Published:Updated:

கழுத்தை நெரிக்கும்போது பிரசவித்த பெண்- 3 உயிர்களைக் பறித்த கொடூரக் கொலையாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

நிறைமாத கர்ப்பிணியான உம்மு சல்மாவை கொலை செய்வதற்காக கழுத்தை நெரித்துள்ளார் முஹம்மது ஷரீப். அப்போது உம்மு சல்மா பாதி பிரசவித்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவர் பாதி நிலையில் பிரசவித்திருந்த பச்சிளம் குழந்தையும் இறந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கேரள மாநிலம் மலப்புறம் காடாம்புழா பகுதியைச் சேர்ந்தவர் உம்மு சல்மா(26). கணவனை பிரிந்த உம்மு சல்மா தனது ஏழு வயது மகன் முஹம்மது தில்ஷாத்துடன் தனி வீட்டில் வாழ்ந்து வந்தார். அந்த சமயத்தில் வெட்டிச்சிற பகுதியைச் சேர்ந்த முஹம்மது ஷரீப் என்பவர் அந்த பகுதியில் கட்டடப் பணிக்காக சென்றுள்ளார். முஹம்மது ஷரீப்பிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் முஹம்மது ஷரீப்புக்கும், உம்மு சல்மாவுக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. முஹம்மது ஷரீப் அடிக்கடி, சல்மாவின் வீட்டுக்குச் சென்று நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் உம்மு சல்மா கர்ப்பமடைந்துள்ளார்.

நிறைமாத கற்பிணியாக இருந்த உம்மு சல்மா, பிரசவத்துக்கு பிறகு முஹம்மது ஷரீப்புடன் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என வலியுறுத்தி வந்திருக்கிறார். இது ஏற்கனவே திருமணம் ஆகி குடும்பத்துடன் வசிக்கும் முஹம்மது ஷரீப்புக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தை பிறந்தால் தனக்கு தலைவலி ஏற்படும் என நினைத்த முஹம்மது ஷரீப் வேறு ஒரு முடிவெடுத்தார். குழந்தை பிறந்தால்தானே பிரச்னை ஏற்படும், தாயையும், வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கொலை செய்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என நினைத்திருக்கிறார்.

முஹம்மது ஷரீப்
முஹம்மது ஷரீப்

கொலை செய்யும் நோக்கில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் உம்மு சல்மா-வின் வீட்டுக்குக் சென்றுள்ளார் முஹம்மது ஷரீப். நிறைமாத கற்பிணியான உம்மு சல்மாவின் கழுத்தை நெரித்துக் கொல்ல முயலும்போது, பிரசவித்து குழந்தை வெளியே வரத் தொடங்கியிருக்கிறது. பாதி பிரசவித்த நிலையில் சல்மாவின் மூச்சு நின்றது. பச்சிளம் குழந்தையும் இறந்தது. இந்த கொலையை உம்மு சல்மாவின் ஏழு வயது மகன் முஹம்மது தில்ஷாத் பார்த்துள்ளார். அவன் வெளியில் கூறிவிடுவான் என்று நினைத்து சிறுவனையும் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். பின்னர், சடலங்களை அறைக்குள் கிடத்தி, தற்கொலை போன்று காட்ட இருவரது கை நரம்புகளை அறுத்துள்ளார். நினைத்தபடி செய்துவிட்டு, வீட்டைப் பூட்டி சாவியை புதரில் வீசி எறிந்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார் முஹம்மது ஷரீப்.

சில நாட்கள் கடந்த பின்னர் உம்மு சல்மா வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் சென்றதையடுத்து விசாரணை முடுக்கிவிடப்பட்டது. உம்மு சல்மாவின் மொபைல் எண்ணை ஆய்வு செய்து முஹம்மது ஷரீப்பை போலீஸார் கைது செய்தனர். ஆனால் கொலையை கண்ணால் கண்ட சாட்சிகள் யாரும் இல்லாததால் அது தற்கொலை என சாதித்திருக்கிறார் அவர். ஆனால் கல்ப்பகஞ்சேரி போலீஸார் விசாரணை நடத்தி முஹம்மது ஷரீப் குற்றவாளி என்பதை நிரூபித்தனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் கழுத்தை நெரித்து கொலை செய்த பிறகு கை நரம்புகள் அறுக்கப்பட்டது தெளிவானது.

இரட்டை ஆயுள் விதிக்கப்பட்ட முஹம்மது ஷரீப்
இரட்டை ஆயுள் விதிக்கப்பட்ட முஹம்மது ஷரீப்

இந்த வழக்கை விசாரித்த மஞ்சேரி கூடுதல் நீதிமன்றம், முஹம்மது ஷரீப் குற்றவாளி என்று நேற்று அறிவித்தது. மேலும் இன்று தீர்ப்பு கூற உள்ளதாகவும் தெரிவித்தது. இந்த நிலையில் பாலக்காடு மாவட்டச் சிறையில் இருந்த முஹம்மது ஷரீப் இன்று காலை கை நரம்புகளை துண்டித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட சிறைக் காவலர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், முஹம்மது ஷரீப்புக்கு இரட்டை அயுள் தண்டனை விதித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உம்மு சல்மாவின் வீட்டில் அத்துமீறி நுழைந்ததற்காக ரூ.25,000 அபராதமும், ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும், நிறைமாத கர்ப்பிணியை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஏழு வயது முஹம்மது தில்ஷாத்தை கொலை செய்ததற்கு ஆயுள் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. உம்மு சல்மாவின் வயிற்றில் இருந்த குழந்தையை கொலை செய்ததற்காக தனியாக பத்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுள்ளது. வயிற்றில் இருந்த சிசுவை கொன்றதற்கான 10 ஆண்டு சிறைத் தண்டனையை முதலில் அனுபவித்து முடித்த பிறகு ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு