Published:Updated:

கேரளா: மாடல்கள் விபத்து வழக்கு; ஹார்டு டிஸ்க்கைத் தேடும் பணியில் போலீஸார் மும்முரம்!

மாடல்கள் இறந்த வழக்கில் இடக்கொச்சி கண்ணங்காட்டு பாலத்துக்கு அருகிலுள்ள காயலில் ஹார்டு டிஸ்க் வீசி எறியப்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருக்கிறது போலீஸ்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம், ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஆன்சி கம்பீர் (25). இவர் 2019-ம் ஆண்டு கேரள மாநில அழகிப் போட்டியில் மிஸ் கேரளாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அந்தப் போட்டியில், திருச்சூரைச் சேர்ந்த அஞ்சனா ஷாஜன் (24) இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மாடல்களான இவர்கள் விளம்பரப் படங்களில் நடித்துவந்தனர். அந்த வகையில், கடந்த மாதம் விளம்பர ஷூட் ஒன்றில் நடிப்பதற்காக இருவரும் கொச்சிக்குச் சென்றிருக்கிறார்கள். அப்போது, இருவரும் அக்டோபர் 31-ம் தேதி இரவு கொச்சியிலுள்ள `நம்பர் 18' ஹோட்டலில் டி.ஜே பார்ட்டியில் கலந்துகொண்டனர். பார்ட்டி நள்ளிரவு வரை நடந்தது. இதற்கிடையில் ஆன்சி கம்பீர், அஞ்சனா சாஜன், இவர்களின் நண்பர்களான முகமது ஆசிக், அப்துல் ரகுமான் ஆகியோர் ஹோட்டலிலிருந்து திடீரென வெளியேறினர்.

விபத்தில் நொறுங்கிய கார்
விபத்தில் நொறுங்கிய கார்

காரில் ஏறியவர்கள் எர்ணாகுளம் பைபாஸ் சாலையில் வேகமாகப் பயணித்தனர். அப்துல் ரஹ்மான் காரை ஓட்டிச் சென்றார். கார் பாலாரிவட்டத்திலிருந்து இடப்பள்ளி நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, நவம்பர் மாதம் 1-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆன்சி கம்பீர், அஞ்சனா ஷாஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட முகமது ஆஷிக், சிகிச்சை பலனின்றி கடந்த 7-ம் தேதி இறந்தார். அப்துல் ரஹ்மான் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலையில் முன்னேற்றமடைந்த அப்துல் ரஹ்மானிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ஒரு பைக் மீது மோதாமல் இருப்பதற்காகத் திருப்பியபோது எதிர்பாராதவிதமாக கார் மரத்தின் மீது மோதியதாகத் தெரிவித்தார். மேலும் தங்கள் காரை ஆடி கார் ஒன்று பின்தொடர்ந்து வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். இந்த நிலையில், போதையில் கார் ஓட்டியதாக அப்துல் ரஹ்மான் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர்.

கேரள மாடல்கள் அஞ்சனா ஷாஜன், ஆன்சி கம்பீர்
கேரள மாடல்கள் அஞ்சனா ஷாஜன், ஆன்சி கம்பீர்

ஆடி கார் குறித்து விசாரணை நடத்தியபோது காரை ஓட்டியது ஷைஜூ எனத் தெரியவந்தது. மேலும், அவர் மாடல்கள் பயணித்த கார் விபத்துக்குள்ளானதும், ஹோட்டல் உரிமையாளர் ராய் என்பவருக்கு போன் செய்து பேசியது தெரியவந்தது. அதேபோல, ஹோட்டலில் பாட்டி நடந்த ஹாலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவிலிருந்த டி.வி.ஆர் மாயமானதும் தெரியவந்தது. ஆதாரத்தை அழித்ததாக ஹோட்டல் உரிமையாளர் ராய், ஐந்து ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் அனைவரும் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த நிலையில், போலீஸார் ஹோட்டலில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவான ஹார்டு டிஸ்கை தீவிரமாகத் தேடிவருகின்றனர். இடக்கொச்சி கண்ணங்காட்டு பாலத்துக்கு அருகிலுள்ள காயலில் ஹார்டு டிஸ்க் வீசி எறியப்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருக்கின்றனர். ஹார்டு டிஸ்க் கிடைக்கப்பெற்றால் ஹோட்டலில் என்ன நடந்தது என்ற கேள்விக்கு விடை கிடைக்கும். இதற்கிடையே, மகளின் மரணத்தில் இருக்கும் மர்மம் குறித்து விசாரிக்க வேண்டும் என ஆன்சி கம்பீரின் தந்தை கம்பீர், பாலாரிவட்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

கேரள மாடல்கள் விபத்து மரணத்தில் திருப்பம்; சிசிடிவி காட்சிகளை மீட்கும் முயற்சியில் போலீஸ்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு