Published:Updated:

காதலி கொடுத்த ஜூஸ் குடித்து இறந்த இளைஞர்? - மர்ம மரணம் குறித்து விசாரிக்கும் போலீஸ்

இறந்த ஷாரோன் ராஜ்

மருந்தின் கசப்பைப் போக்க காதலி ஜூஸ் கொடுத்திருக்கிறார். அதைக் குடித்த பிறகு உடல்நிலை சரியில்லாமல்போனதாக ஷாரோன் ராஜ் தெரிவித்திருக்கிறார்.

காதலி கொடுத்த ஜூஸ் குடித்து இறந்த இளைஞர்? - மர்ம மரணம் குறித்து விசாரிக்கும் போலீஸ்

மருந்தின் கசப்பைப் போக்க காதலி ஜூஸ் கொடுத்திருக்கிறார். அதைக் குடித்த பிறகு உடல்நிலை சரியில்லாமல்போனதாக ஷாரோன் ராஜ் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
இறந்த ஷாரோன் ராஜ்

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், பாறசாலையைச் சேர்ந்த ஜெயராஜன் என்பவரின் மகன் ஷாரோன்ராஜ் (23). பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்துவந்தார். ஷாரோன்ராஜ் களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறைப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்திருக்கிறார். இதற்கிடையே அந்த இளம்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், வீட்டுக்குத் தெரியாமல் ஷாரோன்ராஜை அந்த இளம்பெண் காதலித்துவந்திருக்கிறார். ஷாரோன்ராஜுக்குக் கல்லூரி சம்பந்தப்பட்ட ரெக்கார்ட் நோட்டுகள் எழுதிக் கொடுப்பது போன்ற உதவிகளை இளம்பெண் செய்துவந்திருக்கிறார். இரு நோட்டுகள் எழுதி முடித்துவைத்திருப்பதாக கடந்த 14-ம் தேதி அந்த இளம்பெண் ஷாரோன்ராஜை தனது வீட்டுக்கு அழைத்திருக்கிறார். ஷாரோன்ராஜ் தன் நண்பரின் பைக்கில் காதலியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். நண்பர் வெளியே பைக்கில் காத்திருந்திருக்கிறார். ஷாரோன்ராஜ் அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் சென்றிருக்கிறார். அப்போது அவரின் பெற்றோர் வீட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வந்த ஷாரோன்ராஜ் வாந்தி எடுத்திருக்கிறார்.

பாறசாலை காவல் நிலையம்
பாறசாலை காவல் நிலையம்

பைக்கில் இருந்த அவரின் நண்பர், `ஏன் வாந்தி எடுக்கிறாய்?’ எனக் கேட்டதற்கு, `ஜூஸ் குடித்தது ஒத்துக்கொள்ளவில்லை’ எனக் கூறியிருக்கிறார் ஷாரோன்ராஜ். இந்த நிலையில் வீட்டுக்குச் சென்ற பிறகு அவரின் உடல்நிலை மோசமானது. அதைத் தொடர்ந்து பாறசாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு அவரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த ஷாரோன்ராஜின் உடல் உறுப்புகள் செயழிழந்துள்ளன. அவர் ஆசிட் போன்ற விஷத்தைக் குடித்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஷாரோன்ராஜின் தந்தை போலீஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து மாஜிஸ்ட்ரேட் மருத்துவமனையில் சென்று வாக்குமூலம் பெற்றிருக்கிறார். அந்த இளம்பெண் கசப்பான மருந்து ஒன்றைக் குடித்துவருவதாகவும், அது எப்படி இருக்கும் என வாங்கிக் குடித்துப் பார்த்ததாக ஷாரோன்ராஜ் கூறியிருக்கிறார். கசப்பைப் போக்க அந்தப் பெண் ஜூஸ் கொடுத்திருக்கிறார். அதைக் குடித்த பிறகு உடல்நிலை சரியில்லாமல்போனதாக ஷாரோன் ராஜ் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி ஷாரோன்ராஜ் இறந்துவிட்டார்.

ஷாரோன்ராஜ்
ஷாரோன்ராஜ்

எனவே, அந்த இளம்பெண் கொடுத்த ஜூஸில் ஏதாவது கலந்திருக்கலாம் எனப் பெற்றோர் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளனர். ஆனால், தான் குடித்துவந்த மருந்தைத்தான் ஷாரோன் ராஜுக்குக் கொடுத்ததாகவும், ஜூஸில் வேறு எதுவும் கலக்கவில்லை எனவும் இளம்பெண் போலீஸ் விசாரணையில் தெரிவித்திருக்கிறார். இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.