Published:Updated:

கேரளா தங்கம் கடத்தல்: `மலப்புரம் கனெக்‌ஷன்; பயணிகள் விமானம்!’ - அதிரவைக்கும் பின்னணி

சந்தீப் - ஸ்வப்னா
சந்தீப் - ஸ்வப்னா

கேரளா தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகிய இருவரும் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கேரளாவை அதிரவைத்த தங்கம் கடத்தல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்டது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ 24 கேரட் சுத்தத் தங்கம் திருவனந்தபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது. சம்பவம் நடந்து 6 நாள்களுக்குப் பின், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கேரள ஐ.டி அலுவலகத்தில் பணிபுரியும் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் பெங்களூரில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

ஸ்வப்னா சுரேஷ்
ஸ்வப்னா சுரேஷ்

ஸ்வப்னா சுரேஷ்

தங்கம் கடத்தல் தொடர்பாக பார்சலைப் பெற வந்த சரீத், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் மற்றும் ஃபசீல் ஃபரீத் என நான்கு பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இதில், ஸ்வப்னா சுரேஷ் துபாயில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றி, பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது. திருவனந்தபுரத்தில் தங்கம் கைப்பற்றப்பட்ட பின்னர், ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவானார். இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

ஸ்வப்னா சுரேஷ் குறித்து விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அவர் தன்னுடன் எப்போதும் 15 அடியாட்களோடு வலம்வருவார் என்றும் அவருக்கு அரசியலிலும் சினிமா வட்டாரங்களில் பல பெரிய புள்ளிகளின் அறிமுகம் உண்டு என்றும் அவரால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கேரள ஊடகங்களிடம் விவரித்திருக்கிறார்.

கேரள தங்கம் கடத்தல் வழக்கு: `காட்டிக்கொடுத்த போன் அழைப்புகள்' -பெங்களூருவில் சிக்கிய ஸ்வப்னா

தங்கம் கடத்தல் மற்றும் தீவிரவாத தொடர்பு பற்றிய முதல் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. பயணிகள் விமானத்தில் நடந்து வந்த கடத்தல், தற்போது கொரோனா லாக்டௌன் காரணமாக சரக்கு விமானத்தில் கடத்தப்பட்டதால், பிடிபட்டதாக என்.ஐ.ஏ முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

திருவனந்தபுரத்தில், கொரானா தொற்றின் காரணமாக கடந்த ஞாயற்றுக்கிழமை முதல் ட்ரிபிள் ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் அனைவரும் பால் வாங்கக்கூட பாஸ் இல்லாமல் செல்ல முடியாத நிலையில், ஸ்வப்னா சுரேஷ் பெங்களூரு சென்றது, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில், கேரளாவின் முக்கிய அரசியல் புள்ளிகளின் தலையீடு இருக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பிஜேபியினர், போலீஸாரின் உதவியுடன்தான் அவர்கள் பெங்களூரு தப்பிச் சென்றனர் எனக் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஸ்வப்னா சுரேஷ்
ஸ்வப்னா சுரேஷ்

இதுகுறித்து கேரளா பிஜேபி தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில்,``திருவனந்தபுரத்தில் மக்களின் அத்தியாவசியப் பொருளான பால் வாங்க சென்றால்கூட பாஸ் வேண்டும். அனைத்து மாவட்ட செக் போஸ்டுகளையும் கடந்து செல்ல இ-பாஸ் கட்டாயம் வேண்டும். இந்தநிலையில் எவ்வாறு இதையெல்லாம் கடந்து அவர்கள் பெங்களூரு சென்றனர். இது ஆளும் கட்சியின் மீது விழுந்துள்ள கறை’’ என்று விமர்சித்திருக்கிறார்.

கங்கிரஸைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவரான ரமேஷ் சென்னிதலா,``இந்த வழக்கு ஒரு வாரத்தை கடந்த நிலையில் ஸ்வப்னா சுரேஷின் மீது எப்.ஐ .ஆர் பதிவுசெய்யப்படவில்லை. தன் வேலைக்காக போலி சான்றிதழ், சமர்ப்பித்தது முதல் பல ஏமாற்றுவேலைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார். ஸ்வப்னா சுரேஷ் கேரளாவில் இருந்து தப்பி சென்றதே மர்மமாக உள்ளது’’ என்று கூறினார்.

கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, சந்தீப் ஆகியோர் சாலைமார்க்கமாக கொச்சி அழைத்து வரப்பட்டனர். அவர்கள் வரும் வழியில் பல இடங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்வப்னா அழைத்துவரப்பட்ட வாகனம், வடக்கன்சேரி என்ற இடத்தில் பஞ்சரானது. பின்னர், அவர் வேறு வாகனத்துக்கு மாற்றப்பட்டு கொச்சி கொண்டுவரப்பட்டார்.

சந்தீப் - ஸ்வப்னா
சந்தீப் - ஸ்வப்னா

கொச்சி என்.ஐ.ஏ அலுவலக வாயிலில் பா.ஜ.க இளைஞரணியான யுவமோர்ச்சா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கேரள ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிரான கோஷங்களை அவர்கள் எழுப்பினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. என்.ஐ.ஏ அலுவலகத்தில் விசாரணைக்குக் கொண்டுவரும் வழியில், அவர்கள் இருவருக்கும் ஆலுவா அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனையும் மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

கேரளா: `தங்கம் கடத்தல் வழக்கில் அதிகாரிகளுக்கு வந்த அழைப்பு?’ -மாற்றப்பட்ட முதல்வரின் செயலர்

பின்னர் அவர்கள் கொச்சி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அணில்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். தங்கம் கடத்தல் மூலம் கிடைக்கும் பணம் தீவிரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறரீதியில் விசாரணை வேகமெடுத்து வருகிறது. இந்தநிலையில், குற்றம்சாட்டப்பட்ட நால்வர் மீது உபா, தீவிரவாதத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி அணில்குமார் உத்தரவிட்டார். அவர்கள் இருவரும் அங்கமாலியில் உள்ள கருகுட்டி கொரோனா தனிமைப்படுத்தல் மையத்தில் அடைக்கப்பட இருக்கிறார்கள். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் நாளை வெளிவந்தபின்னர், மீண்டும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. ஸ்வப்னா, சந்தீப் ஆகிய இருவரையும் கஸ்டடியில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் நாளை மனுத்தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பார்சலில் கடத்தப்பட்ட தங்கம்
பார்சலில் கடத்தப்பட்ட தங்கம்

மூளையாகச் செயல்பட்டவர் கைது!

இந்த விவகாரத்தில் மலப்புரத்தைச் சேர்ந்த ஒரு நபரை சுங்கத் துறை அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. துபாயில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தங்கம் கடத்தப்படுவதற்கு மலப்புரத்தைச் சேர்ந்த இந்த நபரே மூளையாகச் செயல்பட்டுள்ளார் என்கிறார்கள். தங்கம் கடத்தல் வழக்கில் இவரது கைது முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மிக முக்கிய நபரான அவர் குறித்த தகவல்களை சுங்கத்துறையினர் வெளியிடாமல், ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரித்து வருவதாகக் கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு