சினிமா இயக்குநர் சனல்குமார் சசிதரன், நடிகை மஞ்சுவாரியரை வைத்து 2020-ல் 'கயற்றம்' என்ற சினிமாவை இயக்கியிருக்கிறார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், `மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவர் சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். சொந்த முடிவுகளை எடுக்கக்கூட அவரை அவர்கள் அனுமதிப்பதில்லை' எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்காக கோட்டயத்துக்கு மஞ்சு வாரியர் வந்தபோது அவரைச் சந்திக்க முயன்றதாகவும், அதை மஞ்சு வாரியரின் மேனேஜர்கள் தடுத்ததாகவும் சனல்குமார் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, மஞ்சு வாரியர் கொச்சி எளமக்கரா காவல் நிலையத்தில் சனல்குமார் மீது புகார் அளித்தார். அந்தப் புகாரில், ``சனல்குமார் சசிதரன் என்னை சில காலமாக பின்தொடர்ந்து தொல்லைக் கொடுக்கிறார்!" என மஞ்சுவாரியர் குறிப்பிட்டிருப்பதாக தாக்கல் வெளியாகியிருக்கிறது. இந்தப் புகாரைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் அருகே உள்ள பாறசாலை பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த இயக்குநர் சனல்குமார் சசிதரனை கொச்சி எளமக்கரா தனிப்படை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது காரில் இருந்து ஃபேஸ்புக் லைவ் மூலம் பேசிய சனல்குமார் சசிதரன், ``மஞ்சுவாரியாரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று நான் கூறியதைத் தொடர்ந்து, போலீஸ் என்று சொல்லி மஃப்டியில் சிலர் என்னைக் கடத்திக்கொண்டுபோக முயல்கிறார்கள். என்னை அவர்கள் கடத்திக் கொண்டுபோய் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். மஞ்சுவாரியர் உயிருக்கும், என் உயிருக்கும் மிரட்டல் இருக்கிறது. மஞ்சுவாரியர் உயிரோடு இருக்கிறாரா, அவர்தான் என் மீது புகார் கொடுத்தாரா என்பது எனக்குத் தெரியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மஞ்சுவாரியார் குறித்த போஸ்ட் போட்டு ஏழு நாள்கள் ஆகிவிட்டன. இவ்வளவு நாளும் மஞ்சுவாரியார் அது பற்றி எதுவும் சொல்லவில்லை. இந்த நிலையில், இப்போது என்னை கடத்திக்கொண்டு போக வந்துள்ளார்கள். கேரளா மாநிலத்தில் ஒரு விங்க் என்னை கொலைச்செய்ய முயல்கிறது. கொலை மிரட்டல் இருப்பதால் நான் தலைமறைவாக வாழ்ந்து வருகிறேன். தமிழ்நாட்டின் என் சகோதரி வீட்டில் நான் வசித்து வருகிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து பாறசாலை போலீஸார் அங்கு சென்று, சனல்குமார் சசிதரனிடம் இவர்கள் தனிப்படை போலீஸார் என்பதை எடுத்துக்கூறினர். மேலும் மஞ்சுவாரியார் கொடுத்த புகாரின் அடிப்படையில், மிரட்டுதல், ஐ.டி ஆக்ட் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதையும் தெரிவித்தனர். அதையடுத்து, சனல்குமார் சசிதரனை கொச்சி போலீஸார் அழைத்துச் சென்றனர்.