Published:Updated:

`நான்குமுறை பாலியல் தொல்லை கொடுத்தார்!' -கேரளாவை அதிரவைத்த `கர்த்தாவின்டே நாமத்தில்'

பாலியல் வழக்கில் சிக்கிய பிஷப் பிராங்கோ முளய்க்கல் குறித்த பல சம்பவங்களை புத்தகத்தில் கூறியிருக்கிறார் லூசி.

கன்னியாஸ்திரி லூசி களப்புரா
கன்னியாஸ்திரி லூசி களப்புரா

கேரள சீரோ மலபார் சபையில் ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ முளய்க்கல், 2014 முதல் 2016 வரை தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கடந்த ஆண்டு கன்னியாஸ்திரி ஒருவர் புகார் கூறினார். அந்தப் புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட பிஷப் பிராங்கோ, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அந்த வழக்கில் பிராங்கோவுக்கு எதிராகச் சாட்சி சொன்ன பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தாரா, கடந்த ஆண்டு அக்டோபரில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

பிஷப் பிராங்கோ
பிஷப் பிராங்கோ

இதன்பின்னர், `பிஷப் பிராங்கோ முளய்க்கல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்தன. முதலில் கன்னியாஸ்திரி அனுபமா என்பவரை இடமாற்றம் செய்து சபை உத்தரவிட்டது.

Vikatan

அடுத்தபடியாக பிஷப்புக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக கலந்துகொண்ட கன்னியாஸ்திரி லூசி களப்புரா என்பவரைக் கடந்த மே மாதம் சபையை விட்டு நீக்கியுள்ளனர். மேலும், சபையைவிட்டு வெளியேற வேண்டும் எனக் கன்னியாஸ்திரி லூசிக்குப் பலவகைகளில் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து, சபை குறித்த சில விஷயங்களை மீடியாக்களில் வெளிப்படுத்தி வந்தார் லூசி களப்புரா.

இந்த நிலையில், கன்னியாஸ்திரி லூசி களப்புரா குறித்து பத்திரிகையாளர் ராமதாஸ், `கர்த்தாவின்டே நாமத்தில்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

லூசி களப்புரா
லூசி களப்புரா

அதில், கன்னியாஸ்திரி லூசி களப்புரா கடந்துவந்த வலிகளை விவரித்துள்ளார். அந்தப் புத்தகத்தில் லூசி களப்புரா கூறியுள்ளதாவது, ``பாதிரியார் ஒருவர் நான்குமுறை பலவந்தமாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். பார்வையாளர் என்ற போர்வையில் மடத்துக்குள் நுழைந்து, இந்தத் தொல்லையைக் கொடுத்தார். மடத்தில் ஒரு கன்னியாஸ்திரிக்கு குழந்தை பிறந்தது. அதில், சம்பந்தப்பட்ட பாதிரியாரை சபை காப்பாற்றியது.

` என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்கிறார்கள்!' - சிறை வைக்கப்பட்ட கேரள கன்னியாஸ்திரி கண்ணீர்

குழந்தைபெற்ற கன்னியாஸ்திரி மடத்திலிருந்து வெளியேறி வீட்டுக்குச் சென்றுவிட்டார். ஆனால், அதற்குக் காரணமான பாதிரியார் இப்போது உயர் பதவியில் அமர்ந்திருக்கிறார். பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் பாதிரியார் பல கன்னியாஸ்திரிகளுடன் தொடர்பில் இருந்தார்" என அதிர்ச்சித் தகவல்களை விவரித்துள்ள கன்னியாஸ்திரி லூசி,

பார்வையாளர் என்ற போர்வையில் மடத்துக்குள் நுழைந்த அந்தப் பாதிரியார் பலவந்தமாக பாலியல் தொல்லையைக் கொடுத்தார்.
கன்னியாஸ்திரி லூசி

`` இப்போதுள்ள வழக்கங்களை மாற்ற வேண்டும். திருமணம் செய்துகொள்ள விருப்பம் உள்ள பாதிரியார்களையும் கன்னியாஸ்திரிகளையும் திருமணம் செய்துகொண்டு வாழ்வதற்கு சபை அனுமதிக்க வேண்டும்" எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், பாலியல் வழக்கில் சிக்கிய பிஷப் பிராங்கோ முளய்க்கல் குறித்த பல சம்பவங்களையும் புத்தகத்தில் கூறியிருக்கிறார் லூசி. `கர்த்தாவின்டே நாமத்தில்' புத்தகம் கேரளத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.