Published:Updated:

`ரிங் மட்டும் போகிறது; போனை எடுக்கவில்லை'- குறைவான மதிப்பெண்ணால் சென்னை ஐஐடி மாணவி தற்கொலை?

சென்னை ஐஐடியில் முதலாமாண்டு படித்து வரும் கேரள மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை
தற்கொலை

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடியில் எம்.ஏ.முதலாமாண்டு படித்து வந்தார். ஐஐடி வளாகத்தில் உள்ள சராவியு பெண்கள் விடுதியில் மாணவி தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று காலை மாணவியின் செல்போனுக்கு அவரது தாய் அழைத்துள்ளார். பல முறை போன் செய்துள்ளார். ரிங் மட்டும் போகிறது. ஆனால் மாணவி போனை எடுக்கவில்லை. இதனையடுத்து பக்கத்து அறையில் இருக்கும் மாணவிக்கு அழைத்துள்ளார். பாத்திமாவுக்கு போன் செய்தேன் ரிங் ஆகிறது. நீண்ட நேரமாக போனை எடுக்கவில்லை என்ற விவரத்தை கூறியுள்ளார். இதனையடுத்து அந்த மாணவி பாத்திமாவின் அறைக்கு சென்று பார்த்துள்ளார். அறை கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் பாத்திமாவிடம் இருந்து பதிலில்லை. இதனையடுத்து விடுதியில் இருந்த மற்ற மாணவிகளிடம் தகவலை தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

அதன்பின் மாணவிகள் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் பாத்திமா சடலமாக கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் உடனடியாக காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஐஐடி-க்கு விரைந்த கோட்டூர்புரம் போலீஸார் பாத்திமா லத்தீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி மரணம் குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஐடியில் கடந்த வாரம் உள் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வில் பாத்திமா குறைவான மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்து காணப்பட்டார் என கூறப்படுகிறது.