Published:Updated:

`கொலை.. தற்கொலை; கழுத்து அறுபட்ட நிலையில் அறையில் கிடந்த இருவர்!’- கேரளாவில் நடந்த துயரச் சம்பவம்

கேரளாவைச் சேர்ந்த மாணவி ஆஷிகா அதேப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Representation image
Representation image

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த காரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ஆஷிகா. இன்று காலை ஆஷிகாவின் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். ஆஷிகா கழுத்தறுபட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அதே அறையில் மற்றொரு வாலிபரும் கழுத்தறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலே இருவரும் உயிரிழந்துவிட்டனர்.

Representation image
Representation image

ஆஷிகாவின் வீட்டில் இருந்த இளைஞர் அதேபகுதியைச் சேர்ந்த அனு என்பது தெரியவந்துள்ளது. ஆஷிகாவுக்கும் அனுவுக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந்து பிரச்னையானதாகவும் இந்த நிலையில் ஆஷிகாவை அனு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

19 வயதான ஆஷிகா பியூட்டிஷன் கோர்ஸ் படித்து வந்துள்ளார். அனு தனியார் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்துள்ளார். இருவருக்கும் இடையே முன்பு பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஆஷிகாவின் பெற்றோருக்குத் தெரியவந்ததையடுத்து மகளைக் கண்டித்துள்ளனர். இதன் காரணமாக அனுவுடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்துள்ளார். ஆஷிகா தன்னுடன் பேசாத காரணத்தினால் தினமும் அவரைப் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

Representation image
Representation image

இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதுகுறித்து ஆஷிகாவின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து போலீஸார் பேசியுள்ளனர். இனிமேல் அவருக்குத் தொல்லை தர மாட்டேன் என போலீஸ் நிலையத்தில் அனு கூறியுள்ளார்.

ஆஷிகாவின் வீட்டுக்கு அருகில்தான் அனுவின் வீடு அமைந்துள்ளது. இன்று காலை 11 மணியளவில் அனு ஆஷிகாவின் வீட்டுக்குச் சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளார். ஆஷிகாவின் தந்தை பெயின்டராக உள்ளார். அவர் வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட்டார். அவரது தாயும் வெளியில் சென்றுள்ளார். வீட்டில் ஆஷிகா அவரது தாத்தா, பாட்டி மட்டுமே இருந்துள்ளனர். இந்நிலையில் ஆஷிகாவின் அறையில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. தாத்தா, பாட்டி இருவரும் சென்று பார்த்தபோது ஆஷிகா கழுத்தறுபட்ட நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அதே அறையில் அனுவின் கழுத்தறுபட்ட நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து இருவரையும் சிகிச்சைக்காக காரக்கோணம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

Representation image
Representation image

மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலே அந்தப்பெண் உயிரிழந்துவிட்டார். அனுவுக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலே அனுவும் உயிரிழந்துவிட்டார். `அனு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனுக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அனு இப்படிச் செய்வான் என எதிர்ப்பார்க்கவில்லை’ என்கின்றனர் அப்பகுதி மக்கள்.