Published:Updated:

கன்னியாகுமரி கடற்கரையில் சடலமாகக் கிடந்த கேரள காவலர்! - லாட்ஜில் மயங்கிக் கிடந்த இளம்பெண்

கடற்கரையில் இறந்து கிடந்த கேரள காவலர் போஸ்
கடற்கரையில் இறந்து கிடந்த கேரள காவலர் போஸ்

`போஸின் போலீஸ் அடையாள அட்டை கிடைத்துள்ளது. அதை வைத்துதான் அவரது முகவரியைக் கண்டுபிடிக்க முடிந்தது.'

கேரளா மாநில காவல்துறையில் டிரைவராகப் பணியாற்றி வந்தவர் கொல்லம் பகுதியைச் சேர்ந்த போஸ் (40). இவர் இன்று காலை கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் அங்கு சென்று போஸின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, அவரது பேன்ட் பாக்கெட்டில் ஒரு லாட்ஜின் முகவரியுடன் கூடிய சாவி இருந்திருக்கிறது. அதை எடுத்த போலீஸார் அந்த லாட்ஜில் சென்று அறையைத் திறந்துள்ளனர். அறைக்குள் ஒரு இளம் பெண் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே அவரை மீட்ட போலீஸார் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுப்ரியா
சுப்ரியா

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கேரள போலீஸில் பணிபுரியும் போஸ் என்பவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரியா (30) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. சுப்ரியாவும் ஏற்கெனவே திருமணமானவர். இருவரும் நெருக்கமாகப் பழகி வந்ததாகத் தெரிகிறது.

இந்தநிலையில் போஸ் மற்றும் சுப்ரியா ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேறி தனியாக வாழ முடிவு செய்துள்ளனர். இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர், பல இடங்களுக்கு ஊர் சுற்றியுள்ளனர். அந்தப் பகுதிகளில் ரூம் போட்டு கணவன் மனைவி போல வாழ்ந்துள்ளனர். கடைசியாகக் கன்னியாகுமரிக்கு வந்திருக்கின்றனர்.

கேரள காவலர் போஸ்
கேரள காவலர் போஸ்

கன்னியாகுமரியில் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். கையில் உள்ள பணம் முழுவதும் செலவாகிவிட்டது. இனி ஊருக்குத் திரும்பிச் செல்லவும் வழி இல்லை என்பதால் இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்தனர். போஸ் நேற்று இரவு விஷம் வாங்கிக்கொண்டு அறைக்குச் என்றுள்ளார். அங்கு போஸ் மற்றும் சுப்ரியா ஆகியோர் விஷம் குடித்துள்ளனர். அறையில் மயங்கிய சுப்ரியாவை அங்கேயே விட்டுவிட்டு, போஸ் கடற்கரைக்கு நடந்து வந்துள்ளார். கடற்கரையில் மேலும் நடக்க முடியாமல் மயங்கிவிழுந்து இறந்துள்ளார். பின்னர், அவரை இன்று காலையில் அப்பகுதி மக்கள் பார்த்து தகவல் சொல்லியதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. போஸின் போலீஸ் அடையாள அட்டை கிடைத்துள்ளது. அதை வைத்துதான அவரது முகவரியைக் கண்டுபிடிக்க முடிந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு