Published:Updated:

`சிசிடிவியில் சிக்கிய பேக் எங்கே?' - எஸ்.எஸ்.ஐ கொலையில் நெய்யாற்றின்கரையை வட்டமிடும் கேரள போலீஸ்

கடை ஓரமாக நடந்து செல்லும் தீவிரவாதிகள் கையில் ஒரு பை வைத்திருந்தனர். அந்தப் பையை அடிக்கடி பயன்படுத்தவும் செய்தனர்.

சிசிடிவி கேமராவில் பதிவான தீவிரவாதிகள்
சிசிடிவி கேமராவில் பதிவான தீவிரவாதிகள்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை செக்போஸ்ட்டில் பணியில் இருந்த போலீஸ் எஸ்.எஸ்.ஐ வில்சன் கடந்த 8-ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாகத் தமிழக, கேரள போலீஸார் கூட்டாக விசாரணை நடத்திவருகின்றனர். தமிழக கியூ பிரிவு போலீஸார் மற்றும் கேரள போலீஸார் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

விசாரணையின் அடிப்படையில் கேரள மாநிலம் பாலக்காடு, பூத்துறை, கொல்லம் தென்மலை பகுதிகளில் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கும் எஸ்.எஸ்.ஐ கொலை சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்றும், அவர்கள் வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் எஸ்.எஸ்.ஐ வில்சன்
போலீஸ் எஸ்.எஸ்.ஐ வில்சன்

இந்த நிலையில் கேரளாவில் பதிவான சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை வைத்து சில விவரங்களை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து கேரள போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``எஸ்.எஸ்.ஐ வில்சனை கொலை செய்வதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு கொலையாளிகள் நெய்யாற்றின்கரை பகுதியில் தங்கியிருந்தார்கள்.

கடந்த 7 மற்றும் 8-ம் தேதிகளில் அவர்கள் பள்ளி அருகில் செல்லும் வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளன. நெய்யாற்றின்கரையை அடுத்த விதுரா பகுதியைச் சேர்ந்த சையது அலி ஏற்பாடு செய்த வீட்டில் அவர்கள் வசித்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.

கொலை நடந்த மறுநாள் சையது அலி தலைமறைவாகிவிட்டார். அவர் மனைவியின் வீட்டில் கியூ பிரிவு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். கொலை நடந்த அன்று நெய்யாற்றின்கரை பகுதியில் தீவிரவாதிகள் ஒரு பேக் பயன்படுத்தியுள்ளதன் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன.

தௌஃபீக், சமீம்
தௌஃபீக், சமீம்

நெய்யாற்றின்கரை ஸ்ரீகிருஷ்ணர் கோயில் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளன. சம்பவம் நடந்த 8-ம் தேதி பொது வேலைநிறுத்தம் என்பதால் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இரவு 8.45 மணியளவில் கடை ஓரமாக நடந்து செல்லும் தீவிரவாதிகள் கையில் ஒரு பை வைத்திருந்தனர். அந்தப் பையை அடிக்கடி பயன்படுத்தவும் செய்தனர்.

அந்தப் பையை நெய்யாற்றின்கரையில் உள்ள ஏதாவது கடையில் வாங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்தப் பையை அந்தப் பகுதியில் எங்காவது மறைத்து வைத்திருக்கலாம். தீவிரவாதிகளை அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர் ஒருவரையும் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று கேரள போலீஸார் கூறினர்.