Published:Updated:

கேரளா: பணத்துக்காக 51 வயதுப் பெண்ணுடன் திருமணம்; நண்பர்கள் கேலி! - மனைவியைக் கொலை செய்த இளைஞர்

கொலை செய்யப்பட்ட சகா குமாரி
கொலை செய்யப்பட்ட சகா குமாரி

பணத்துக்கும் சொத்துக்கும் ஆசைப்பட்டு வயது முதிர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து, பின்னர் கொலை செய்த கேரள இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக -கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை அருகே காரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சகா குமாரி (51). இவர் காரக்கோணம் பகுதியில் அழகு நிலையம் நடத்திவருகிறார். இவருக்கு சுமார் பத்து ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. நல்ல வசதி இருந்தும் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்துவந்தார். இவர், தனது வயது முதிர்ந்த தாயை திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அடிக்கடி அழைத்துச் செல்வது வழக்கம். அந்த மருத்துவமனையில் நெய்யாற்றாங்கரை அருகேயுள்ள பத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அருண் (26) என்பவர் வரவேற்பாளராகப் பணியாற்றிவந்தார். அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்றுவந்த சகா குமாரிக்கு, அருண் உதவி செய்துவந்திருக்கிறார். இதனால் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. சகா குமாரிக்கு பத்து ஏக்கர் நிலம் மற்றும் அழகு நிலையம் மூலம் அதிகப்படியான வருவாய் வருவது அருணுக்கு தெரியவந்திருக்கிறது. இதனால் சகாவுடனான நட்பை மெல்லக் காதலாக மாற்றியிருக்கிறார் அருண்.

திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்
திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்

வயது முதிர்ந்த பெண் எனத் தெரிந்தும் சகாவைத் தீவிரமாக காதலித்ததுடன், இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணமும் செய்துகொண்டார். இவர்களது திருமணம் அப்பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றில்வைத்து நடந்தது. வயது முதிர்ந்த பெண்ணைத் திருமணம் செய்வதற்கு அருணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் திருமணத்துக்குச் செல்லவும் இல்லை. இதையடுத்து, திருமணம் செய்த கையோடு காரக்கோணத்திலுள்ள சகா குமாரியின் வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளையாக ஒட்டிக்கொண்டார் அருண்.

சகாவின் வீட்டில் அவரது தாயார் உடல்நலக்குறைவால் படுக்கையில் இருக்கிறார். அவருக்கு உதவுவதற்காக ஹோம் நர்ஸ் ஒருவரும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இரண்டு மாதங்கள் இவர்களது இல்வாழ்க்கை சுமுகமாகச் சென்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சகா, தனது திருமணத்தின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததுடன், வாட்ஸ்அப் மூலம் அவருடைய தோழிகளுக்கும் பகிர்ந்திருக்கிறார். இதைப் பார்த்த அருணின் நண்பர்கள் வயது முதிர்ந்த பெண்ணைத் திருமணம் செய்ததாகக் கேலி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

கொலை செய்யப்பட்ட சகா குமாரி
கொலை செய்யப்பட்ட சகா குமாரி

புகைப்படங்களை வலைதளங்களில் பதிவேற்றம் செய்தது சம்பந்தமாக சகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் அருண். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. நண்பர்களின் கேலி மற்றும் வீட்டில் ஏற்பட்ட பிரச்னையாலும் நெந்துபோன அருண், தனது மனைவியை கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக கிறிஸ்துமஸ் குடிலுக்குப் பயன்படுத்திய சீரியல் மின் விளக்கு ஒயரில் ஷார்ட் சர்க்கியூட் ஏற்படுத்தி வீட்டு வாசலில் போட்டிருக்கிறார்.

குமரி: சிறுமி மீது ஒருதலைக் காதல்; மனைவி கொலை - காதல் கடிதத்தால் சிக்கிய கணவர்!

சகா வீட்டிலிருந்து வெளியே வந்த சமயத்தில் அந்த ஒயரை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து மயங்கியிருக்கிறார். அவர் இறக்கும்வரை காத்திருந்த அருண், மரணத்தை உறுதி செய்த பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் கூறியிருக்கிறார். மனைவி எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை என அருண் கூறியிருக்கிறார். இதை நம்பாத அந்தப் பகுதியினர் வெள்ளறடை காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

வயது முதிர்ந்த சகாவை திருமணம் செய்த அருண்
வயது முதிர்ந்த சகாவை திருமணம் செய்த அருண்

போலீஸார் அங்கு சென்று உடலை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். அதில், சகா இறந்து நான்கு மணி நேரத்துக்கு மேல் ஆகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் போலீஸார் அருணைப் பிடித்து விசாரணை நடத்தினர். வயது முதிர்ந்த மனைவி சகாவைக் கொலை செய்ததை அருண் ஒப்புக்கொண்டிருக்கிறார். பணத்துக்கும் சொத்துக்கும் ஆசைப்பட்டு வயது முதிர்ந்த பெண்ணைக் காதலித்து, திருமணம் செய்து, கொலை செய்த கேரள இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு