Published:Updated:

`'அயன்' பட பாணியில் தலையில் மறைத்து எடுத்துவரப்பட்ட தங்கம்!’- 'விக்'கால் சிக்கிய கேரள வாலிபர்

கொச்சி விமான நிலையத்தில், தங்கம் கடத்தி வந்த வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

Smugling
Smugling

தங்கத்திற்கு உலகம் முழுவதும் நல்ல மார்க்கெட் இருக்கிறது. இந்திய விமான நிலையங்களில் தங்கம் கடத்தி வந்து பிடிப்படுவது வாடிக்கைதான். ஒவ்வொரு முறையும் கடத்தல்காரர்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு, தங்கத்தைக் கடத்திவருகிறார்கள். சுங்கத்துறை அதிகாரிகளின் தீவிர முயற்சியால் அவை முறியடிக்கப்படுகின்றன. இந்திய சினிமாவில், பல கேங்ஸ்டர் படங்கள் இந்தக் கடத்தலை மையப்படுத்திதான் எடுக்கப்படுகின்றன.

அயன் படத்தில் சூர்யா
அயன் படத்தில் சூர்யா

சூர்யா நடிப்பில் வெளியான 'அயன்' படத்தில், கடத்தல் தொடர்பாக நிறைய காட்சிகள் இருக்கும். விமான நிலையத்திலி ருந்து வைரங்களுடன் சூர்யா வெளிவரும் காட்சிகள், படத்தில் ரசனையாக இருக்கும். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், சூர்யா தனது தலையில் வைரத்தை மறைத்துக் கடத்திவருவார்.

இதுபோன்ற ஒரு சம்பவம், கொச்சி விமான நிலையத்தில் நடந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர், நவ்ஷாத். ஷார்ஜாவிலிருந்து கொச்சி வந்த விமானத்தில் இவர் பயணம் செய்துள்ளார். தங்கம் கடத்தி வந்ததாக வந்த புகாரையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அலர்ட் ஆனார்கள். விமான நிலையத்தில் நவ்ஷாத்தின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்ததையடுத்து அதிகாரிகள் அவரை சோதனைசெய்தனர்.

Smugling
Smugling

மெட்டல் டிடெக்டர் சோதனையில் எதுவும் தென்படவில்லை. இருந்தும், அதிகாரிகளுக்கு அவர் மீதான சந்தேகம் தீரவில்லை. அவரது தலையில் இருந்த பேண்ட் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. அந்த பேண்டை கழற்றி சோதனை செய்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். நவ்ஷாத் தனது தலையில் 1.13 கிலோ தங்கத்தை மறைத்துக் கடத்தியது கண்டுபிடிக்கபட்டது. இதற்காக, தனது தலைமுடியின் ஒரு பகுதியை எடுத்துள்ளார். அதற்குள் தங்கத்தை மறைத்து, 'விக்' வைத்து வந்துள்ளார். அது, பார்ப்பதற்கு சாதாரணமாகத்தான் இருந்தது. அந்த பேண்டை எடுக்கவும்தான் நவ்ஷாத் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.