அரசியல்
அலசல்
Published:Updated:

பிறப்புறுப்பில் கத்தியால் குத்தி, ரத்தத்தை வீட்டில் தெளித்து இரட்டை நரபலி!

நரபலி
பிரீமியம் ஸ்டோரி
News
நரபலி

- குலைநடுங்கவைக்கும் கேரளக் கொடூரம்

கல்வி அறிவும், கம்யூனிசமும் வளர்ந்த மாநிலமாகக் கருதப்படும் கேரளாவில், மூட நம்பிக்கையால் இரட்டை நரபலிக் கொலைகள் நடந்திருப்பது நாட்டையே உலுக்கியிருக்கிறது. நரபலி கொடுக்கப்பட்டவர்களில் ஒருவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் சோகம்.

ஃபேஸ்புக்கால் வந்த வினை!

பத்தனம்திட்டா மாவட்டம், இலந்தூரைச் சேர்ந்த பாரம்பர்ய வைத்தியர் பகவல் சிங். தனது வீட்டுக்கு அருகிலேயே வைத்தியசாலையுடன், ஆயூர்வேத மசாஜ் சென்டரும் நடத்திவந்தார். இவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில், ‘ஸ்ரீதேவி’ என்ற ஃபேஸ்புக் அக்கவுன்ட்டிலிருந்து தொடர்ச்சியாக மெசேஜ் வந்தவண்ணம் இருந்திருக்கிறது. இதையடுத்து ‘ஸ்ரீதேவி’யுடன் சாட் செய்த பகவல்சிங், ‘தனக்குக் கடன் இருப்பதாக’ தெரிவித்திருக்கிறார். உடனே எதிர்முனையில், ‘ஐஸ்வர்யம் நிலைக்கவும், செல்வம் பெருகவும் சிறப்பு மாந்திரீக பூஜைகள் செய்ய, தனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார். அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்’ எனக் கூறி எர்ணாகுளம் பெரும்பாவூரைச் சேர்ந்த முஹம்மது ஷாஃபி என்ற ஷிகாப்புடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது அந்த ஃபேஸ்புக் ஐ.டி. பகவல் சிங், அவர் மனைவி லைலா ஆகியோரைச் சந்தித்த முஹம்மது ஷாஃபி, ‘ஐஸ்வர்யம் பெருக நரபலி பூஜைதான் ஒரே வழி’ எனக் கூறியிருக்கிறார். அதன் பிறகு நடந்த சம்பவங்கள்தான் கொடூரத்தின் உச்சம்!

முஹம்மது ஷாஃபி
முஹம்மது ஷாஃபி
பிறப்புறுப்பில் கத்தியால் குத்தி, ரத்தத்தை வீட்டில் தெளித்து இரட்டை நரபலி!

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, “பெரும்பாவூரைச் சேர்ந்த முஹம்மது ஷாஃபிதான் ‘ஸ்ரீதேவி’ என்ற பெயரில் போலி ஃபேஸ்புக் அக்கவுன்ட் தொடங்கி பகவல் சிங்கைத் தொடர்புகொண்டிருக்கிறார். இதை பகவல் சிங் அறியவில்லை. ‘நரபலிக்கான பெண்ணை நானே அழைத்துவருகிறேன்’ என பகவல் சிங்கிடம் முன்பணம் வாங்கிக்கொண்டு சென்ற முஹம்மது ஷாஃபி, காலடி பகுதியில் லாட்டரி விற்பனை செய்துவந்த ரோஸ்லி (49) என்ற பெண்ணிடம் ‘ஆபாச சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. பத்து லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்’ என ஆசைகாட்டி, தனது வலையில் வீழ்த்தியிருக்கிறார்.

கட்டிப்போட்டு நரபலி!

கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி பகவல் சிங்கின் வீட்டில், சினிமா ஷூட்டிங் காட்சிக்கான ஒத்திகை எனக் கூறி ரோஸ்லியைக் கட்டிலில் படுக்கவைத்து, கை கால்களைக் கட்டிப்போட்டு பூஜை செய்துள்ளனர். நள்ளிரவு நேரத்தில் முஹம்மது ஷாஃபி சில மந்திரங்கள் சொல்ல, பகவல் சிங்கின் மனைவி லைலா கத்தியால் ரோஸ்லியின் கழுத்தை அறுத்திருக்கிறார். முஹம்மது ஷாஃபி, ரோஸ்லியின் பிறப்புறுப்பில் கத்தியால் குத்தி, ரத்தத்தைப் பாத்திரத்தில் சேகரித்திருக்கிறார். பின்னர் அந்த ரத்தத்தை வீடு முழுவதும் தெளித்துள்ளனர். ரோஸ்லியின் உடலை 22 துண்டுகளாக வெட்டி முஹம்மது ஷாஃபி சில கிரியைகளைக் கழித்திருக்கிறார். எல்லாம் முடிந்த பிறகு ரோஸ்லியின் உடல் துண்டுகளை மூட்டையாகக் கட்டி, வீட்டுக்கு அருகில் குழிதோண்டி, உப்புப் போட்டு புதைத்துள்ளனர். புதைக்கப்பட்ட இடத்தில் மஞ்சள்செடியை நட்டுவைத்திருக்கின்றனர்.

லைலா, பகவல் சிங்
லைலா, பகவல் சிங்

இதற்கிடையே, பூஜையின் ஒரு பகுதி எனக் கூறி பகவல் சிங்கின் முன்னிலையில் அவரின் மனைவி லைலாவுடன் உடலுறவு கொண்டிருக்கிறார் முஹம்மது ஷாஃபி. இதை ஒரு பிரார்த்தனையாக கருதி பக்தியோடு பார்த்துக்கொண்டு நின்றுள்ளார் பகவல்சிங். மேலும் நரபலி கொடுத்த வர்களின் உடலில் சில பாகங்கள் காணவில்லை. இதுபற்றி போலீஸ் கேட்டபோதுதான், உடலை சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது.

அதாவது ‘நரபலி கொடுப்பது எப்படி?’ என்ற புத்தகத்தை லைலா விடம் படிக்கக் கொடுத்திருக்கிறார். அதில், ‘நரபலி கொடுத்த பிறகு மனித மாமிசத்தைப் பச்சையாகச் சாப்பிட வேண்டும்’ என இருந்திருக் கிறது. அதன்படி, நரபலி கொடுக்கப்பட்ட ரோஸ்லியின் மாமிசம்தான் பிரசாதம் எனக் கூறி பகவல் சிங் - லைலா தம்பதியிடம் சாப்பிடச் சொல்லியிருக்கிறார் முஹம்மது ஷாஃபி. ஆனால், லைலா பச்சையாகச் சாப்பிட மறுத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து மனித மாமிசத்தை மூவரும் சமைத்துச் சாப்பிட்டுள்ளனர். பின்னர் பூஜைக்காகவும், பெண்ணை அழைத்து வந்ததற்கும் சேர்த்து இரண்டரை லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு எர்ணாகுளத்துக்குச் சென்றுவிட்டார் முஹம்மது ஷாஃபி.

பிறப்புறுப்பில் கத்தியால் குத்தி, ரத்தத்தை வீட்டில் தெளித்து இரட்டை நரபலி!

இரண்டாவது நரபலி!

ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் பூஜைக்கான பலன் கிடைக்கவில்லையே என முஹம்மது ஷாஃபியிடம் கேட்டிருக்கிறார் பகவல்சிங். ‘உங்கள் வீட்டின் மீது ஏற்கெனவே பல சாபங்கள் இருந்ததால்தான் பூஜை பலிக்கவில்லை. ஏற்கெனவே செய்த பூஜையால் அந்த சாபங்கள் முடிந்துவிட்டன. மற்றொரு நரபலி பூஜை செய்தால் பலன் கிடைக்கும்’ என முஹம்மது ஷாஃபி கூறியிருக்கிறார். அதற்கும் பகவல் சிங் சம்மதித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்தே எர்ணாகுளத்தில் லாட்டரி விற்பனை செய்துவந்த தருமபுரியைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணை, கடந்த செப்டம்பர் மாதம், 26-ம் தேதி பகவல் சிங் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் முஹம்மது ஷாஃபி. வழியிலேயே பத்மா பிரச்னை செய்ய, நைலான் கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கி மயக்க மடையச் செய்திருக்கிறார். பின்னர் பகவல் சிங் வீட்டின் மேற்குப் பகுதியில் பத்மாவைக் கட்டிலில் கிடத்தி, அவரது பிறப்புறுப்பில் கத்தியால் குத்தி ரத்தம் எடுத்து, ஏற்கெனவே செய்தது போன்று மாந்திரீகம் செய்திருக்கிறார் முஹம்மது ஷாஃபி. பின்னர் பத்மாவின் உடலை 56 துண்டுகளாக்கி வீட்டு வளாகத்திலேயே புதைத்துள்ளனர்.

பிறப்புறுப்பில் கத்தியால் குத்தி, ரத்தத்தை வீட்டில் தெளித்து இரட்டை நரபலி!
பிறப்புறுப்பில் கத்தியால் குத்தி, ரத்தத்தை வீட்டில் தெளித்து இரட்டை நரபலி!

சிக்கியது எப்படி?

முஹம்மது ஷாஃபியைக் கைதுசெய்தது குறித்துப் பேசுகிற கேரள போலீஸ், ‘‘ரோஸ்லி-யைக் காணவில்லை என அவரின் மகள் மஞ்சு கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதியே புகார் கொடுத்திருக் கிறார். தருமபுரி பத்மா காணாமல் போனது குறித்து, அவரது சகோதரி பழனியம்மாள் கடந்த 27-ம் தேதி கடவந்தறா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். பத்மாவின் மொபைல்போன் லொகேஷனை ஆய்வுசெய்தபோது கடைசியாக திருவல்லாவில் அது சுவிட்ச்ஆஃப் செய்யப் பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அவரது எண் ணுக்கு முஹம்மது ஷாஃபி கடைசியாக அழைத் திருந்ததும் உறுதியானது. இதையடுத்தே முஹம் மது ஷாஃபி போலீஸ் வளையத்துக்குள் வந்தார்.

ரோஸ்லி, பத்மா ஆகியோரது உடல் பாகங்கள் கடந்த 11-ம் தேதி தோண்டியெடுக்கப்பட்டன. அவர்களது உடலில் தலைப் பகுதி மட்டுமே அழுகிய நிலையில் முழுமையாக கிடைத்திருக்கிறது. மற்ற எல்லா பாகங்களும் துண்டுகளாகச் சிதைந்த நிலையிலேயே கிடைத்துள்ளன.

முஹம்மது ஷாஃபி மீது கஞ்சா விற்பனை செய்ததாகச் சிறு வழக்குகளும், கடந்த 2020-ல் 75 வயதுள்ள பெண்ணைக் கொடூரமாக பலாத்காரம் செய்த வழக்கும் இருக்கின்றன. நரபலியின்போது ரத்தத்தைக்கண்டு ஆனந்தமாகியுள்ள முஹம்மது ஷாஃபி ஒரு சாடிஸ்ட். லாட்டரி விற்கும் வேறு சில பெண்களையும் பணம் தருவதாகக் கூறி திருவல்லாவுக்கு அழைத்துச் செல்ல முயன்றிருக் கிறார் முஹம்மது ஷாஃபி. தற்போது வெளியாகியிருக்கும் நரபலிச் செய்தியைக் கண்டு அவர்களெல்லாம் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்’’ என்கின்றனர் போலீஸார்.

பிறப்புறுப்பில் கத்தியால் குத்தி, ரத்தத்தை வீட்டில் தெளித்து இரட்டை நரபலி!

நரபலி கொடுக்கப்பட்ட பத்மா... தருமபுரி பெண்ணின் பின்னணி!

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட பத்மா, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள எர்றப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். திடுக்கிடவைக்கும் ‘நரபலி’ செய்தியிலிருந்து மீளாத பத்மாவின் உறவினர்கள் நடுக்கத்தோடு நம்மிடம் பேசியபோது, ‘‘எங்களுடைய எர்றப்பட்டி கிராமத்திலிருந்து மட்டும் வீட்டுக்கு ஒரு ஆள், கேரளாவில் கூலி வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். பத்மாவும், அவரின் கணவர் ரங்கனும் கேரளாவுக்குப் போய் 15 வருடங்களுக்கு மேல் ஆகின்றன. அங்கு கட்டட வேலை, தோட்ட வேலை, வீட்டு வேலை என என்னென்ன வேலை கிடைக்கின்றனவோ, அதையெல்லாம் செய்து வீட்டுக்குப் பணம் அனுப்பிவந்தனர். இவர்களுக்கு சேட்டு, செல்வராஜ் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாமல் போனதால் பத்மாவின் கணவர் ரங்கன் இரண்டு மாதங்களுக்கு முன்பு சொந்தக் கிராமத்துக்கே வந்து மகன்களோடு தங்கிவிட்டார். பத்மா மட்டும் கேரளாவிலேயே தங்கியிருந்து லாட்டரிச்சீட்டு விற்பனையோடு கூலி வேலையும் செய்துவந்தார். கூலி வேலைக்குச் செல்லும் எங்கள் ஆட்களை கார்களிலும், டூ வீலர்களிலும்தான் அங்கிருக்கும் சூப்பர்வைசர்கள் அழைத்துச் செல்வார்கள். ஏதோ வேலை இருக்கிறது என்றுதான் பத்மாவையும் படுபாவிகள் ஏமாற்றி அழைத்துச் சென்று கொடூரமாக நரபலி கொடுத்திருக்கிறார்கள்’’ என்றனர் விலகாத அதிர்ச்சியோடு!