Published:Updated:

`இனி பார்க்கமாட்டேன்..!’- காதலை ஏற்க மறுத்த மாணவியை எரித்துக்கொன்ற கேரள இளைஞர்

காதலை ஏற்க மறுத்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொலை செய்ததோடு, தன் உயிரையும் மாய்த்துள்ளார் கேரள இளைஞர் ஒருவர்.

மிதுன் - தேவிகா
மிதுன் - தேவிகா ( Manorama )

கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே கொலைச் சம்பவங்கள் மிகச் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. அதிலும் காதலை ஏற்க மறுத்த பெண்கள் பொது இடங்களில் எரித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. எர்ணாகுளத்தில் மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இளைஞர் மிதுன்
இளைஞர் மிதுன்
Manorama

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள கக்கனாட் பகுதியைச் சேர்ந்த மிதுன் (20) என்பவரும் தேவிகா (17) என்ற மாணவியும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மிதுன், தேவிகாவைக் காதலிக்கத் தொடங்கியுள்ளார். ஆனால் தேவிகா, மிதுனின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தேவிகாவின் வீட்டுக்குத் தெரியவர, அவர்களும் தேவிகாவின் வயதை காரணம் காட்டி மிதுனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் விடாத மிதுன், அந்தப் பெண்ணுக்கும் அவரது குடும்பத்துக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளார். அவரின் தொல்லை தாங்கமுடியாமல் தேவிகாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தேவிகா
தேவிகா
Manorama

பின்னர், `இனி தேவிகாவைப் பார்க்க மாட்டேன், திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்த மாட்டேன்’ எனக் காவல் நிலையத்தில் உறுதியளித்துள்ளார் அந்த இளைஞர். இதன் பிறகுதான் தேவிகாவைக் கொலை செய்துள்ளார்.

Vikatan

மொத்தக் குடும்பத்தையும் கொல்ல நினைத்த மிதுன்!

நேற்று இரவு 12 மணியளவில் இருசக்கர வாகனத்தில் தேவிகாவின் வீட்டுக்கு வந்துள்ளார் மிதுன். வாசலில் நின்றபடி தேவிகாவைப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால், அவரின் தந்தை விடவில்லை. இதனால் மிதுனுக்கும் தேவிகாவின் தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்துவிட்டு தேவிகா வீட்டைவிட்டு வெளியில் வந்துள்ளார்.

எரிப்பு
எரிப்பு

மிதுன், தேவிகாவைப் பார்த்த அடுத்த நொடியே தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி நெருப்பு வைத்துள்ளார். அப்போது தன் மீதும் தீ பற்றிக் கொள்ளவே, அவரும் தீயில் கருகியுள்ளார். மகளைக் காப்பாற்றச் சென்ற தேவிகாவின் தந்தை மீதும் தீ பற்றியுள்ளது. அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், காவலர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் காயமடைந்த மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே தேவிகாவும், மிதுனும் உயிரிழந்துவிட்டனர். அவரின் தந்தை மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

``நானும் இளைய மகளும் வீட்டு வாசலில் நின்றிருந்தோம். மிதுன் எங்கள் மீதும் பெட்ரோல் ஊற்ற முயற்சி செய்தார். ஆனால், முடியவில்லை. அவர் எங்கள் மொத்தக் குடும்பத்தையும் கொலை செய்யும் நோக்கில்தான் வந்திருந்தார்” என தேவிகாவின் தாய் கூறியுள்ளார்.

தேவிகாவின் வீடு
தேவிகாவின் வீடு
Mathrubhumi

இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, நேற்று மாலை தேவிகாவின் டியூஷன் சென்டருக்குச் சென்ற மிதுன், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பின்னரே இப்படி நடந்துள்ளது என தேவிகாவின் தோழி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Credits : Manorama