Published:Updated:

மஞ்சக்கட்டி மலையில் மாவோயிஸ்ட்டுகள்; தடுத்த பெருமழை! - கேரள துப்பாக்கிச் சூட்டின் பின்னணி

கொல்லப்பட்ட நான்கு பேரில் ஸ்ரீமதி என்ற பெண்ணைத் தவிர மற்ற மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தண்டர்போல்ட் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தண்டர்போல்ட் போலீஸார்
தண்டர்போல்ட் போலீஸார் ( mathrubhumi )

கேரள மாநிலம் வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட வனப்பகுதி மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியாகும். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இந்தியாவில் உள்ள 30 மாவட்டங்களுக்கு மாவோயிஸ்ட்டுகளால் ஆபத்து ஏற்பட உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இதில் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு மாவோயிஸ்ட்டுகளால் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை கேரள அரசுக்குத் தகவல் அனுப்பியது. இதனிடையே, பாலக்காடு மாவட்டம் மஞ்சக்கட்டி மலைப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பதாக கேரள அதிரடிப்படையான தண்டர்போல்ட் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

மணிவாசகம், கார்த்தி, ஸ்ரீமதி, சுரேஷ்
மணிவாசகம், கார்த்தி, ஸ்ரீமதி, சுரேஷ்

இதையடுத்து, திங்கள்கிழமை காலை 50 போலீஸார் அவர்களை பிடிக்க துப்பாக்கியுடன் சென்றனர். போலீஸார் வந்ததையறிந்த மாவோயிஸ்ட்டுகள், அவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. பதிலுக்கு போலீஸாரும் சுட்டனர். சுமார் ஒரு மணி நேரம் சண்டை நீடித்தது. தண்டர்போல்ட் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பெண் உட்பட 3 மாவோயிஸ்ட்டுகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு மறுநாள் நடந்த துப்பாக்கிச்சூட்டிலும் மணிவாசகம் என்ற மாவோயிஸ்ட் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட நான்கு பேரில் ஸ்ரீமதி என்ற பெண்ணைத் தவிர மற்ற மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தண்டர்போல்ட் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குகையில் துரத்திய மோப்ப நாய்; கண்ணீர்விட்டு கதறல்; சிதறிய குண்டுகள்!- பக்தாதியின் கடைசி நிமிடங்கள்

இதற்கிடையே மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. கேரள மாநிலம் அட்டப்பாடி வனம் தமிழ்நாடு, கேரளம், கர்நாடக என மூன்று மாநில எல்லைகளையொட்டிய அடர் வனப்பகுதி. இந்தப் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கடந்த சில வருடங்களாக அறியப்பட்டது. சில மாவோயிஸ்ட்டுகள் இந்தப் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டும் சுட்டுக் கொல்லப்பட்டும் உள்ளனர்.

இந்தநிலையில்தான் கடந்த வியாழக்கிழமை பாலக்காடு, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு மாவோயிஸ்ட்டுகளால் அச்சுறுத்தல் ஏற்பட உள்ளதாக மத்திய உளவுத்துறை சார்பில் எச்சரிக்கை வெளியாகி இருந்தது.

கொல்லப்பட்ட பெண் ஸ்ரீமதி
கொல்லப்பட்ட பெண் ஸ்ரீமதி

இந்த எச்சரிக்கையை அலர்ட்டாக எடுத்துக்கொண்ட கேரள அரசு, தீவிரவாதத் தாக்குதலை தடுக்க உருவாக்கப்பட்ட தண்டர்போல்ட் எனப்படும் ஸ்பெஷல் போலீஸ் படையைக் களமிறக்கியுள்ளது. இந்தப் படைக்கு ஏற்கெனவே பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட மலைப்பகுதியில் உள்ள மாவோயிஸ்ட்டுகளுடன் சண்டையிட்ட அனுபவம் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் மஞ்சக்கட்டி மலைப்பகுதியில் மணிவாசகம் தலைமையில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைக்க அங்கு சென்ற போலீஸார் சுற்றிவளைத்துள்ளனர். மொத்தம் ஏழு மாவோயிஸ்ட்டுகளில், முதலில் மூன்று பேர் உயிரிழக்க, நான்கு பேர் தப்பியோடியுள்ளனர்.

Vikatan

இறந்த மணிவாசகம் தமிழகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இவரது தலைமையிலான மாவோயிஸ்ட் குழு ஒருவாரத்துக்கு மேல் ஒரு இடத்தில் தங்குவதில்லை என்றும் இதனால் அவர்களைப் பிடிப்பதில் சிரமமும் குழப்பமும் ஏற்பட்டதாகவும் தண்டர்போல்ட் போலீஸார் தெரிவித்ததாக கேரள ஊடகமான மாத்ருபூமி செய்தி வெளியிட்டுள்ளது. மணிவாசகம் தலைமையிலான மாவோயிஸ்ட் குழு, கடந்த 22-ம் தேதியில் இருந்து மஞ்சக்கட்டி மலைப்பகுதியில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபகாலமாக பெய்துவரும் வடமேற்குப் பருவமழை அவர்களின் அடுத்த பயணத்தை தடுத்ததால் அங்கேயே தங்கியுள்ளனர். பழங்குடியின மக்கள் தொடர்பில்லாமல் காட்டில் தங்குவதற்காக இந்தக் குழு சிறப்புப் பயிற்சிகள் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தண்டர்போல்ட் போலீஸார்
தண்டர்போல்ட் போலீஸார்

ஆனால், கடும் மழையினால் அவர்கள் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று தங்களுக்கான உணவு பொருள்களைப் பெற்றுள்ளனர். அதுவே இவர்களுக்கும் பழங்குடியின மக்களுக்குமான உச்சக்கட்ட தொடர்பாக இருந்துள்ளது.

கேரளா - தமிழக காவல்துறையினர் நீண்ட காலமாக இவர்களை கைது செய்ய முயற்சி செய்து வந்த நிலையில், வன அதிகாரிகளின் கேமராக்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து வனப்பகுதியில் தங்களது நடமாட்டத்தை இவர்கள் அரங்கேற்றியுள்ளனர். தேடுதல் வேட்டையின்போது அடிக்கடி அட்டப்பாடி வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களின் சுவரொட்டிகளைக் காண முடிந்தது. எனினும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில், பருவமழையை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு மஞ்சக்கட்டி மலைப்பகுதியிலேயே தங்க முயன்ற நிலையில் தண்டர்போல்ட் போலீஸ் படை அதிரடியாக நுழைந்து அவர்களை சுட்டுக்கொன்றுள்ளது.

Vikatan

போலி என்கவுன்டர் சர்ச்சை!

இதற்கிடையே இந்த என்கவுன்டர் தொடர்பாக சில சர்ச்சைகளும் எழுந்துள்ளன. தண்டர்போல்ட் போலீஸ் வருவதை அறிந்த மாவோயிஸ்ட் குழுவினர் போலீஸிடம் சரணடைய தயாராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாவோயிஸ்ட் குழுவுக்கும் போலீஸுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால் சரண்டர் அடைய தயாராக இருந்தும் மாவோயிஸ்ட்டுகளை வேண்டுமென்றே தண்டர்போல்ட் போலீஸ் சுட்டுக்கொன்றது என்று தைகுலம் ஆதிவாசி சங்கத் துணைத் தலைவர் சிவானி என்பவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த விவகாரம் கேரள சட்டசபையில் எதிரொலிக்க இதை மறுத்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், ``அட்டப்பாடி காடுகளுக்குள் மஞ்சக்கட்டி பகுதியில் தண்டர்போல்ட் போலீஸ் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்களுக்கு எதிராக எதிர்பாராத துப்பாக்கிச் சூடு நடந்தது. அவர்கள் தற்காப்புக்காக மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில்தான் அவர்கள் கொல்லப்பட்டனர். இது ஒரு தற்காப்பு நடவடிக்கையே" எனக் கூறியுள்ளார். பினராயி விளக்கத்தைக் கடுமையாக விமர்சித்துள்ள கேரள எதிர்க்கட்சிகளோ, `இந்த என்கவுன்டர் முன்பே திட்டமிடப்பட்ட ஒன்று' எனக் கடும் கண்டனங்களைத் தெரிவித்து உள்ளன.

news credit - mathrubhumi

Vikatan