Published:Updated:

`கை நரம்பு துண்டிப்பு... டைல்ஸ் சுவர்!' - கேரளா சிறையில் விபரீத முடிவெடுத்த `சயனைடு சூப்' ஜோலி

ஜோலி
ஜோலி

ஜோலி, தனது கையைக் கடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்கிறார்கள், கோழிக்கோடு மாவட்ட சிறைத்துறை அதிகாரிகள்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், கூடத்தாய் பகுதியைச் சேர்ந்த பொன்னாமுற்றம் டோம் தாமஸ், கல்வித்துறை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். அவர் மனைவி அன்னம்மா ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். இவர்களுக்கு ரோயி தாமஸ், ரோஜோ தாமஸ் என்ற மகன்களும், ரெஞ்சி என்ற மகளும் உள்ளனர். டோம் தாமஸின் சகோதரர் சக்காரியா. அவரது மகன் ஷாஜியும், அன்னம்மாவின் சகோதரர் மேத்யூ மஞ்சாடியும் அந்தப் பகுதியில் அருகருகே வசித்துவந்தார்கள். பாலாவை அடுத்த கட்டப்பனையைச் சேர்ந்த ஜோலி, தனது உறவினரான மேத்யூ மஞ்சாடி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதால், ஜோலிக்கும் ரோயி தாமசுக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. அவர்கள், 1997ல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, வீட்டின் அதிகார மையமாக இருந்த மாமியார் அன்னம்மாவிடமிருந்து சாவிக்கொத்தை வசப்படுத்த முடிவுசெய்த ஜோலி, அதற்காக விபரீத முடிவெடுத்தார்.

2002 ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி, மட்டன் சூப் சாப்பிட்ட அன்னம்மாள், திடீரென வாந்தியெடுத்து இறந்தார். அதன்பிறகு 2008-ல், மாமனார் டோம் தாமஸ் அவித்த கிழங்கு சாப்பிட்டபோது வாந்தியெடுத்து மயங்கிவிழுந்து இறந்தார். 2011-ம் ஆண்டு, ஜோலியின் கணவர் ரோய் தாமஸ், பாத்ரூமிற்குள் சென்று வாந்தியெடுத்து மரணம் அடைந்தார். அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்தபோது, அவர் சயனைடு சாப்பிட்டிருந்தது தெரியவந்தது.

கொலை வழக்கு
கொலை வழக்கு

இருப்பினும் அந்தப் பிரச்னை முக்கியத்துவம் பெறாமல் முடிந்துபோனது. இந்தநிலையில், ஜோலியின் கணவர் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தவரில் ஒருவரான மாத்யூ மஞ்சாடி, 2014-ம் ஆண்டு வாந்தியெடுத்து இறந்தார். மற்றொருவரான சிலியின் ஒரு வயது குழந்தை அல்ஃபைன் ஷாஜி, ஒரு விருந்து நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்டபோது வாந்தியெடுத்து இறந்தது. 2006-ம் ஆண்டு சிலியும் இறந்தார். சிலி இறந்து ஒரு வருடம் கடந்ததும், ஷாஜியும் ஜோலியும் திருமணம் செய்துகொண்டார்கள்.

இதையடுத்து, அமெரிக்காவில் இருந்த ஜோலியின் முதல் கணவரின் தம்பி ரோஜோ தாமஸ், இரண்டு அண்ணன்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, தாமரசேரி போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ரகசிய விசாரணை மேற்கொண்ட போலீஸார், ஆறு மரணங்களுக்கும் காரணம் ஜோலி என்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, ஜோலியைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைதுசெய்தனர்.

ஜோலி
ஜோலி

பல கட்ட விசாரணைக்குப் பின் ஜோலி, கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்த ஜோலி, இன்று அதிகாலை 4.30 மணியளவில் கை நரம்புகளைத் துண்டித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கிருந்த பிற கைதிகள் தகவல் அளித்ததன் பேரில், ஜோலி கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர், பிளேடு அல்லது கண்ணாடித் துண்டு மூலம் தனது கை நரம்புகளை அறுத்திருக்கலாம் என்றும், இது சிறையில் பாதுகாப்பற்ற தன்மையைக் காடுகிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கோழிக்கோடு மாவட்ட ஜெயில் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறும்போது, ``ஜோலி இருந்த பகுதியில் எந்த விதமான கூர்மையான பொருளையும் கண்டுபிடிக்கவில்லை. அவர், கை நரம்புகளைக் கடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம்" என்றார்.

அரசியல் கட்சித் தலைவரை சந்தித்த ஜோலி; 2-வது கணவரின் தலையீடு! -கேரள சீரியல் கொலையில் திடீர் திருப்பம்

இந்த நிலையில், பல்லால் நரம்பைக் கடித்து, ஜெயில் அறையில் இருந்த டைல்ஸின் ஓரத்தில் கையை அறுத்ததாகவும் ஜோலி தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் தொடர்ந்து விசாரணை நடத்துவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு