`16 ஆண்டுக்கால நட்பு... எமனாக வந்த ஹீட்டர்!’ - 8 பேர் மரணம் குறித்து விவரிக்கும் ரிசார்ட் ஊழியர்

சுற்றுலாவுக்காக நேபாளம் சென்றவர்கள் மரணம் அடைந்தது கேரள மாநிலத்தை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பிரவீன் நாயர், ரஞ்சித் குமார் இருவரும் கல்லூரி கால நண்பர்கள். என்ஜினீயரிங் படிக்கும்போது இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்கள் இணைபிரியா நண்பர்களாகிவிட்டனர். 2004-ம் ஆண்டு கல்லூரி படிப்பை நிறைவு செய்த பிரவீன் நாயர் குடும்பத்துடன் துபாயில் செட்டிலாகிவிட்டார். ரஞ்சித் திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். மேலும், இவர்களின் கேங்கில் உள்ள இரண்டு நண்பர்கள் டெல்லியில் வசித்து வருகின்றனர். சுமார் 16 ஆண்டுக்கால நட்பை நினைவுபடுத்தும் விதமாக நண்பர்களுக்குள்ளே ரீயூனியனுக்கு பிளான் செய்துள்ளனர். நண்பர்கள் அனைவரும் குடும்பத்துடன் நேபாளம் செல்லலாம் என முடிவெடுத்து கடந்த வாரம் சென்றுள்ளனர். 4 குடும்பத்தைச் சேர்த்து மொத்தம் 15 பேர் சென்றுள்ளனர்.

நேபாளத்தின் டாமன் நகரில் உள்ள எவரெஸ்ட் பனோரமா ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். காலை உணவுக்காக 8 மணியளவில் ரிசார்ட்டில் இருந்து போன் செய்துள்ளனர். அறையில் இருந்து எந்தப் பதிலும் இல்லாததால் உடனடியாக அங்கு சென்று பார்த்துள்ளனர். கதவுகள் உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதையடுத்து அருகில் தங்கியிருந்த நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்களுக்கு எதுவும் தெரியததால் கதவுகளை உடைத்துக்கொண்டு ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது பிரவீன் நாயர், அவரின் மனைவி சரண்யா, இவர்களுடைய மூன்று குழந்தைகள் மற்றும் ரஞ்சித் குமார், அவரின் மனைவி இந்து மற்றும் 2 வயது மகன் 8 பேரும் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
8 பேரும் மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரிசார்ட் நிர்வாகம் காவலர்களின் உதவியை நாடியது. டாமன் பகுதி காத்மண்டுவில் இருந்து 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதையடுத்து விமானம் மூலம் அவர்கள் காத்மண்டுவில் உள்ள மருத்துவமனைக்கு 9 மணியளவில் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த மரணம் கேரள மாநிலத்தை சோகத்தில் முழ்கடித்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் அவர்கள் அறையில் இருந்த ஹீட்டர் செயலிழந்ததால் அதில் இருந்த கார்பன் மோனாக்சைடு வெளியேறி அவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே இறப்புக்கான காரணங்கள் தெரியவரும். பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர் அவர்களின் உடல்கள் விமானம் மூலம் கேரளாவுக்குக் கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது. சுற்றுலா சென்றவர்களில் இருவர் மட்டும் அங்கு தங்கியுள்ளனர் மற்றவர்கள் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். உயிரிழந்த குடும்பத்தினருக்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ரிசார்ட்டில் 8 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழு ஒன்று நேபாள அரசால் நியமிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமையன்று டாமன் பகுதியில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. அறையில் குளிர் அதிகமாக இருந்ததால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஹீட்டர் வாங்கிச் சென்றுள்ளனர். ரிசார்ட் ஊழியர்களே ஹீட்டரைக் கொண்டு சென்று பொருத்தியுள்ளனர். இதையடுத்து மற்றொரு குடும்பத்தினரும் குளிர் தாங்க முடியாமல் அவர்களுடன் இணைந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. நான்கு குடும்பத்தினர் தனித்தனி அறைகள் புக் செய்திருந்த நிலையில் இரண்டு குடும்பங்கள் ஒன்றாகத் தங்கியுள்ளனர்.

இதுகுறித்து ஹோட்டல் மேனேஜர் காத்மண்டு போலீஸாரிடம் கூறியதாவது, ``மொத்தமாக நான்கு அறைகளை புக் செய்திருந்தனர். ஒரு அறையில் 8 பேர் தங்கியிருந்தனர். மற்றவர்கள் பிற அறைகளில் தங்கியிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தன. இரவு ரிசார்ட்டில் இருந்த உணவகத்தில் ஸ்நாக்ஸ் ஆர்டர் செய்திருந்தனர். இரவு 10.30 மணிக்கு டின்னர் முடித்துவிட்டு இரண்டு அறைகளில் தங்கியிருந்தவர்கள் மட்டுமே சென்றனர். மற்றவர்கள் இங்கே ரெஸ்ட்டாரன்டில் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
ரிசார்ட் அறைகளில் ஹீட்டர்கள் எதுவும் இல்லை. அதிகப்படியான குளிராக இருக்கிறது. குழந்தைகளை வைத்திருப்பதால் எங்களுக்கு ஹீட்டர்கள் வேண்டும் எனக் கேட்டனர். நாங்கள் முதலில் மறுப்பு தெரிவித்தோம். உணவகத்தில் பயன்படுத்தப்படும் ஹீட்டரை அறைக்குக் கொண்டு செல்ல தொடர்ந்து எங்களை வற்புறுத்தினர். இரவு 2 மணியளவில் ஹீட்டரை வாங்கிக்கொண்டு அறைக்குச் சென்றனர்'' எனத் தெரிவித்துள்ளார்.