Published:Updated:

`அம்மாவைக் கொன்று வீட்டிலேயே புதைத்துவிட்டேன்' - அதிக பாசத்தால் கேரள பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

பல நாள்களாகியும் சாவித்திரி அம்மா கிடைக்கவில்லை. இதற்கிடையே, மகன் சுனிலைப் பிடித்து போலீஸார் விசாரித்துள்ளனர்.

சாவித்திரி அம்மா
சாவித்திரி அம்மா

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள செம்மம்முக்கு பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி அம்மா. 85 வயதாகும் இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இளைய மகன் சுனில் உடன் தங்கியிருந்த இவர் செப்டம்பர் 3-ம் தேதி முதல் காணவில்லை. அம்மாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் அவரின் மகள் 12-ம் தேதி கொல்லம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், பல நாள்களாகியும் சாவித்திரி அம்மா கிடைக்கவில்லை. இதற்கிடையே, மகன் சுனிலைப் பிடித்து போலீஸார் விசாரித்துள்ளனர்.

போலீஸார்
போலீஸார்

முதலில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தவர் ஒரு மாதங்களுக்குப் பின்பு, போலீஸிடம் ஒரே ஒரு தகவலை மட்டும் சொல்லியுள்ளார். அது, ``அம்மாவைக் கொன்று வீட்டிலேயே புதைத்துவிட்டேன்" என்பதுதான்.

சுனிலின் வாக்குமூலத்தைக் கேட்ட போலீஸார், உடனடியாக செம்மம்முக்கு கிராமத்தில் இருந்த வீட்டுக்கு விரைந்து சடலத்தை மீட்டனர். இறந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியதால் சாவித்திரியின் சடலம் சிதைந்த நிலையில் இருந்துள்ளது. பின்பு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளது. போலீஸின் முதற்கட்ட தகவலின்படி சாவித்திரி கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பிறந்து 2 நாள்களே ஆன குழந்தையைக் கொன்று புதைத்தது ஏன்? - தாய் அதிர்ச்சி வாக்குமூலம்

எனினும் அம்மாவை சொந்த மகனே ஏன் கொலை செய்தார் என்ற கேள்விக்கு இடையில், சுனில் குறித்த அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சாவித்திரிக்கு இரண்டு மகன், ஒரு மகள் இருந்தாலும் தனது சொந்த கிராமத்தில் சுனில் உடனே தங்கியுள்ளார். சுனில் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர். ஏற்கெனவே ஒரு முறை மதுகுடிக்கும்போது தன் நண்பரைக் கொலை செய்ததற்காக சிறைவாசம் அனுபவித்திருந்துள்ளார். பின்பு அவரை சாவித்திரியே ஜாமீனில் வெளியே எடுத்துவந்துள்ளார். இதுபோக கஞ்சா கடத்திய வழக்கும் அவர்மேல் உள்ளது.

போலீஸார்
போலீஸார்

இதற்கிடையே, சாவித்திரி பென்ஷன் வாங்குவதால் அந்தப் பணத்தைக் கேட்டு அம்மாவுடன் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளார் சுனில். இதுபோக வீட்டையும் தன் பெயரில் எழுதித் தர வேண்டும் என்றும் தொந்தரவு செய்துவந்துள்ளார். சம்பவத்தன்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின் முடிவில் தனது நண்பர் குட்டன் என்பவருடன் சேர்ந்துகொண்டு சாவித்திரியைக் கொலை செய்து வீட்டிலேயே புதைத்துள்ளார். இருவரையும் கைது செய்துள்ளோம். விரைவில் அவர் எப்படிக் கொலை செய்தார் என்பது குறித்த விசாரணையை மேற்கொள்வோம்" எனக் கூறியுள்ளனர்.

`நம்பி வந்தவளைக் கொன்று, நகையை விற்றுக் குடித்தேன்!’- காதலனின் அதிர்ச்சி  வாக்குமூலம்

``மூத்த மகன் வங்கியில் ஆபீஸர், மகள் டீச்சர் என சாவித்திரியின் பிள்ளைகள் நல்ல நிலைமையில் இருந்தாலும் இளைய மகன் என்பதால் சுனில் மீதே அதிக பாசம் வைத்திருந்தார். இதனாலேயே மகன் தவறான பாதைக்குச் சென்றுவிட்டதாக அடிக்கடி வருத்தப்படுவார். ஆனால், சுனிலோ குடித்துவிட்டால் மிருகம்போல் நடந்துகொள்வார். அம்மாவுக்கு வரும் பென்ஷன் தொகையைக் கேட்டு அடிக்கடி வாக்குவாதம் வரும். பலமுறை சாவித்திரியை அடித்து உதைத்துள்ளார் சுனில். அப்போதுகூட தன் மகன் மீதான பாசத்தால் அவரைவிட்டு விலகாமலும் போலீஸிடம் செல்லாமலும் இருந்தார்" எனக் கூறியுள்ளனர் சாவித்திரி வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள்.

சாவித்ரியின் மகள்
சாவித்ரியின் மகள்

அம்மாவைக் காணவில்லை எனப் புகார் கொடுத்த சாவித்ரியின் மகளோ, ``வீட்டைத் தன் பெயருக்கு மாற்றித்தரக்கோரி அடிக்கடி அம்மாவுடன் சண்டை போட்டுவந்தான் சுனில். மேலும் இரண்டு லட்சம் வேண்டும் என்றும் தொந்தரவு செய்துவந்தான். ஆனால், இப்படி செய்வான் என நினைக்கவில்லை. நாங்கள் பலமுறை கூப்பிட்டும் எங்களுடன் வர அம்மா மறுத்துவிட்டார். சுனில் மீது அதிக பாசம் வைத்திருந்தார். கடைசியில் அவனே அம்மாவைக் கொலைசெய்துவிட்டான்" எனக் கண்ணீர் வடிக்கிறார்.

சொத்துக்காகக் குடும்பத்தில் ஆறு பேரை கொலை செய்த ஜோலி குறித்த அதிர்ச்சியில் இருந்த மீளாத கேரளா இந்தச் சம்பவத்தால் இன்னும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

news credit - manoramaonline

`நகையை திருப்பிக் கேட்டாள்; கொன்று புதைத்துவிட்டேன்'- வாட்ஸ்அப் மெசேஜால் சிக்கிய அரசு ஊழியர்!