Published:Updated:

கேரளா: இரட்டை நரபலி; 22 துண்டுகளாக்கி பூஜை; மண்ணில் புதைத்து மஞ்சள் நட்டனர் - அதிர்ச்சித் தகவல்கள்!

நரபலி வழக்கில் கைதான லைலா - பகவல் சிங்

முதல் பூஜையால் பலன் கிடைக்காததால், மற்றொரு நரபலி கொடுக்க வேண்டும் எனக் கூறி கடந்த மாதம் மீண்டும் ஒரு நரபலி கொடுக்க முடிவு செய்தனர்

கேரளா: இரட்டை நரபலி; 22 துண்டுகளாக்கி பூஜை; மண்ணில் புதைத்து மஞ்சள் நட்டனர் - அதிர்ச்சித் தகவல்கள்!

முதல் பூஜையால் பலன் கிடைக்காததால், மற்றொரு நரபலி கொடுக்க வேண்டும் எனக் கூறி கடந்த மாதம் மீண்டும் ஒரு நரபலி கொடுக்க முடிவு செய்தனர்

Published:Updated:
நரபலி வழக்கில் கைதான லைலா - பகவல் சிங்

கல்வியறிவில் முதலிடத்திலுள்ள கேரள மாநிலத்தில் மூட நம்பிக்கையால் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. பத்தனம்திட்டா மாவட்டம், இலந்தூரில் ஐஸ்வர்யமும் செல்வமும் பெருக பூஜை செய்வதாக போலி மந்திரவாதியான முஹம்மது ஷாஃபி என்ற ஷிகாப் வழிகாட்டுதல்படி பாரம்பர்ய வைத்தியர் பகவல் சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் நரபலியில் ஈடுபட்டுள்ளனர். நரபலி கொடுத்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

எர்ணகுளம் மாவட்டம், பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த ஷிகாப் என்ற முஹம்மது ஷாஃபி போலி ஃபேஸ்புக் அக்கவுன்ட் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். அந்த அக்கவுன்ட் மூலம் பத்தனம்திட்டா மாவட்டம், இலந்தூரிலுள்ள வைத்தியர் பகவல் சிங்கைத் தொடர்புகொண்டார். அப்போது ஐஸ்வர்யம் பெருகவும், செல்வம் செழிக்கவும் வழிகாட்டப்படும் எனத் தகவல் தெரிவித்திருக்கிறார். பின்னர் அதற்கு ஒரு பூஜை செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார். பகவல் சிங்கின் வீட்டுக்குச் சென்று அந்த இடங்களைப் பார்வையிட்டுவிட்டு, ஒரு பெண்ணை நரபலி கொடுத்து பூஜை செய்ய வேண்டும் எனக் கூறியதுடன், அந்த பெண்ணை நானே அழைத்து வருகிறேன் எனவும் முஹம்மது ஷாஃபி கூறியிருக்கிறார்.

முஹம்மது ஷாஃபி
முஹம்மது ஷாஃபி

முஹம்மது ஷாஃபி எர்ணாகுளத்துக்குச் சென்று காலடிப் பகுதியில் தனியாக வாடகைக்கு வசித்துவந்த, கடவந்தறா பகுதியில் லாட்டரி விற்பனை செய்துவந்த ரோஸ்லி (59)-க்கு பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுப்பதாகக் கூறி திருவல்லாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் அங்கிருந்து பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்று, இரவு நேரத்தில் நரபலி பூஜையை செய்துள்ளனர். கட்டிலில் கிடத்தி கைகளையும், கால்களையும் கட்டிப்போட்டு முதலில் கழுத்தை அறுத்துள்ளனர். பின்னர் உடலை சுமார் 22 துண்டுகளாக வெட்டியுள்ளனர். உடலை வைத்து சில பூஜைகள் செய்திருக்கின்றனர். பூஜை முடிந்த பிறகு வீட்டுக்கு வெளியே துணி துவைக்கும் கல் அமைந்திருக்கும் பகுதியில் குழிதோண்டி உடலைப் புதைத்து, அதன் மீது மஞ்சள் நட்டு வைத்திருக்கின்றனர்.

முதல் பூஜையால் பலன் கிடைக்காததால், மற்றொரு நரபலி கொடுக்க வேண்டும் எனக் கூறி கடந்த மாதம் மீண்டும் ஒரு நரபலி கொடுக்க முடிவு செய்தனர். கடவந்தறா பகுதியில் லாட்டரி விற்பனை செய்துவந்த தருமபுரியைச் சேர்ந்த பத்மா (52) என்ற பெண்ணையும் பணம் கொடுப்பதாகக் கூறி திருவல்லாவுக்கு அழைத்துச் சென்று ரோஸ்லியை நரபலி கொடுத்தது போன்றே நரபலி கொடுத்துள்ளனர். அவரின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி வீட்டுக்கு வெளிப்பகுதியில் புதைத்துள்ளனர்.

உடல்கள் தோண்டி எடுப்பு
உடல்கள் தோண்டி எடுப்பு

ரோஸ்லியைக் காணவில்லை என கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி அவரின் மகள் மஞ்சு புகார் அளித்தார். அந்த விசாரணையில் பெரிய அளவில் துப்புத் துலங்கவில்லை. பத்மாவைக் காணவில்லை என அவரின் மகன் செல்வராஜ் கடந்த மாதம் 27-ம் தேதி புகார் அளித்தார். அவரின் செல்போனை ஆய்வு செய்தபோது அது திருவல்லா பகுதியில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. பின்னர் சிசிவிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்து பத்மாவைக் கடத்திய முஹம்மது ஷாஃபி முதலில் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் விசாரித்ததில் பெண்கள் கொடூரமாக நரபலி கொடுக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இதையடுத்து பாரம்பர்ய வைத்தியர் பகவல் சிங், அவரின் மனைவி லைலா ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர். ரோஸ்லி, பத்மா ஆகியோரது உடல் துண்டுகள் தேடி எடுக்கப்பட்டன. அவர்களது உடலை அடையாளம் காணும்விதமாக டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்வதற்காகக் கோட்டயம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் அவர்களது உடல்கள் கொண்டு செல்லப்பட்டன. இந்த வழக்கின் தொடர் விசாரணையில் இன்னும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.