Published:Updated:

`என் கணவர் தற்கொலைக்கு 12 பேர்தான் காரணம்!'- உறவினர்களால் உயிரை மாய்த்துக்கொண்ட தாய், மகன்

இந்த வழக்கில் பெயில் வாங்கிய பின், தன் தாயைத் தன்னுடன் டெல்லிக்கு அழைத்துச் சென்று தங்கியுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு குடிபெயர்ந்தாலும், இந்த வழக்கின் காரணமாகத் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்துவந்துள்ளார் ஆலன்.

தாய், மகன்
தாய், மகன்

டெல்லி கல்லூரியில் விரிவுரையாளராக வேலைபார்த்து வந்தவர் ஆலன் ஸ்டான்லி. 27 வயதாகும் இவர் டெல்லி பித்தம்புரா பகுதியில் தன் தாய் லிஸி (55) உடன் வசித்துவந்தார். இதற்கிடையே கடந்த சனிக்கிழமை ஆலன் சாரா ரோஹிலா ரயில் நிலைய டிராக்கில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இவரின் தற்கொலையை அடுத்து பித்தம்புரா பகுதியில் உள்ள அவரின் வீட்டுக்குச் சென்றபோது அங்கு லிஸியும் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டார். அடுத்தடுத்த மரணங்களைத் தற்கொலை என சந்தேகப்பட்டு போலீஸார், விசாரணை நடத்தினர். ஆனால், விசாரணையில் கிடைத்த தகவல்கள் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆலனே தன் தாயைக் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இதற்குக் காரணம் இவர்கள் குடும்பத்தை சுற்றிவரும் வழக்குதான்.

Suicide
Suicide

லிஸியின் சொந்த ஊர் கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள கிராமம். இவரின் முதல் கணவர் 2014-ம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இவர்களின் மகன்தான் ஆலன். ஹைதராபாத் கல்லூரியில் மாஸ்டர் டிகிரி முடித்த ஆலன் டெல்லியில் கடந்த ஐந்து வருடங்களாகத் தங்கி பிஹெச்.டி படித்துவந்தார். ஐ.ஐ.டி-யில் பிஹெச்.டி முடித்தவர் கடந்த வருடம்தான் டெல்லி கல்லூரியில் விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். சமீபகாலமாகத் தற்கொலை எண்ணம் குறித்து தன் நண்பர்களிடம் தொடர்ந்து பேசிவந்துள்ளார் ஆலன். அதற்கு மன அழுத்தம் மட்டும் காரணமில்லை. சில வருடங்களுக்கு முன்பு முதல் கணவர் உயிரிழக்கவும் லிஸி இரண்டாவதாக ஜான் வில்சன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

ஆனால், இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்தத் தற்கொலை குறித்தும் சொத்துகள் தொடர்பாகவும் ஆலன் மீதும் லிஸி மீதும் ஜானின் முதல் மனைவியின் பிள்ளைகள் புகார் கொடுத்துள்ளனர். இந்தப் புகாரை டிஸ்மிஸ் செய்யக்கோரி ஆலன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், நீதிமன்றம் அவர்களின் மனுவை ஏற்றுக்கொள்ளாததால் ஜான் மரணத்தை சந்தேகத்துக்குரிய மரணமாகப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பெயில் வாங்கிய பின், தன் தாயைத் தன்னுடன் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு குடிபெயர்ந்தாலும், இந்த வழக்கின் காரணமாகத் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்துவந்துள்ளார் ஆலன்.

Death
Death

இதனாலேயே ஐந்து நாள்கள் முன்பு தன் தாயைத் தற்கொலை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டார் என ஆலன் கூறியதாகவும் அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இவற்றையெல்லாம் வைத்து, ஆலன் தன் தாயைக் கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆனால், லிஸி தற்கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்துள்ள கடிதம் வேறு மாதிரியாக உள்ளது. மலையாளத்தில் எழுதியுள்ள அதில், ``என் கணவர் ஜானின் உயிரிழப்புக்கு நான் காரணமில்லை. அவரின் தற்கொலை குறித்து உறவினர்கள் எங்களை நிறையவே காயப்படுத்திவிட்டனர். எங்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். எங்களைத் தவிர மொத்தம் 12 பேர் ஜானின் உயிரிழப்புக் காரணம். இதில் பத்திரிகையாளர்களும் அடங்குவர்" எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் லிஸி உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதைப் பொறுத்தே இது தற்கொலையா, கொலையா என முடிவு செய்யப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ஆலனின் நண்பர் ஒருவர் இந்த விவகாரம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில், ``கடந்த ஆறு மாதங்களாக, ஆலன் மற்றும் அவரின் தாயார் சொத்து தகராறு தொடர்பான சட்டப் போராட்டங்களையும் ஆலனின் வளர்ப்புத் தந்தையின் தற்கொலை தொடர்பான விசாரணையையும் எதிர்கொண்டனர். இந்த வழக்குகள் அவர்களின் மனதை உடைத்திருந்தது. இருப்பினும், தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதில் உறுதியாக இருந்ததால், அவர்கள் அதைச் சட்டபூர்வமாக எதிர்த்துப் போராடவும், நீதித்துறை மீது நம்பிக்கை வைத்திருக்கவும் முடிவு செய்தனர்.

Crime
Crime

சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்த, கேரள பெண் ஜோலி நடத்திய சீரியல் கொலைகளுடன் ஆலனின் தந்தை ஜானின் மரணத்தையும் சேர்த்து கேரள ஊடகங்கள் எழுதிவந்ததையும் அடுத்து அவர் மிகுந்த மன அழுதத்துக்குச் சென்றார். தாயின் இரண்டாவது கணவர் இறப்பு குறித்து வெளியான கமென்டுகள் அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் தொடர்ந்து தற்கொலை குறித்தே பேசிவந்தார். இந்த அவமானம் ஆலனுக்கும் அவரின் தாய்க்கும் தாங்க முடியாதது. எங்களுடன் பேசிக்கொண்டிருந்த ஆலன் அக்டோபர் 15-க்குப் பிறகு தொடர்புகொள்வதை நிறுத்திவிட்டார். எங்கள் நண்பர்கள் மூலம் அவரை அணுக முயன்றோம். அவரும் அவரின் தாயும் எல்லா நம்பிக்கைகளையும் இழந்துவிட்டார்கள் என்பதைக் காண மட்டுமே அந்த முயற்சி உதவியது" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.