Published:Updated:

`தாயைக் கொல்ல கூலிப்படை; பணத்துக்காக அடுத்த கொலை!' - 3 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய கேரள ஆசாமி

பிர்ஜூ
பிர்ஜூ

இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய நபரை கேரள போலீஸார் பந்தலூரில் கைது செய்தனர்.

கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது உடல் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் கோழிக்கோடு நகரத்தின் பல இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்தது 2017-ம் ஆண்டு. இந்தக் கொடூர சம்பவம் கேரளாவை உறையச் செய்த நிலையில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தக் கொலைக் குற்றத்தைச் செய்த பிர்ஜூ என்பவரைக் கண்டுபிடித்து நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தங்கியிருந்த அவரை கேரளா போலீஸார் கைது செய்துள்ளனர். இஸ்மாயில் என்பவரை மட்டுமல்ல, தன் தாய் ஜெயவல்லியையும் பிர்ஜூ கொலை செய்துள்ளார் என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர் கேரள க்ரைம் பிரிவு போலீஸார்.

பிர்ஜூ
பிர்ஜூ

பிர்ஜூ கைதுதொடர்பாகவும், மூன்று ஆண்டு வழக்கு எப்படி வெளிச்சத்துக்குவந்தது என்பது குறித்தும் கேரள க்ரைம் பிரிவு அதிகாரி டோமின் தச்சங்கரி கூறுகையில், ``கோழிக்கோடை அடுத்த முக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிர்ஜூ. 53 வயதான பிர்ஜூவின் தந்தை 1984-ம் ஆண்டே தற்கொலை செய்துகொள்ள, அதன்பின் தன் தாயார் ஜெயவல்லியுடன் வசித்துவந்துள்ளார். பிர்ஜூவின் தந்தை அந்தப் பகுதியில் சில நிலங்களை வைத்துள்ளார். அவர் இறந்த பிறகு அதை விற்று பிர்ஜூவும் அவரின் சகோதரரும் தாய் ஜெயவல்லியும் பங்குபோட்டு கொண்டுள்ளனர். தனக்கு கிடைத்த பங்கை பிர்ஜூ ஆடம்பரமாகச் செலவு செய்துவந்துள்ளார். இதனால் பணம் விரைவில் காலியாக, தாய் ஜெயவல்லியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார்.

ஆனால், அவர் பணம் தர மறுக்கவே அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்திருக்கிறார். இதற்காக அவர் இஸ்மாயிலைத் தொடர்பு கொண்டுள்ளார். மலப்புரம் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் கூலிப்படையாகச் செயல்பட்டு வருபவர். பிர்ஜூ அழைப்பை ஏற்று முக்கம் வந்தவர் அவருடன் சேர்ந்து 2016-ல் ஜெயவல்லியைக் கொலை செய்துள்ளனர். அவரது இறப்பு கொலைபோல் தெரியக்கூடாது என்பதற்காக அவராகவே சேலையில் தூக்குப்போட்டுக்கொண்டதுபோல் காண்பிக்க ஜெயவல்லியின் கழுத்தை நெறித்து கொலை செய்து சீலிங் பேனில் தொங்கவிட்டு தற்கொலைபோல் நாடகமாடியுள்ளனர். இந்தக் கொலை செய்ய இஸ்மாயிலுக்கு ரூ.10 லட்சம் பணம் தருவதாகக் கூறியுள்ளார் பிர்ஜூ.

ஜெயவல்லி - இஸ்மாயில்
ஜெயவல்லி - இஸ்மாயில்
Mathrubhumi

கொலை முடிந்து சில நாள்கள் கழித்து தாயைக் கொல்ல கூலிப்படையாக இருந்த இஸ்மாயிலுக்கு பணம் கொடுப்பதில் பிரச்சனை ஏற்படவே கொலை செய்தது குறித்து வெளியில் கூறிவிடுவேன் என இஸ்மாயில் பிர்ஜூவை மிரட்டியுள்ளார். இதனால் அவரை தன் வீட்டுக்கு வரும்படி கூறியுள்ளார் பிர்ஜூ. அதன்படி ஜெயவல்லியைக் கொலை செய்த அதே வீட்டுக்கு வந்துள்ளார் இஸ்மாயில். அங்கு இஸ்மாயிலுக்கு முதலில் உணவு கொடுத்த பிர்ஜூ மதுவும் கொடுத்துள்ளார். போதையில் இஸ்மாயில் தூங்கிய நிலையில் இருக்க அவருக்கு பணம் கொடுக்கக் கூடாது என்று அவரை பலமாகத் தாக்கி கொலை செய்துள்ளார். ஜெயவல்லியைக் கொலை செய்த அதே வீட்டில் அதே பெட்டில் வைத்து இஸ்மாயிலையும் கொலை செய்துள்ளார்.

பின்னர் இந்தக் கொலைக் குற்றத்திலும் சிக்கக் கூடாது என்பதற்காக கொலையை மறைக்க முடிவு செய்த பிர்ஜூ இதற்காக கடைக்குச் சென்று பிளாஸ்டிக் பைகளும், அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் பிளேடுகளையும் வாங்கிவந்து இஸ்மாயில் உடலைத் துண்டு துண்டாக வெட்டி கோழிக்கோடு நகரத்தில் வீசிவிட்டார். இதன் பின்னர் இருக்கின்ற சொத்துக்களை விற்றுவிட்டு பிர்ஜூ நீலகிரி பந்தலுார் அருகில் உள்ள புலியாடி என்ற பகுதியில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி தன் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். புலியாடி பகுதியில் தலைமறைவாக இருந்துவந்த பீர்ஜூவை நீண்ட விசாரணைக்குப் பின் கைது செய்தோம்.

பிர்ஜூ
பிர்ஜூ

இரண்டு கொலைகளை செய்துவிட்டு தலைமறைவாக இருந்து வந்த பீர்ஜூவை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். அவரது நடமாட்டம் மற்றும் போன் கால்கள் பெரும் உதவியாக இருந்தன. தொடர் விசாரணைக்குப் பிறகு இவர்தான் குற்றவாளி என உறுதி செய்து கைது செய்துள்ளோம். இருவரையும் ஒரே வீட்டில் கொலை செய்ததால் அங்கிருந்த நிறைய தடயங்கள் இந்த வழக்கில் கிடைத்துள்ளன. கொல்லப்பட்ட இஸ்மாயில் மீது திருட்டு உள்ளிட்ட நிறைய வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளன. அவரது கைரேகையை வைத்து டிஎன்ஏ சோதனை நடத்தி உடல் பாகங்கள் அவருடையவை என்பது கண்டுபிடிக்கப்பட்டன. விசாரணையில் கொலைக் குற்றத்தை பிர்ஜூ ஒப்புக்கொண்டுள்ளார்" என்றார். தற்போது பிர்ஜூவுக்கு ஏழு நாள் காவல் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு