Published:Updated:

`பாலக்காட்டில் இருவர்; பூத்துறையில் ஒருவர்!' - களியக்காவிளை எஸ்.ஐ கொலையில் மூன்று பேர் கைது

இறுதிச்சடங்கில் போலீஸ் உடலை சுமந்த எஸ்.பி.
இறுதிச்சடங்கில் போலீஸ் உடலை சுமந்த எஸ்.பி.

கேரள போலீஸாரும் தமிழக போலீஸுடன் இணைந்து தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை செக்போஸ்டில் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மூன்று தோட்டாக்கள் அவரது உடலை துளைத்திருந்தது. மேலும், வில்சனின் உடலில் வெட்டுக் காயங்களும் இருந்தன. செக்போஸ்ட் அருகில் உள்ள ஷெட்டில் இருந்த வில்சனை துப்பாக்கியால் சுட்டதுடன், அவரை இழுத்து சாலையில் தள்ளியும் சுட்டுள்ளனர்.

எஸ்.எஸ்.ஐ வில்சன்
எஸ்.எஸ்.ஐ வில்சன்

மேலும், அவரது உடலில் கத்தியால் வெட்டியுள்ளனர். சத்தம் கேட்டு அங்கு பொதுமக்கள் கூடியதால், அவர்கள் இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர். இல்லையென்றால் இன்னும் கொடூரமாக அவரது உடலை சிதைத்திருப்பார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழக டி.ஜி.பி ஏ.கே.திரிபாதி, கேரள டி.ஜி.பியுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு தொடர்பாக கேரள மாநிலம் பூத்துறையில் ஒருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், பாலக்காடு பகுதியில் சையது இப்ராஹீம் மற்றும் அப்பாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்

இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய குமரி மாவட்ட எஸ்.பி.ஸ்ரீநாத், ``ஐ.ஜி. சண்முக ராஜேஷ்வரன் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரள போலீஸாரும் தமிழக போலீஸுடன் இணைந்து தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட வில்சன் 1986-ல் மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்புக் காவலராக பணியில் சேர்ந்தார். அதன்பிறகு நாகர்கோவில் ஆயுதப்படையில் பணிபுரிந்தவர், குமரி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்துள்ளார்.

முகமூடி அணிந்த 2 பேர்; கைத்துப்பாக்கி! - களியக்காவிளை சோதனைச் சாவடியில் எஸ்.எஸ்.ஐக்கு நேர்ந்த துயரம்

அவர் பணி நிறைவுபெற இன்னும் 15 மாதங்களே உள்ள நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் விபத்து ஏற்பட்டு மருத்துவ விடுப்பில் இருந்தவர் ஜனவரி 1-ல் பணிக்குச் சென்றார். வில்சனுக்கு ஏஞ்சல் மேரி என்ற மனைவியும் ஆன்றணீஸ் ரினீஜ், வினிதா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளுக்கு திருமணம் நடந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு