Published:Updated:

ஆடம்பர வாழ்க்கை; விலையுயர்ந்த கார்கள்! - கேரள வங்கிகளில் நூதன மோசடி செய்த தாய் - மகன்

சியாமளா
சியாமளா

குருவாயூரைச் சேர்ந்த தாயும் மகனும் போலி ஆவணங்கள் மூலம் வங்கிகளில் 2 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை குருவாயூரில் இயங்கி வருகிறது. வங்கியின் கிளை மேலாளர், கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், `குருவாயூரைச் சேர்ந்த சியாமளா மற்றும் அவரின் மகன் விபின் கார்த்திக் இருவரும் எங்கள் வங்கியில் கார் வாங்குவதற்காக 30 லட்சம் ரூபாயைக் கடன் வாங்கினர். ஆனால், இதுவரை அந்தப் பணத்தைத் திருப்பித் தரவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல், கொல்லம் பகுதியில் உள்ள வங்கி மேலாளரான சுதா தேவி என்பவர் இந்தக் குடும்பத்தினர் மீது புகார் கூறியுள்ளார். தாய் மகன் இருவரும் என்னை ஏமாற்றி 97 சவரன் தங்கம் மற்றும் 25 லட்சத்தை மோசடி செய்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

IOB Bank
IOB Bank

இருவரின் புகாரையும் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்காக சியாமளா வீட்டுக்கு காவலர்கள் சென்றனர். போலீஸாரைக் கண்டதும் சியாமளா மற்றும் அவரின் மகன் விபின் ஆகியோர் கதவுகளை மூடினர். வேறுவழியின்றி கதவுகளை உடைத்துக்கொண்டு காவல்துறையினர் உள்ளே சென்றனர். அப்போது சியாமளா மட்டுமே வீட்டில் இருந்தார். வீட்டின் பின்பக்க கதவுகள் வழியாக விபின் தப்பியோடிவிட்டார். இதையடுத்து சியாமளாவை கைது செய்த காவல்துறையினர் விசாரணைக்காகக் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். தப்பியோடிய விபினை தேடி வருகின்றனர்.

குழந்தை சுர்ஜித் உடல் நல்லடக்கம்! - கண்ணீர்மல்க விடைகொடுத்த மக்கள்

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், “சியாமளா அவரின் மகன் ஆகிய இருவரும் சுதா தேவியுடன் நெருங்கிப்பழக ஆரம்பித்துள்ளனர். சுதா தேவி மூலம் மற்ற வங்கி மேலாளர்களுடனும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டனர். உறவினர்கள்போல் அவர்களுடன் பழகி வந்துள்ளனர். மருத்துவச் செலவுக்கும் வங்கியில் வாங்கிய கடனை செலுத்தவும் பணம் வேண்டும் எனக் கூறி சுதாவிடம் பணம் பெற்றுள்ளனர். ஆனால், அதன் பின்னர் பணத்தைத் திருப்பி செலுத்தவில்லை.

பணம்
பணம்

சியாமளா மற்றும் அவரின் மகன் விபின் இருவருக்கும் குருவாயூரில் உள்ள நிறைய வங்கிகளில் அக்கவுன்ட் உள்ளது. இருவரும் போலி ஆவணங்களைத் தயார் செய்து வங்கிகளில் இருந்து கடன் பெற்றுள்ளனர். அதேபோல் வங்கியில் கடன் பெற்று அதை உரிய காலத்தில் செலுத்தியதாக போலி ஆவணங்களைத் தயார் செய்து மேலும் மேலும் கடன் பெற்றுள்ளனர். இருவரும் தங்களது அக்கவுன்ட்டில் 5 லட்சம் இருப்புத் தொகை இருப்பதுபோல் கணக்கு காட்டியுள்ளனர்.

மாயமான டெய்லர்.. மெளனம் காக்கும் ஜோலி - சீரியல் கொலையில் போலீஸுக்கு வலுக்கும் சந்தேகம்!

இந்தப் பணத்தைக்கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளனர். சியாமளாவின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். வங்கியில் கிடைத்த பணத்தைக்கொண்டு ஆடம்பர கார்கள், தளச்சேரி மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் வீடுகளையும் வாங்கியுள்ளனர்.

ஒரு வருடங்களுக்கும் மேலாக இந்த மோசடியில் தாய், மகன் இருவரும் ஈடுபட்டு வந்துள்ளனர். சியாமளா அரசு அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். தலைமை அதிகாரியின் கையெழுத்து மற்றும் முத்திரையைப் பயன்படுத்தி மோசடி செய்ததாக இவர் மீது புகார் உள்ளது. இதன்காரணமாக இவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

Vibin karthik
Vibin karthik

வங்கியில் கடன் வாங்கும்போது விபின் தன்னை ஐபிஎஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தியுள்ளார். காஷ்மீரில் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். தாயும் மகனும் கடந்த இரண்டு வருடங்களாக குருவாயூரில் தங்கிவந்துள்ளனர். வங்கி மோசடி தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்த விவகாரம் தெரிய வந்ததையடுத்து குருவாயூரில் இருந்து கோழிக்கோட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற காவலர்கள் சியாமளாவைக் கைது செய்தோம். தப்பியோடிய விபினை தேடி வருகிறோம். இவர்கள் இருவரும் 12 வங்கிகளில் 2 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளனர். கார் மற்றும் இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்கின்றனர்.

பின் செல்ல