Published:Updated:

மாயமான டெய்லர்.. மெளனம் காக்கும் ஜோலி - சீரியல் கொலையில் போலீஸுக்கு வலுக்கும் சந்தேகம்!

கேரள சீரியல் கொலையில் கைதான ஜோலியின் தோழி தொடர்பான தகவல்களை காவல்துறையினர் திரட்டி வருகின்றனர்.

ஜோலி
ஜோலி

கேரளாவில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த ஜோலி என்ற 47 வயதுப் பெண்ணை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர். காவல்துறையில் ஜோலி அளித்த வாக்குமூலம் போலீஸாரை அதிர்ச்சியடையவைத்தது. இந்தக் கொலைகள் கேரளாவையே அதிரச் செய்துள்ளன. இந்தக் கொலைகளை ஒரு பெண் சொத்துக்காகச் செய்தார் என்றால் நம்பமுடிகிறதா. வீட்டில் அதிகாரத்துக்காக மாமியார், சொத்துக்காக மாமனார், தனது சுதந்திரத்துக்கு இடையூறாக இருந்த கணவர், இந்த மரணங்களைச் சந்தேகப்பட்ட உறவினர் என அடுத்தடுத்து கொலைகளை அரங்கேற்றினார்.

விஷம்
விஷம்

ஜோலிக்கு அவரது உறவினர் சாஜூ மீது காதல் இருந்தது. இதன் காரணமாக அவரது பார்வை, உறவினரான சாஜூ குடும்பத்தின் மீது விழுந்தது. சாஜூவின் மனைவி மற்றும் 2 வயது மகளை கொலை செய்தார். அவரது மனைவி இறந்த அடுத்த வருடமே சாஜூவை திருமணம் செய்துகொள்கிறார். சயனைடு வைத்தே இந்தக் கொலைகளை அரங்கேற்றியுள்ளார்.

`கொலை நடந்தது எனக்கு தெரியும்.. ஆனால்?!'- கேரள சீரியல் கொலையில் சாஜு அதிர்ச்சி வாக்குமூலம்

2002-ல் இருந்து இந்தக் கொலைகளை அரங்கேற்றியுள்ளார். 17 வருடங்களாக 6 பேரை ஜோலி கொலை செய்துள்ளார். ஜோலிக்கு உதவியதாக நகைக்கடை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஜோலியின் இரண்டாவது கணவர் சாஜூவும் விசாரணை வளையத்தில் உள்ளார்.

கொலை செய்த ஜோலி
கொலை செய்த ஜோலி

காவல்துறையின் விசாரணையில் தனது மனைவி மற்றும் மகளை ஜோலி கொலை செய்தது தனக்கு தெரியும் என்று சாஜூ கூறியுள்ளார். இதை வெளியில் சொன்னால் ஜோலி என்னையும் கொன்றுவிடுவார் என பயமாக இருந்தது என போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். ஜோலி, இந்தக் கொலைகளைச் செய்ததை அவரது உறவினர்களும், நண்பர்களும் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர். எல்லோரிடமும் அன்பாகப் பழகுவாள், தவறாமல் சர்ச்சுக்குச் செல்வார். அவள் இப்படிச் செய்தாள் என்பதை நம்பமுடியவில்லை என அவரது தோழி பேசியிருந்தார்.

ஜோலி தான் ஒரு பேராசிரியை என்றும் என்.ஐ.டியில் பணிபுரிவதாகவும் தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். என்.ஐ.டி அடையாள அட்டையும் அவர் வைத்திருந்தார். போலீஸார் விசாரணையில் அவர் என்.ஐ.டியில் பணியாற்றவில்லை என்பது தெரியவந்தது. கோழிக்கோடு என்.ஐ.டி அருகில் உள்ள டெய்லர் கடையில் பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். அந்தப்பெண்ணுக்கு ஜோலிக்கும் இடையே நட்பு இருந்ததாகக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மாயமான டெய்லர்.. மெளனம் காக்கும் ஜோலி - சீரியல் கொலையில் போலீஸுக்கு வலுக்கும் சந்தேகம்!

ஜோலியின் செல்போனை ஆய்வு செய்ததில் அந்தப்பெண்ணுடன் அவர் எடுத்த புகைப்படங்கள் நிறைய உள்ளன. என்.ஐ.டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கும் இருவரும் சென்றுள்ளனர். அதில் ஜோலி என்.ஐ.டி அடையாள அட்டையை அணிந்துள்ளார். ஜோலி அந்தப்பெண் குறித்து எந்த விவரங்களையும் கூற மறுப்பதாகக் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

அந்த டெய்லர் கடை தற்போது இயங்கவில்லை. அந்தப்பெண்ணுக்கு இந்தக் கொலைகள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதேபோல் கோழிக்கோடு என்.ஐ.டி பகுதியில் ஜோலி நிலம் வாங்க கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை கொடுத்துள்ளார். இரண்டு முறை காசோலை வழங்கியுள்ளார். ஆனால், அந்த நபர் நிலத்தை வாங்கித்தரவில்லை. ஜோலி தொடந்து கேட்டு வந்ததையடுத்து பணத்தைத் திருப்பித் தந்துள்ளார்.

மாயமான டெய்லர்.. மெளனம் காக்கும் ஜோலி - சீரியல் கொலையில் போலீஸுக்கு வலுக்கும் சந்தேகம்!

தாமரச்சேரி முதன்மை நீதிமன்றத்தில் ஜோலி, மேத்தீவ், பிராஜி குமார் ஆகியோர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். ஜோலியின் வழக்கறிஞர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இதை நீதிமன்றம் ஒத்திவைத்தது. பிராஜி குமாரின் மனைவி மட்டும் சில நிமிடங்கள் அவரிடம் பேச அனுமதிக்கப்பட்டார். இந்த வழக்கில் மூவரும் சில விவரங்களைக் கூற மறுப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கு விசாரணை ஆரம்பத்திலிருந்தே மர்மாக உள்ளது. இந்த வழக்கில் தினம் தினம் வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி ரகமாக இருக்கின்றன.