Published:Updated:

`அபினுக்கு சைக்கிள் கிடைத்துவிட்டது!' -10 வயது சிறுவனின் புகாருக்குத் தீர்வு கொடுத்த கேரள போலீஸ்

ரிப்பேர் பார்ப்பதற்காக சைக்கிளைக் கொடுத்து மூன்று மாதங்களாகியும் திருப்பிக் கிடைக்காததால் வருத்தப்பட்ட 10 வயது சிறுவன், காவல் நிலையத்தில் புகார் அளித்தான்.

சைக்கிளுடன் சகோதரர்கள்
சைக்கிளுடன் சகோதரர்கள்

கேரள மாநிலம் கோழிக்கோடு நகரைச் சேர்ந்த 10 வயது சிறுவன், அபின். அங்குள்ள ஆரம்பப் பள்ளியொன்றில் ஐந்தாம் வகுப்பு படித்துவருகிறார். அபின் மற்றும் அவரது சகோதரனின் சைக்கிள்கள் ரிப்பேர் ஆகிவிட்டன. பழுதைச் சரிசெய்வதற்காக இரு சைக்கிள்களையும் அங்குள்ள ரிப்பேர் பார்க்கும் கடையில் கொடுத்திருக்கிறார்கள். 

 `குல்லா போடும் போலீஸ் நான் கிடையாது!'- ஆளும்கட்சி பிரமுகரைத் தெறிக்கவிட்ட கேரள எஸ்.ஐ!

சைக்கிளைப் பழுது நீக்குவதற்காக ரூ.200 அட்வான்ஸ் தொகையாகவும் அபின் கொடுத்துள்ளார். ஆனால் பழுது பார்ப்பவர், ஏற்கெனவே சொன்ன தேதியில் சைக்கிளைக் கொடுக்கவில்லை. அத்துடன், பல நாள்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டும் சரியான பதிலைத் தெரிவிக்கவில்லை. அதனால் மன உளைச்சல் ஏற்பட்டதால், சிறுவன் அபின் காவல் நிலையத்தில் கைப்பட புகார் எழுதிக் கொடுத்தார்.

அபின், தன்னிடம் உள்ள நோட்டின் காகிதத்தில், மலையாளத்தில் புகார் கடிதத்தை எழுதியிருந்தார். அதில், ’ஐயா, கடந்த செப்டம்பர் 5-ம் தேதி என்னுடைய மற்றும் எனது சகோதரனுடைய சைக்கிள்களை ரிப்பேர் பார்த்துக்கொடுக்குமாறு கடையில் கொடுத்திருந்தேன். ஆனால், இப்போதுவரை சைக்கிள்களைத் திருப்பிக் கொடுக்கவில்லை. 

ரிப்பேர் செய்து கொடுப்பதாகச் சொன்ன நேரத்தில் சைக்கிள்களைக் கொடுக்கவில்லை. போன் செய்தாலும் எடுக்கவில்லை. அதனால், சைக்கிளை வாங்கிக் கொடுங்கள்.
10 வயது சிறுவன் அபின்

ரிப்பேர் செய்வதற்கான அட்வான்ஸ் தொகையாக 200 ரூபாய் கொடுத்திருந்தேன். சைக்கிளைச் சரிசெய்து உரிய நேரத்தில் கொடுக்காததுடன், நான் போன் செய்தால் பல நேரங்களில் எடுப்பதில்லை. அதனால் என்னுடைய சைக்கிள் சரி செய்யப்பட்டுவிட்டதா என்பதைக்கூட அறிந்துகொள்ள முடியவில்லை.

சைக்கிள் இல்லாததால், நானும் எனது சகோதரனும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானோம். அதனால் கடைக்கு நேரில் சென்று பார்த்தபோது, கடை திறக்கப்படாமல் மூடிக்கிடந்தது. அடிக்கடி கடைக்கு நேரில் சென்று விசாரிப்பதற்குக்கூட வீட்டில் வேறு யாரும் கிடையாது. அதனால் நீங்கள் எனக்காக அந்த கடைக்காரரிடம் பேசி, சைக்கிளை வாங்கிக் கொடுக்கவும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

கேரள போலீஸ்
கேரள போலீஸ்

பள்ளிச் சிறுவன் அளித்த புகாரை ரகசியமாக வைத்த போலீஸார், தங்களால் முடிந்த உதவியைச் செய்ய முடிவுசெய்தார்கள். அதனால் நவம்பர் 25-ம் தேதி எழுதப்பட்ட இந்தப் புகார் குறித்து மேப்பாயூர் காவல்நிலைய அதிகாரியான ராதிகா, சிறப்புக் கவனம் எடுத்துக்கொண்டதுடன், தானே அந்தக் கடைக்குச் சென்று விசாரித்தார்.

கடைக்காரரைச் சந்தித்த காவல்துறை அதிகாரி, அந்தச் சிறுவர்களின் சைக்கிள்களைப் பழுதுபார்த்துக் கொடுக்காமல் காலம் தாழ்த்தியது ஏன் என்பது குறித்து விசாரித்தார். அப்போது அந்தக் கடைக்காரர், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் சில காலம் கடையைத் திறக்காமல் இருந்ததாகக் கூறினார். அதன் பின்னர், தன் மகனின் திருமண வேலைகளில் ஈடுபட்டிருந்ததால் கடையைத் திறக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

குவியும் பாராட்டுகள்
குவியும் பாராட்டுகள்

இருப்பினும், சிறுவர்களின் நிலையைக் கவனத்தில்கொண்டு சைக்கிள்களைச் சரிபார்த்துக் கொடுக்குமாறு போலீஸார் அறிவுறுத்தினார்கள். அதை ஏற்றுக்கொண்ட கடைக்காரர், 28-ம் தேதி (நேற்று) கொடுப்பதாக உறுதியளித்திருந்தார். அதன்படி சைக்கிள்கள் பழுது நீக்கப்பட்டு திரும்பப் பெறப்பட்டன. அவற்றை போலீஸார் சிறுவர்களிடம் ஒப்படைத்ததுடன், மெக்கானிக் மீது தைரியமாகப் புகார் அளிக்க முடிவுசெய்த குணத்தையும் பாராட்டினார்கள்.

நடவடிக்கை எடுக்கப்பட்டு சைக்கிள்கள் ஒப்படைக்கப்பட்ட பின்னர், இந்த நடவடிக்கை குறித்து கேரள மாநில போலீஸார் தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்கள். சைக்கிளுடன் சிறுவர்கள் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்கள். போலீஸாரின் இந்த நடவடிக்கை, கேரளாவில் வைரலாகப் பரவி வருகிறது.

Vikatan

சாதாரண நோட்டுப் பேப்பரில் எழுதிய கடிதத்தை சீரியசாக எடுத்துக்கொண்டு நடவடிக்கையில் இறங்கிய போலீஸாரின் செயலைப் பலரும் பாராட்டிவருகிறார்கள். ’போலீஸாரின் செயல் பெருமைக்குரியது. கேரள போலீஸார், பாதுகாப்பு விஷயத்தில் காட்டும் அக்கறையை இது வெளிப்படுத்துகிறது’ என்கிற ரீதியில் பாராட்டுகள் குவிருகின்றன.

கேரள போலீஸாரின் இந்தச் செயலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள் மக்களே...!