Published:Updated:

`திருமணமாகி வெளிநாடு சென்றார்; தகவல் இல்லை!’ - ஆப்கனில் சரணடைந்த ஐ.எஸ் குழுவில் கேரளப் பெண்

`ஆப்கானிஸ்தானில் சரணடைந்த குழுவினரின் புகைப்படத்தில் புர்கா அணிந்த பெண்ணின் மடியில் என் பேரனும் பேத்தியும் இருப்பதைக் கண்டேன். அது என் மகள் நிமிஷா பாத்திமா தான்' என்கிறார் அவரின் தாய் பிந்து.

நிமிஷா பாத்திமா
நிமிஷா பாத்திமா

ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அச்சுறுத்தல் காரணமாக ஐ.எஸ் அமைப்பில் இணைந்தவர்கள் சரணடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அஷின் மாகாணத்தில் சரணடைந்த 22 பேர் குழுவில் 10 பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து அவர்களை அடையாளம் காண என்.ஐ.ஏ விசாரணை தொடங்கியது. சரணடைந்தவர்கள் குறித்த விபரங்களை என்.ஐ.ஏ வெளியிடவில்லை. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் சரணடைந்த ஐ.எஸ் அமைப்பின் குழுவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிமிஷா பாத்திமா என்ற பெண்ணும் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.எஸ்
ஐ.எஸ்
Representational image

இந்தத் தகவலை நிமிஷா பாத்திமாவின் தாய் பிந்து உறுதி செய்துள்ளார். மேலும், குழுவின் புகைப்படத்தைப் பார்த்து, `அது நிமிஷா பாத்திமா' என என்.ஐ.ஏ-விடம் அடையாளம் காட்டியுள்ளதாகவும் பிந்து தெரிவித்தார்.

பாலக்காட்டைச் சேர்ந்த ஈஸா என்பவரை திருமணம் செய்த நிமிஷா பாத்திமா கணவருடன் 2017-ம் ஆண்டு வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். அதன்பின்னர் அவரைப் பற்றி விவரம் எதுவும் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.

Vikatan

இதுகுறித்து, நிமிஷா பாத்திமாவின் தாய் பிந்து கூறுகையில், ``என்.ஐ.ஏ சார்பில் சில புகைப்படங்கள் காட்டப்பட்டன. அதில் என் மகள், மருமகன் ஆகியோர் இருப்பதை அடையாளம் காட்டினேன். என் மருமகனின் தாயும் அந்தப் புகைப்படத்தில் அவர் இருப்பதை உறுதி செய்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் புர்கா அணிந்த பெண்ணின் மடியில் என் பேரனும் பேத்தியும் இருப்பதைக் கண்டேன். அது என் மகள் நிமிஷா பாத்திமா என்பதை உறுதிசெய்தேன். 2017-ம் ஆண்டு வெளிநாட்டுக்குச் சென்றவள், 2018 ஜூன் முதல் நவம்பர் வரை மெசேஜ் மற்றும் பேரக்குழந்தைகளின் வாய்ஸ் மெசேஜ், புகைப்படம் ஆகியவற்றை அனுப்பிவைத்தாள்.

நிமிஷா பாத்திமாவின் தாய் பிந்து
நிமிஷா பாத்திமாவின் தாய் பிந்து

நவம்பர் 26-க்குப் பிறகு எந்த மெசேஜும் வரவில்லை. அதன்பிறகு நடந்த பிரச்னைகளில் பலர் இறந்ததாகத் தகவல் வந்தது. ஆனால், என் மருமகன் உள்ளிட்டோரின் டெலிகிராம் ஆஃப் லைவில் இருந்ததால் அவர்களுக்கு ஆபத்தில்லை என்பதை உணர்ந்தேன். அன்று முதல் இன்றுவரை என்.ஐ.ஏ எங்களுக்கு உறுதுணையாக உள்ளது. என் மகள் உயிரோடு இருப்பதாகத் தகவல் கிடைத்ததால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ஒருபக்கம் நடக்கட்டும்" எனக் கூறியிருக்கிறார்.