Published:Updated:

`கணவருடன் பிரச்னை; அதிகாலை 2.30 மணிக்கு அழுத ஒன்றரை வயது குழந்தை!' - கேரளாவை அதிரவைத்த பெண்

Representational Image
Representational Image ( மாதிரி புகைப்படம் )

கேரளாவில், ஒன்றரை வயது மகனைக் கொலை செய்த குற்றத்துக்காக தாய் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். இவருக்கும் சரண்யா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு, வியான் என்ற ஒன்றரை வயது மகன் இருக்கிறார். இந்த நிலையில், தனது மகனைக் காணவில்லை என பிரணவ் - சரண்யா தம்பதியினர் கண்ணூர் போலீஸில் நேற்று காலை புகார் அளித்தனர். புகாரில், தங்களுடன் முதல்நாள் இரவில் உறங்கிய குழந்தை வியானை திங்கள்கிழமை காலை 6 மணிக்கு கண்விழித்துப் பார்த்தபோது காணவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.

கண்ணூர் கொலை
கண்ணூர் கொலை
Manorama News

இதையடுத்து, போலீஸார் விசாரணையத் தீவிரப்படுத்தினர். விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், காலை 10 மணியளவில் பிரணவ்வின் வீட்டின் அருகே உள்ள தாயில் பீச் பகுதியில் குழந்தை வியானின் உடல் கரை ஒதுங்கியது. வீட்டுக்கு அருகே உள்ள கடற்கரையில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸாரின் சந்தேகப்பார்வை பிரணவ் - சரண்யா மீது விழுந்தது.

அவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்த போலீஸார், தனித்தனியே விசாரணை மேற்கொண்டனர். இதில், இருவருமே முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்ததால், போலீஸாரின் சந்தேகம் வலுத்தது. சரண்யா, முதல்நாள் நள்ளிரவு 2.30 மணியளவில் குழந்தை வியான் அழுததாகவும், பின்னர் தனது கணவனிடம் குழந்தையை சமாதானப்படுத்தச் சொல்லிவிட்டு உறங்கிவிட்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும், காலை 6 மணியளவில் எழுந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

கண்ணூர் கொலை
கண்ணூர் கொலை
MBS News

ஆனால் இதை மறுத்த பிரணவ், குழந்தை இரவில் எழுந்தபோது சரண்யாவே சமாதானப்படுத்தியதாகவும் தான் உறங்கிவிட்டதாகவும் கூறியிருக்கிறார். இதையடுத்து, அவர்கள் வீட்டில் பயன்படுத்திய போர்வை, இருவரது உடை உள்ளிட்டவைகளைக் கைப்பற்றிய போலீஸார், ஆய்வுக்கு அனுப்ப முடிவுசெய்தனர். அவர்களில் ஒருவர் கடல்பகுதிக்குச் சென்றிருந்தால், நிச்சயம் அதில் உப்பு படிந்திருக்கும் என்ற கோணத்தில் அவர்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தத் தொடங்கினர். மேலும், தடயவியல் நிபுணர்களும் பிரணவின் வீட்டில் சோதனையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தச் சூழலில், குழந்தையைக் கொலை செய்ததைத் தாய் சரண்யா ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும், அவர் கூறிய தகவல்கள் போலீஸாரை மட்டுமல்லாது கேரளாவையே அதிரவைத்திருக்கிறது. அவர், குழந்தை அழுததும் அதை சமாதானப்படுத்தியதாகவும், பின்னர் கடற்கரைக்கு குழந்தையைத் தூக்கிச்சென்றதாகவும் கூறியிருக்கிறார். வீட்டிலிருந்து 100 மீட்டர் தூரமே உள்ள கடற்கரைக்குச் சென்ற பின்னரும் குழந்தை வியான் அழுகையை நிறுத்தாததால், சிறிதுநேரம் அங்கு அமைதிப்படுத்தியதாகவும் கூறியிருக்கிறார்.

Representational Image
Representational Image

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `கடற்கரையில் குழந்தை வியான் அழுகையை நிறுத்தியதும், கடலை ஒட்டிய பகுதியில் குவிக்கப்பட்டுள்ள கற்குவியலின் கீழ் பாகத்தை நோக்கி குழந்தையை சரண்யா பலம்கொண்ட மட்டும் வீசியெறிந்திருக்கிறார். சிறிதுநேரம் கடந்தும் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டதால், கீழே இறங்கிச் சென்று குழந்தையை மேலே தூக்கி வந்திருக்கிறார். பின்னர், இரண்டாவது முறையாகக் குழந்தையை கற்குவியலில் வீசியிருக்கிறார். குழந்தையை அலைகள் இழுத்துச் செல்வதைப் பார்த்து, அது இறந்துவிட்டதை உறுதிசெய்த பின்னரே சரண்யா வீடு திரும்பியிருக்கிறார்.

பின்னர், காலையில் எழுந்து குழந்தையைக் காணவில்லை என கணவரிடம் கூறி புகார் கொடுத்திருக்கிறார். போர்வை, உடை போன்றவற்றை எடுத்து தடவியல் பரிசோதனைக்கு அனுப்ப நாங்கள் முடிவு செய்தபோது, கொலைக்குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

`6 மணி நேரத்தில் 1,800 பேர் கொலை!'- அஸ்ஸாமைத் துரத்தும் நெல்லி படுகொலை #NellieMassacre

பிரணவ் - சரண்யா இடையே கடந்த சில மாதங்களாக பிரச்னை நீடித்து வந்திருக்கிறது. இதனால், விவாகரத்து வாங்க சரண்யா தரப்பில் முடிவுசெய்து, அவருக்கு வேறொரு திருமணம் செய்துவைக்க முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் பிரணவ் வேறுவிதமாக எதிர்வினையாற்றியிருக்கிறார். இந்தச் சூழலில்தான் சரண்யா குழந்தையைக் கொல்ல முடிவுசெய்து, அதை நிறைவேற்றியிருக்கிறார். இதையடுத்து, சரண்யாவைக் கைது செய்திருக்கிறோம்'' என்றனர். ஒன்றரை வயது குழந்தையைக் கொன்ற குற்றத்துக்காக தாய் கைதுசெய்யப்பட்ட விவகாரம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு