Published:Updated:

இரண்டு முறை பாம்பு கடி... விசாரணை வளையத்தில் கணவன்! -கேரள பெண் மரணத்தில் சர்ச்சை

பாம்பு கடித்ததால் இறந்த உத்ரா
பாம்பு கடித்ததால் இறந்த உத்ரா

கணவன் வீட்டில் வைத்து பாம்பு கடிப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பே படுக்கை அறை அருகில் உத்ரா ஒரு பாம்பைப் பார்த்துள்ளார். உத்ரா சத்தம் போட்டு அலறியதைத் தொடர்ந்து அங்கு வந்த சூரஜ், பாம்பை வெறும் கைகளால் பிடித்து சாக்குப் பையில் போட்டு எடுத்துச்சென்றுள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அஞ்சல் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் உத்ராவுக்கும் தனியார் கம்பெனியில் கிளர்க் வேலை செய்யும் சூரஜ் என்பவருக்கும் 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில், கடந்த மாதம் பறக்கோடு பகுதியில் உள்ள வீட்டில் இரவு கணவனுடன் தூங்கிக்கொண்டிருந்த உத்ரா, காலில் ஏதோ கடித்ததாக சத்தம்போட்டு அலறினார். இதனால் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். மருத்துவர்கள் சோதித்ததில், அவரை அணலி வகை பாம்பு கடித்திருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, திருவல்லாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் உத்ரா சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். 16 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு டிஜ்சார்ஜ் ஆன உத்ராவுக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்பட்டதால், தன் தாய் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி மீண்டும் பாம்பு கடித்ததால் மரணமடைந்தார். பாம்புகடித்து சிகிச்சையில் இருந்த இளம்பெண் மீண்டும் பாம்பு கடித்ததில் இறந்த சம்பவம் கேரளத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

பாம்பு
பாம்பு
மாதிரி படம்

இந்த நிலையில், உத்ராவின் உறவினர்கள் அஞ்சல் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தனர். அதில், உத்ரா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது கணவன் வீட்டுக்கு வந்து சென்ற பிறகுதான் இரண்டாவது முறையாக பாம்பு கடித்து மரணமடைந்தார் என்றும், இதுகுறித்து விசாரணை நடத்க வேண்டும் எனவும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து உத்ராவின் உறவினர்கள் கூறுகையில், "உத்ரா இருந்தது இரண்டாவது மாடியில் உள்ள ஏ.சி அறை. அந்த அறையின் ஏர்ஹோல் முதல் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. ஜன்னல்கள் எதுவும் திறக்கும் வழக்கம் இல்லை. உத்ரா மரணம் அடைவதற்கு முன் தினம் அவரது கணவர் சூரஜ் அங்கு வந்தார்.

அன்று இரவு இருவரும் ஒரே அறையில்தான் படுத்திருந்தார்கள். சூரஜ் மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கே எழுந்து வெளியில் சென்றுவிட்டார். உத்ராவை அவரது அம்மா எழுப்பியபோது அவரிடம் அசைவு இல்லை. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது காலில் பாம்பு கடித்ததற்கான அடையாளம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் சென்று பார்த்தபோது டிரெஸ்ஸிங் ரூமில் மூர்க்கன் வகை பாம்பு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உத்ராவின் கணவர் சூரஜ்
உத்ராவின் கணவர் சூரஜ்

உத்ரா இறந்துவிட்டது தெரிந்ததும் அங்கிருந்த சூரஜ் நடந்துகொண்ட விதம் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கணவன் வீட்டில் வைத்து முதன்முறை பாம்பு கடிப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பே படுக்கை அறை அருகில் உத்ரா ஒரு பாம்பை பார்த்துள்ளார். உத்ரா சத்தம் போட்டு அலறியதைத் தொடர்ந்து அங்கு வந்த சூரஜ், பாம்பை வெறும் கைகளால் பிடித்து சாக்குப் பையில் போட்டு எடுத்துச்சென்றுள்ளார். இந்தச் சம்பவத்தை உத்ரா ஏற்கெனவே கூறியிருந்தார்.

``நள்ளிரவில் குரைத்த நாய்; கழிவறைக்குச் சென்ற பெண் பாம்பு கடித்து பலி" - சென்னையில் சோகம்

திருமணத்தின்போது 100 பவுன் நகைகள், ஐந்து லட்சம் ரூபாய், கார், நிலம் ஆகியவை சீதனமாகக் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் சூரஜ் வரதட்சணை கேட்டு, மனத்தளவில் உத்ராவுக்கு டார்ச்சர் கொடுத்திருக்கிறார். இதனால் திட்டமிட்டு சூரஜ் இந்தச் சம்பவத்தை நடத்தியிருக்கலாம்" என்றனர். ஏற்கெனவே, வெறும் கையால் பாம்பை பிடித்த சூரஜ், பாம்புகளை கையாளும் வித்தை படித்திருக்கலாம் என்ற சந்தேகத்தை உறவினர்கள் எழுப்பியுள்ளனர். போலீஸ் விசாரணையில் இந்த வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழும்" என்றனர். இந்தப் புகாரால், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு