அரசியல்
அலசல்
Published:Updated:

திருமண தோஷத்தை கழிக்க கல்லூரி மாணவன் கொலை? - குமரியை அதிரவைக்கும் குளிர்பான மரணங்கள்!

ஷாரோன் ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷாரோன் ராஜ்

கிரீஷ்மா கொடுத்த ‘குளிர்பான’த்தைக் குடித்துவிட்டு வெளியே வந்த ஷாரோன் ராஜ், அடுத்த சில நிமிடங்களில் வாந்தி எடுத்திருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்ததால் 6-ம் வகுப்பு மாணவன் அஸ்வின் மரணமடைந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்துவருகிறது. அந்த வழக்கின் மர்மங்கள் விலகும் முன்பே, கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஷாரோன் ராஜ், களியக்காவிளையைச் சேர்ந்த காதலி கொடுத்த கஷாயம் மற்றும் ஜூஸைக் குடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம், பாறசாலையைச் சேர்ந்த ஜெயராஜன் - பிரியா தம்பதியின் மகனான ஷாரோன் ராஜ், கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்நகர் அருகேயுள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி ரேடியாலஜி இறுதியாண்டு படித்துவந்தார். பேருந்துப் பயணத்தின்போது களியக்காவிளை ராமன்சிறைப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஓராண்டாக அந்த மாணவியும், ஷாரோன் ராஜும் காதலித்துவந்தனர்.

திருமண தோஷத்தை கழிக்க கல்லூரி மாணவன் கொலை? - குமரியை அதிரவைக்கும் குளிர்பான மரணங்கள்!

ஷாரோன் ராஜின் ரெக்கார்ட் நோட்டுகளை கிரீஷ்மா எழுதிக் கொடுப்பது வழக்கம். கடந்த அக்டோபர் 14-ம் தேதி கிரீஷ்மா அழைத்ததன்பேரில் ரெக்கார்ட் நோட்டுகளை வாங்க கிரீஷ்மா வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கே கிரீஷ்மா கொடுத்த ‘குளிர்பான’த்தைக் குடித்துவிட்டு வெளியே வந்த ஷாரோன் ராஜ், அடுத்த சில நிமிடங்களில் வாந்தி எடுத்திருக்கிறார். அன்றைய தினமே வாயில் கொப்புளத்துடன் பாறசாலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷாரோன் ராஜ், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அங்கே அவரது சிறுநீரகம், கல்லீரல் போன்ற உள் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்து கடந்த 25-ம் தேதி இறந்தார்.

ஷாரோன் ராஜுக்கு கஷாயமும், ஜூஸும் கொடுத்த கிரீஷ்மாவின் வீடும் களியக்காவிளை பகுதி என்பதால், ஏற்கெனவே குளிர்பானம் குடித்து இறந்துபோன பள்ளி மாணவன் வழக்குக்கும், இந்தச் சம்பவத்துக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் மருத்துவர்கள் முதலிலேயே போலீஸுக்குத் தகவல் தெரிவித்துவிட்டனர். அதனால், கடந்த 20-ம் தேதி சிகிச்சையில் இருக்கும்போது ஷாரோன் ராஜிடம் மாஜிஸ்ட்ரேட் ரகசிய வாக்குமூலம் பெற்றார். அதில், “கிரீஷ்மா வீட்டில்வைத்து கஷாயமும் ஜூஸும் குடித்தது உண்மைதான். கிரீஷ்மா மீது எனக்குச் சந்தேகமே இல்லை. அவள் அப்படிச் செய்ய மாட்டாள். நானும் அவளும் மிகவும் பாசமாக இருந்தோம். அவள் என்னைச் சாகடிக்கும்படி நடந்துகொள்ள மாட்டாள்” என நம்பிக்கையுடன் கூறியிருந்தார் ஷாரோன் ராஜ்.

ஆனால், ஷாரோன் ராஜ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் பெற்றோர் பாறசாலை காவல் நிலையத்தில் புகார் செய்ததால், வழக்கு திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. கடந்த 30-ம் தேதி குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து ஷாரோன் ராஜைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் கிரீஷ்மா.

ஷாரோன் ராஜ்
ஷாரோன் ராஜ்

இது பற்றி போலீஸ் தரப்பில் பேசினோம். ‘‘விசாரணையை தைரியமாக எதிர்கொண்ட கிரீஷ்மா, ‘நான் குடித்த அதே கஷாயத்தைத்தான் ஷாரோன் ராஜுக்குக் கொடுத்தேன்’ என திரும்பத் திரும்பக் கூறிவந்தார். இரண்டு முறை நடத்திய விசாரணையிலும் சந்தேகம் ஏற்படாத வகையில் நடந்துகொண்டார். அக்டோபர் 29-ம் தேதி கிடைத்த மருத்துவப் பரிசோதனை ரிப்போர்ட்படி ஷாரோன் நீலமும் பச்சையும் கலந்த நிறத்தில் வாந்தி எடுத்திருப்பதால் ‘துருசு’ என்ற பூச்சி மருந்துப்பொடியை சாப்பிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. எனவே, முன்கூட்டியே கேள்விகளைத் தயாரித்து அக்டோபர் 30-ம் தேதி பெற்றோருடன் சேர்த்தும், தனியாகவும் விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை கிரீஷ்மா ஒப்புக்கொண்டார்” என்ற போலீஸாருக்கு இன்னும் சில சந்தேகங்கள் உள்ளன.

“கிரீஷ்மா அவரின் பெற்றோருக்கு ஒரே மகள். அவர் ஜாதகப்படி முதல் கணவர் இறந்துவிடுவார் என்று தெரியவந்திருக்கிறது. அதனால் முறைப்படி திருமணம் செய்யும் முன்பு திருமண தோஷத்தைப் போக்க முதலில் யாரையாவது ரகசியமாகத் திருமணம் செய்து பலிகடா ஆக்க முடிவு செய்திருக்கிறார் கிரீஷ்மா. அதன்படி ஷாரோன் ராஜைக் காதலித்த ஓராண்டுக்குள் அவர் கையாலேயே ரகசியமாக மஞ்சள்தாலியும் கட்டிக்கொண்டார். பிறகு திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. அதனால்தான் பலமுறை ‘ஜூஸ் சேலஞ்ச்’ என்ற பெயரில் ஷாரோன் ராஜை ஜூஸ் குடிக்கவைத்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாக எதையாவது கலந்து கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

ஆனால், இது பற்றி விசாரித்தபோது, ‘தனக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமாகிவிட்டதால், ஷாரோன் ராஜை விலக வைப்பதற்காகவே ஜாதக தோஷம் எனப் பொய் சொன்னதாக’ கிரீஷ்மா சொல்கிறார். மேலும், ஷாரோன் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், விவசாயத்துக்குப் பயன்படுத்தும் பூச்சி மருந்தைக் கஷாயத்தோடு கலந்து கொடுத்து, ‘இது பயங்கர கசப்பாக இருக்கிறது... உன்னால் குடிக்க முடியுமா?’ என்று சவால்விட்டு அவரைக் குடிக்கவைத்ததாகவும், பிறகு கசப்பு சுவை மாற குளிர்பானம் கொடுத்து அனுப்பிவைத்ததாகவும் கிரீஷ்மா கூறுகிறார். அவரைக் காவலில் எடுத்து விசாரித்தால்தான் முழு விவரமும் தெரியவரும்” என்றனர்.

திருமண தோஷத்தை கழிக்க கல்லூரி மாணவன் கொலை? - குமரியை அதிரவைக்கும் குளிர்பான மரணங்கள்!

ஷாரோன் ராஜ் மரணத்துக்கு கேரள போலீஸ் விடை கண்டுபிடித்துவிட்டது. மாணவன் அஸ்வின் மரண மர்மத்தைக் கண்டுபிடிக்குமா தமிழ்நாடு போலீஸ்?