Published:Updated:

போதை தெளிந்த பிறகு மனம் மாறிய கேரளப் பெண் - சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கிய கேரளாவைச் சேர்ந்த பெண் கொடுத்த புகாரால், தேனாம்பேட்டை காவல் நிலையம் 3 மணி நேரம் பரபரப்புக்குள்ளானது.

பாதிக்கப்பட்ட பெண் (மாதிரி படம்)
பாதிக்கப்பட்ட பெண் (மாதிரி படம்)

சென்னை ஆழ்வார்பேட்டை, டி.டி.கே.சாலையில் நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில், கடந்த சில தினங்களுக்கு முன் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் அறை எடுத்துத் தங்கியிருந்தார். சம்பவத்தன்று, ஹோட்டலின் வரவேற்பாளருக்கு போன் செய்த அவர், `அறையைச் சுத்தம்செய்ய ஆள் அனுப்புங்கள்' என்று கூறினார். உடனடியாக அங்கு சென்ற ஆண் ஊழியர் ஒருவர் அறையைச் சுத்தம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட பெண்

அப்போது, இளம்பெண் மது அருந்திக்கொண்டிருந்துள்ளார். போதையில் அவர், ஜன்னலை மூடும்படி துப்பரவுப் பணியில் ஈடுபட்ட ஹோட்டல் ஊழியரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. அதன்படி அவரும் ஜன்னல் கதவுகளை மூடியுள்ளார். அதன்பிறகு கதவை மூடும்படி தெரிவித்துள்ளார். அதையும் அந்த ஊழியர் செய்துள்ளார். இதையடுத்து, அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு மற்ற ஹோட்டல் ஊழியர்கள் அங்கு வந்தனர். கதவைத் திறந்தபோது, துப்பரவுப் பணியில் ஈடுபட்டவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக அந்தப் பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதையடுத்து, ஹோட்டல் ஊழியர்கள் தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், துப்பரவுப் பணியில் ஈடுபட்ட ஊழியரிடமும் இளம்பெண்ணிடமும் விசாரித்தனர். பிறகு, இளம்பெண் கொடுத்த வாய்மொழிப் புகாரின்பேரில் ஹோட்டல் ஊழியர் காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அவர், ஹோட்டல் அறையில் நடந்த விவரங்களைத் தெரிவித்தார். ஆனால் இளம்பெண்ணோ, ஊழியர்மீது குற்றம் சுமத்தினார்.

`பணத்துக்காக மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தார்!' - சேலம் ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் மீது பெண் புகார்

இதனால் ஹோட்டல் ஊழியர்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க போலீஸார் முடிவுசெய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இந்தச் சமயத்தில் அந்த இளம்பெண், காவல் நிலையத்துக்கு வந்தார். போலீஸ் உயரதிகாரிகளைச் சந்தித்த அவர், ஹோட்டல் ஊழியரை விட்டுவிடுங்கள் என்று கூறினார். இதனால் போலீஸார் ஊழியரை எச்சரித்து விடுவித்தனர்.

அறையை சுத்தம் செய்ய ஆள் அனுப்புங்கள்
கேரளப் பெண்

இந்தச் சம்பவத்தை விசாரித்த போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம் ``சம்பந்தப்பட்ட கேரளப் பெண் கொடுத்த புகாரின்பேரில் துப்பரவுப் பணியில் ஈடுபட்ட திருச்சியைச் சேர்ந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினோம். சம்பவம் நடந்தபோது அந்தப் பெண் போதையில் இருந்துள்ளார். போதை தெளிந்த பிறகு, அவரே நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனால் அந்த வாலிபரை விட்டுவிட்டோம். போதையில் இளம்பெண் கொடுத்த புகாரால் 3 மணி நேரம் விசாரணை என்ற பெயரில் தேனாம்பேட்டை போலீஸாரின் நேரம் விரயமாகிவிட்டது. புகார் கொடுத்த கேரளாவைச் சேர்ந்த பெண், மார்க்கெட்டிங் துறையில் அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார். வேலை விஷயமாக சென்னை வந்த இடத்தில்தான் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது" என்றார்.

போதை தெளிந்த பிறகு மனம் மாறிய கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணால் தேனாம்பேட்டை காவல் நிலையம் 3 மணி நேரம் பரபரப்புக்குள்ளானது.