Published:Updated:

`கொலை நடந்தது எனக்கு தெரியும்.. ஆனால்?!'- கேரள சீரியல் கொலையில் சாஜு அதிர்ச்சி வாக்குமூலம்

சாஜூ,  ஜோலி
சாஜூ, ஜோலி

சிலி மற்றும் அவரது இரண்டு வயது குழந்தையை கொலை செய்தது சாஜுவுக்கு தெரியும் என ஜோலி தெரிவித்துள்ளார்.

கேரளாவையே உலுக்கிக்கொண்டிருக்கிறது ஜோலி என்ற 47 வயது பெண்ணின் வாக்குமூலம். சொத்துக்காக 16 வருடங்களாக தனது குடும்ப உறவுகளை விஷம் வைத்து கொலை செய்துவந்துள்ளார். இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால் தனது கணவர் உறவினர் இரண்டு வயது குழந்தை என தனக்கு தடையாக இருந்த யாரையும் இந்தப்பெண் விட்டுவைக்கவில்லை. ஜோலியின் கணவரின் சகோதர் ரோஜோ கோழிக்கோடு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜோலி
ஜோலி

தாமரசேரியில் தான் ஜோலி தனது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார். ஜோலியின் மாமியார் அன்னமா ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. மாமனார் டாம் தாமஸ் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். கணவர் ராய் தாமஸ். கணவரின் சகோதரர் ரோஜோ தாமஸ் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்த வீட்டில் நடந்த முதல் மரணம் அன்னமாவின் மரணம் இது நடந்தது 2002 -ம் ஆண்டு. வீட்டில் செல்வாக்கு மிக்க நபராக அன்னமா இருந்ததால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். வீட்டில் அதிகாரம் கிடைத்தாலும் பணத்தேவைக்கு மற்றவர்களை நாடவேண்டிய சூழல் தான் ஜோலிக்கு இருந்தது. குடும்ப சொத்தில் பங்கு கிடைக்கும் எனக் காத்திருந்தவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மாமனார் கொடுத்துவிட்டு இத்துடன் உங்கள் பங்கு முடிந்தது எனக் கூறியது ஏமாற்றத்தை கொடுத்தது. 2008-ம் மாமனாரை திட்டமிட்டு கொலை செய்தார். இந்த மரணத்தையும் வீட்டில் இருந்தவர்கள் இயற்கை மரணம் என எண்ணினர்.

அதிகாரமும் , பணமும் ஜோலிக்கு அளவுக்கதிமான சுதந்திரத்தை கொடுத்தது. நட்பு வட்டம் அதிகரித்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தான் ஒரு என்.ஐ.டி பேராசிரியை என்றே கூறிவந்துள்ளார். ஆனால் அவர் பியூட்டி பார்லரில் பணியாற்றி வந்தது தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ராய் தாமஸ்-க்கு தனது மனைவியின் நட்பு வட்டம் பிடிக்கவில்லை. அதனால் அவர் கண்டித்துள்ளார். கணவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார் 2011-ம் ஆண்டு ராய் தாமஸ் உயிரிழந்தார். இந்த மரணத்தின் போது தாமஸ் உடலில் விஷம் இருந்ததாக மருத்துவ அறிக்கை கூறியது. ஆனால் ஜோலி தனது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக சந்தேகம் கிளப்பிய கணவரின் மாமா மேத்தீவையும் அதே பாணியில் கொலை செய்தார்.

விஷம்
விஷம்

ஜோலிக்கு தனது கணவரின் சித்தப்பா மகன் சாஜூ மீது காதல் இருந்துள்ளது. சாஜூவைத் திருமணம் செய்துகொள்ள அவரின் மனைவி சிலி மற்றும் குழந்தை எனத் தன் மொத்த குடும்பத்துக்கும் தனித்தனியாக விஷம் வைத்துக் கொலைசெய்துள்ளார் ஜோலி. இத்தனை மரணங்களும் இயற்கையாக நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்ற சந்தேகம் ஜோலியின் கணவர் ராயின் சகோதரருக்கு எழுந்தது. அவர் தான் கோழிக்கோடு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த மரணங்கள் நிகழ்ந்த போது ஜோலி அருகில் இருந்தது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த வழக்கில் இறந்தவர்களின் உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய சமீபத்தில் தான் காவல்துறையினருக்கு அனுமதி கிடைத்தது. உடல்கள் தோண்டப்படும்போது, இறந்த ராயின் குடும்பத்தினர் அனைவரும் உடன் இருந்தனர். ஆனால், ஜோலி மட்டும் அங்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இறுதியில் காவல்துறையினர் விசாரணையில் சொத்துக்காக அனைவரையும் கொலை செய்ததை அவரே ஒப்புக்கொண்டார்.

அதிகாரம்... சொத்து... ஆசை... 6 பேர் கொலையில் போலீஸை மிரள வைத்த கேரள பெண்ணின் வாக்குமூலம்!

நகைக்கடையில் பணியாற்றும் மேத்தீவ் மற்றும் பிராஜி குமார் இருவரும் இந்த கொலைகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். இவர்கள் தான் தங்கத்தை பிரித்தெடுக்கும் சயனைடை ஜோலிக்கு கொடுத்துள்ளனர். இதனை உணவில் கலந்து கொடுத்து தான் இத்தனை கொலைகளையும் செய்ததாக காவல்துறையில் ஜோலி தெரிவித்துள்ளார். இந்த கொலைகளில் சாஜூவுக்கு பங்கு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகித்தனர். அவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று நீண்ட நேரம் விசாரணை செய்துவிட்டு பின்னர் அவரை அனுப்பிவிட்டனர். இந்நிலையில் அந்தப்பகுதியில் விசாரித்த போது கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜோலியின் முன்னாள் கணவர் இல்லத்தில் இருந்து சில ஆவணங்களை சாஜூ தனது வீட்டிற்கு கொண்டு வந்தது தெரியவந்தது. அதேபோல் சாஜூ முன்ஜாமீன் பெற முயன்றுவருவதாக ஒரு தகவல் வெளியானது.

`கொலை நடந்தது எனக்கு தெரியும்.. ஆனால்?!'- கேரள சீரியல் கொலையில் சாஜு அதிர்ச்சி வாக்குமூலம்

ஊடகங்களிடம் பேசிய சாஜூ இதனை திட்டவட்டமாக மறுத்தார். என் முதல் மனைவி சிலி அம்மை நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டது. சிலி மருத்துவமனையில் இருந்த போது தான் எனது இரண்டாவது மகள் உயிரிழந்தார். குழந்தை இறந்த சோகத்தால் அவள் தன்னையே வருத்திக்கொண்டாள். இதன்காரணமாக உடல்நிலை பாதிப்படைந்தது. இந்நிலையில் தான் அவர் உயிரிழந்தார். நோயால் தான் அவர் இறந்தாக நாங்கள் நம்பினோம்'' என்றார்.

`அபார நினைவுத் திறன்; 93 கொலைகள்; 50 ஆண்டுகள்!' - அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய சீரியல் கில்லர்

இந்நிலையில் காவல்துறையின் விசாரணையில் சிலி மற்றும் அவரது இரண்டு வயது குழந்தையை கொலை செய்தது சாஹூவுக்கு தெரியும் என ஜோலி தெரிவித்துள்ளார். இதனையடுத்து சாஜூ விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார். காவல்துறையினரின் விசாரணையில் கண்ணீருடன் தனது மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்ய உதவியதாக தெரிவித்துள்ளார். “நானும் ஜோலியும் திருமணம் செய்துக்கொள்ள எனது மனைவி மற்றும் குழந்தைகள் தடையாக இருப்பதாக ஜோலி கூறினார். இதனால் இருவரையும் கொலை செய்ய முடிவு செய்தோம். ஜோலி என் மூத்த மகனையும் கொலை செய்ய வேண்டும் என்றார். நான் தான் வேண்டாம் என்று தடுத்தேன். எனது குடும்பத்தினர் மகனை பார்த்துக்கொள்வார்கள் எனக் கூறி ஜோலியை சமாதானம் செய்தேன்” எனத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கைது
கைது

முதலில் அவர் இதனை நேரடியாக கூறவில்லை. “சில மரணங்கள் இயற்கையானது இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் வெளியில் சொல்ல பயமாக இருந்தது. நான் எதாவது கூறினால் ஜோலி என்னையும் கொலை செய்துவிடுவார் என்ற பயம் தான். நானும் அவரை முதலில் என்.ஐ.டி பேராசிரியை என்று தான் நினைத்தேன். என்னை ஜோலி பல தருணங்களில் பயமுறுத்தினார். அவருக்கு இருந்த தொடர்புகள் எனக்கு அச்சத்தை கொடுத்தது. என்னையும் அவள் கொலை செய்துவிடுவாள் பயந்தேன்” என கூறினார். பின்னர் கேரள காவல்துறையினரின் வழக்கமாக விசாரணையில் சாஹூ உண்மையை ஒப்புக்கொண்டார். சில அரசியல் பிரமுகர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஜோலியின் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ய நகைக்கடை ஊழியர்கள் ஏன் சைனைடு கொடுக்க வேண்டும். ஜோலிக்கு இவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

News Credits : mathrubhumi

அடுத்த கட்டுரைக்கு