ஐஸ்க்ரீமில் எலிமருந்து; தாயின் தற்கொலை முயற்சியில் மகனும், சகோதரியும் உயிரிழப்பு - நடந்தது என்ன?

ஐஸ்க்ரீமில் எலிமருந்து கலந்து தற்கொலைக்கு முயன்ற கேரளப் பெண்ணால் பரிதாபமாகப் பிரிந்த இரு உயிர்கள், என்ன நடந்தது?
கேரள மாநிலம், காசர்கோட் மாவட்டத்திலுள்ள கான்கன்காட் (Kanhangad) பகுதியைச் சேர்ந்தவர் வர்ஷா. இவர் கடந்த பிப்ரவரி 11-ம் தேதி அன்று தற்கொலை செய்துகொள்ளும் முடிவோடு, ஐஸ்க்ரீமில் எலிமருந்தைக் கலந்திருக்கிறார். அதில் சிறிதளவு ஐஸ்க்ரீமையும் சாப்பிட்டிருக்கிறார். மயக்கம் வருவதுபோல் இருந்ததால், மீதமிருந்த ஐஸ்க்ரீமை டேபிள்மீது வைத்துவிட்டு தன் அறைக்குச் சென்று படுத்திருக்கிறார். விஷம் கலந்திருப்பது தெரியாமல், மீதமிருந்த ஐஸ்க்ரீமை வர்ஷாவின் மகனும் தங்கையும் எடுத்துச் சாப்பிட்டிருக்கின்றனர். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து, உணவகம் ஒன்றில் பிரியாணி ஆர்டர் செய்து இருவரும் சாப்பிட்டிருக்கின்றனர்.

அன்றைய நாள் இரவில் வர்ஷாவின் ஐந்து வயது மகனுக்குக் கடுமையான வாந்தியும் உடல் சோர்வும் ஏற்பட்டிருக்கின்றன. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து வர்ஷாவின் தங்கை த்ரிஷ்யாவுக்கும் (19) உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஒருவாரகால சிகிச்சைக்குப் பிறகு, நேற்று (பிப். 24) த்ரிஷ்யாவும் உயிரிழந்துவிட்டார்.
பிப்ரவரி 17-ம் தேதி இது குறித்து காவல்துறையிடம் வர்ஷாவின் குடும்பத்தினர் புகார் அளித்திருக்கின்றனர். வர்ஷாவின் மகனும் த்ரிஷ்யாவும் பிரியாணி சாப்பிட்டதால்தான் உடல்நலக் கோளாறு ஏற்பட்டது என்று வர்ஷாவின் குடும்பத்தினர் முதலில் நினைத்திருக்கின்றனர். எலிமருந்து கலந்த ஐஸ்க்ரீமை உட்கொண்ட பிறகும் தனக்கு எதுவும் ஆகவில்லை என்பதால், ஐஸ்க்ரீமில் விஷம் கலந்த விஷயத்தை குடும்பத்தினரிடமிருந்து மறைத்திருக்கிறார் வர்ஷா. ஆனால், போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. ஐஸ்க்ரீமில் கலக்கப்பட்ட எலி மருந்துதான் இருவரின் மரணத்துக்கும் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குற்றத்தை ஒப்புக்கொண்டார் வர்ஷா.
வர்ஷா மீது ஐ.பி.சி 304, 305 ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரைக் கைதுசெய்திருக்கிறது கேரள காவல்துறை. வர்ஷா ஏன் தற்கொலை செய்ய முயன்றார் என்பதை விசாரித்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
தவறுதலாக எலி விஷம் கலந்த ஐஸ்க்ரீமை உண்டதால் ஐந்து வயது சிறுவனும், இளம்பெண்ணும் உயிரிழந்திருக்கும் சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.