கள்!’’ - ஃபேஸ்புக்கில் அறிமுகமான காதலனுக்காகப் பெற்ற குழந்தையையே கொன்ற குற்றச்சாட்டில் கைதான அந்தப் பெண் சிறைக்குள் செல்வதற்கு முன்பு, போலீஸாரிடம் சொன்ன வார்த்தைகள் இவை. அந்தக் காதலன் யார்... அவனுக்கு உண்மை தெரிந்ததும் என்ன செய்தான்... என்ன நடந்தது?

ஒரு கொலை... இரண்டு தற்கொலை... விபரீதமாகிப்போன ஃபேஸ்புக் காதல் விளையாட்டு!

சருகில் வீசப்பட்ட குழந்தை... டி.என்.ஏ பரிசோதனையில் அதிர்ச்சி!

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் கல்லுவாதக்கல் ஊழாய்க்கோடு பகுதி... ஜனவரி மாதம் 5-ம் தேதி காலை 6:30 மணி... ‘‘பக்கத்துல எங்கேயோ குழந்தை அழும் சத்தம் கேக்குதே?’’ - பல் தேய்த்துக்கொண்டே தன் தாய் சீதாவிடம் சொன்னாள் ரேஷ்மா. சத்தம் வந்த சருகுகள் அடர்ந்த புதர் போன்ற பகுதியை நோக்கிச் சென்றவள், பிறந்து சுமார் எட்டு மணி நேரமே ஆன ஆண் குழந்தையைக் கையில் எடுத்துவந்தாள். ரேஷ்மாவின் கணவரும், அவரின் பெற்றோரும் சேர்ந்து வெந்நீரில் குழந்தையைத் துடைத்துவிட்டு, போலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். விரைந்துவந்த போலீஸார், குழந்தையை அருகிலுள்ள பாரிப்பள்ளி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். சுவாசக்குழாயில் சருகுகள் சிக்கியதால், சிகிச்சை பலனின்றி அன்று மாலையே குழந்தை இறந்துபோனது.

விசாரணை நடத்திய பாரிப்பள்ளி போலீஸார், அந்தப் பகுதியிலுள்ள சுமார் நூறு பெண்களை, குழந்தை கிடந்த ரப்பர் தோட்டப் பகுதியில் சிறிதுநேரம் நடக்கவைத்தார்கள். ‘முந்தைய தினம் குழந்தை பிரசவித்த பெண் என்றால், சோர்வாக இருப்பார். அவரைக் கண்டுபிடித்துவிடலாம்’ என போலீஸ் கணக்கு போட்டது. ஆனால், அப்படி யாரையும் போலீஸால் கண்டுபிடிக்க முடியவில்லை. மோப்பநாய் மூலம் விசாரணை நடத்தினார்கள்; பலனில்லை. அந்தப் பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஏரியா செவிலியர்களிடம், கர்ப்பிணிப் பெண்கள் குறித்த விவரங்களைச் சேகரித்தனர். அதிலும், கண்டுபிடிக்க முடியவில்லை.

‘கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்றால், அவர்கள் போனில் அதிக நேரம் பேசியிருக்க வாய்ப்பு உண்டு’ என்று முடிவுசெய்து அந்தப் பகுதி மொபைல் டவரில் பதிவான கால் ரெக்கார்டுகளைப் பரிசோதித்தனர். அதுவும் கைகொடுக்காததால், குழந்தை கிடந்த பகுதியை ஒட்டியுள்ள பத்து குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் டி.என்.ஏ பரிசோதனை எடுக்கப்பட்டது. டி.என்.ஏ பரிசோதனையின் முடிவு கடந்த ஜூன் மாதம் வெளிவந்தபோது அதிர்ச்சியில் உறைந்துபோனது காவல்துறை!

குழந்தையைக் ‘கண்டெடுத்த’ ரேஷ்மாதான் அதன் தாய் எனவும், அவரின் கணவர் விஷ்ணுதான் தந்தை எனவும் கண்டறியப்பட்டது. ‘‘தான் பெற்ற குழந்தையையே ரேஷ்மா ஏன் வீசியெறிந்து நாடகம் நடத்த வேண்டும்?’’ என்ற குழப்பத்துடன் போலீஸார் விசாரணையைத் தொடங்கினார்கள். இடைப்பட்ட காலத்தில், விஷ்ணு வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். அவரிடம் விசாரித்தபோது, ‘‘என் மனைவி கர்ப்பமாக இருந்த விஷயமே எனக்குத் தெரியாது’’ என்றிருக்கிறார் அதிர்ச்சியுடன். ரேஷ்மாவும் விஷ்ணுவும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது.

ஒரு கொலை... இரண்டு தற்கொலை... விபரீதமாகிப்போன ஃபேஸ்புக் காதல் விளையாட்டு!

ஃபேஸ்புக் காதல்... பாத்ரூமில் பிரசவம்!

ரேஷ்மாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ‘‘ஃபேஸ்புக்கில் அறிமுகமான அனந்து என்பவரை நான் காதலிக்கிறேன். இந்தநிலையில்தான், இரண்டாவதாக கர்ப்பமானேன். இந்தக் குழந்தை இருந்தால் அதை வளர்க்க வேண்டும். அனந்துவுடன் செல்லத் தடங்கலாக இருக்கும் என்று கருதினேன். அதனால், நான் கர்ப்பமான விஷயத்தை யாரிடமும் சொல்லவில்லை. எனக்கு மெலிந்த தேகம் என்பதால், பெரிய ஆடைகளை அணிந்தும், பெல்ட் அணிந்தும் வயிற்றை மறைத்தேன். கணவர் அருகில் நெருங்காமல் பார்த்துக்கொண்டேன். எந்த மருந்தும் எடுத்துக்கொள்ளவில்லை. ஜனவரி 4-ம் தேதி இரவு பிரசவவலி வந்ததும், வீட்டுக்கு வெளியேயிருந்த பாத்ரூமுக்குச் சென்று குழந்தையைப் பெற்றுக்கொண்டேன். பிறகு, சருகுகளுக்கு நடுவே குழந்தையைப் போட்டுவிட்டேன். வலி நிவாரணி மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டு கணவரின் அருகில் சென்று படுத்துக்கொண்டேன்’’ என்று சொல்லி ஷாக் கொடுத்தார்.

‘‘யார் அந்த அனந்து... அவர் எங்கிருக்கிறார்’’ என்று விசாரித்திருக்கிறார்கள். ‘‘அனந்து பேங்க்கில் பணிபுரிகிறார் என்பது மட்டும்தான் தெரியும். அவருடன் ஃபேஸ்புக்கில் சாட்டிங் மட்டும்தான் செய்திருக்கிறேன். நேரில் கண்டதில்லை. போனில்கூடப் பேசியதில்லை’’ என்றதுடன், ‘‘என் அனந்துவுடன் ஒரு நாளாவது என்னை வாழ அனுமதியுங்கள். பின், எத்தனை நாள் வேண்டுமென்றாலும் சிறையில் அடைத்துக் கொள்ளுங்கள்!’’ என்று சொல்லி அதிகாரிகளை அதிரவைத்தார். அதையடுத்து கடந்த ஜூன் 22-ம் தேதி ரேஷ்மா கைதுசெய்யப்பட்டார்.

ஒரு கொலை... இரண்டு தற்கொலை... விபரீதமாகிப்போன ஃபேஸ்புக் காதல் விளையாட்டு!

ஒரு விளையாட்டு... இரண்டு தற்கொலைகள்!

ரேஷ்மாவின் ஃபேஸ்புக் காதலன் அனந்துவைக் கண்டுபிடிக்கும் படலத்தில் இறங்கியது போலீஸ். ரேஷ்மா பயன்படுத்திய சிம்கார்டு அவரின் உறவினர் ஆர்யா பெயரில் இருந்திருக்கிறது. ரேஷ்மாவின் கணவர் விஷ்ணுவின் தம்பி ரஞ்சித்தின் மனைவிதான் ஆர்யா. அவரிடம் விசாரித்தால் ஏதேனும் தகவல் கிடைக்கும் என்றெண்ணிய போலீஸார், ஜூன் 24-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அழைத்திருந்தார்கள். ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல் ஆர்யா திடீரென காணாமல் போனார். அடுத்ததாக விஷ்ணுவின் அக்கா மகள் கிறீஸ்மாவும் காணாமல்போனார். அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் மொபைல் லொகேஷனையும் ஆராய்ந்ததில், இத்திக்கரை ஆற்றின் பக்கம் அவர்கள் சென்றது தெரியவந்தது. ஆற்றில் தேடியபோது இருவரின் உடல்களும் ஜூன் 25-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டன.

தற்கொலைக்கு முன்பு ஆர்யா எழுதிய கடிதம் போலீஸாருக்குக் கிடைத்தது. அதில், ‘தெரிந்தே யாருக்கும் சதிசெய்ய வேண்டும் என நான் நினைக்கவில்லை. ஒரு பச்சிளம் குழந்தையைக் கொலைசெய்த வழக்கில் போலீஸ் என்னைக் கைதுசெய்வதை நினைக்கும்போதே என்னால் சகிக்க முடியவில்லை. எங்களை எல்லோரும் மன்னியுங்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது.

ஒருவேளை ரேஷ்மா குழந்தை பெற்றபோது இவர்கள் இருவரும் உதவிசெய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்தார்கள். ஆனால், குழந்தை பிறந்த அன்றைய இரவு இவர்கள் இருவரும் தங்கள் வீடுகளில் இருந்தது உறுதியானது. எனவே, ஃபேஸ்புக் காதலன் அனந்து பற்றி இவர்களுக்குத் தெரிந்திருக்கலாம் என்று நினைத்தார்கள். தற்கொலை செய்துகொண்ட கிறீஸ்மாவின் நெருங்கிய ஆண் நண்பர் ஒருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினார்கள். அப்போதுதான் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ‘‘ஆர்யாவும் கிறீஸ்மாவும் சேர்ந்து ‘அனந்து’ என்ற போலி ஃபேஸ்புக் ஐ.டி-யை உருவாக்கி விளையாட்டாக ரேஷ்மாவுடன் சாட் செய்திருக்கிறார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த சாட்டிங் நடந்திருக்கிறது. அனந்துவை உண்மையான ஆண் என நம்பி ரேஷ்மா தீவிரமாகக் காதலித்திருக்கிறார். இந்த விஷயத்தை கிறீஸ்மா என்னிடம் ஒருமுறை கூறியிருக்கிறார்’’ என்றிருக்கிறார் அவர். ஒரு குழந்தை கொலை செய்யப்படக் காரணமாகிவிட்டோம் என்கிற மன உளைச்சலில் இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்திருக்கிறது.

“மொத்தமாக ஏமாற்றிவிட்டாள்!”

ரேஷ்மாவின் கணவர் விஷ்ணுவிடம் பேசினோம். ‘‘என் மனைவி கர்ப்பிணியாக இருந்தது எங்கள் யாருக்கும் தெரியாது. ஆனால், ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு வந்ததாகக் கூறி தனியாக இருப்பாள். குழந்தை பிறந்ததாகக் கூறும் அன்று இரவு 11 மணிக்கு நான் வீட்டுக்கு வந்த சமயத்தில் அவள்தான் கதவு திறந்தாள். எனக்குச் சாப்பாடு போட்டாள். மறுநாள் காலையில் கண் விழிக்கும்போது அவள் என்னுடன்தான் எழுந்தாள்.

ஒருமுறை பரவூரிலுள்ள அக்கா வீட்டுக்குப் போவதாக என்னிடம் கூறிவிட்டுப் போனாள். அன்று வர்க்கலா பீச்சில் ரேஷ்மா நடந்து செல்வதாக என் நண்பர் ஒருவர் போன் செய்து சொன்னார். ‘வர்க்கலாவுக்கு ஏன் சென்றாய்?’ என்று கேட்டதற்கு, ‘ஃபேஸ்புக் நண்பர் அனந்து என்பவர் வரச் சொன்னதால் போனேன். ஆனால், அவர் வரவில்லை’ என்றாள். ‘யாருகூடயாவது போகணும்னு உனக்குத் தோன்றினால், என் மகளை என்னிடம் ஒப்படைத்துவிட்டுப் போ’ என்று கோபமாகச் சொன்ன நான், செல்போனையும் தூக்கி வீசி உடைத்துவிட்டேன். சிம்கார்டையும் உடைத்துப்போட்டேன். ‘இனி தவறு செய்ய மாட்டேன்’ என்று அழுதாள். நான் வெளிநாட்டுக்குப் போகும்போது, என்னிடமிருந்த போனைக் கொடுத்துவிட்டு, புதிய சிம்கார்டும் வாங்கிக் கொடுத்துவிட்டுச் சென்றேன். கண்மூடித்தனமாக நம்பினேன். மொத்தமாக ஏமாற்றிவிட்டாள்’’ என்று வெடித்து அழுதார்.

ஒரு கொலை... இரண்டு தற்கொலை... விபரீதமாகிப்போன ஃபேஸ்புக் காதல் விளையாட்டு!

அட்டக்குளங்கர மகளிர் சிறையில் இருக்கும் ரேஷ்மாவுக்கு இப்போதுவரை அவரின் ஃபேஸ்புக் காதலன் ‘அனந்து’ போலி என்ற விவரம் தெரிவிக்கப் படவில்லை. ஒரு பொய்யான விளையாட்டு விபரீதமாகி, மூன்று உயிர்களைக் கொன்று... ஒருவரைச் சிறையில் அடைத்துள்ளது; மூன்று குடும்பங்கள் சிதைந்துபோயுள்ளன.

யாருடைய உணர்வுகளோடும் எப்போதும் விளையாடாதீர்கள். அது என்ன விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதை நம்மால் யூகிக்க முடியாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism