Published:Updated:

`கொடூரமாகக் கொல்லப்பட்ட நண்பன், லாரியில் வீசப்பட்ட செல்போன்!'- `திரிஷ்யம்' பட பாணியில் நடந்த கொலை

மலையரசு

`தம்பியை ஏன் கொன்றாய்' எனக் கேள்வி எழுப்பிய நிபினின் கூட்டாளிகள் நான்கு பேரும், அர்ஜூனை சுற்றிநின்றுகொண்டு, கம்பி போன்ற பொருளால் அவரைத் தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

அர்ஜுன்
அர்ஜுன் ( manoramaonline )

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கும்பளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், அர்ஜூன். 20 வயதான இவர், வண்டிக்கு பெட்ரோல் வாங்கி வருவதாகக் கடந்த 2-ம் தேதி கூறிச் சென்றவர் காணாமல்போனார். இதையடுத்து, அவரது பெற்றோர்கள் போலீஸில் புகார் அளித்தனர். முதலில் புகாரைப், பெற்றுக்கொண்ட போலீஸ் அர்ஜூனை தேட முன்வரவில்லை. இதனால், பெற்றோர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில், நீதிமன்றம் போலீஸைக் கண்டிக்கவே, அதன்பிறகு தேடுவதில் தீவிரம் காட்டினர். அதன் பின்னர், எட்டு நாள்களுக்குப் பிறகு கடந்த புதன்கிழமை, நெட்டூர் என்னுமிடத்தில் சடலமாக மீட்கப்பட்டார் அர்ஜூன்.

அர்ஜுன்
அர்ஜுன்
mathrubhumi

உடல் முழுவதும் காயங்களுடன் நீரில் மூழ்கடித்தவாறு அழுகிய நிலையில் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார் அர்ஜூன். அவரை யார் இப்படி கொடூரமாகக் கொலை செய்தனர் என்பது தெரியாமல், போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். அப்போதுதான், அர்ஜூனின் பெற்றோர்கள் எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்களான நிபின், ரோனி ராய் அஜித், அனந்து சிவன் ஆகிய நான்கு பேரை போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில், அவர் பழிக்குப் பழியாக கொலைசெய்யப்பட்டுள்ளார் என்ற உண்மை வெளிவந்துள்ளது.

பழிக்குப் பழி சம்பவம்!

நிபின், ரோனி ராய் , அர்ஜூன் ஆகிய மூன்று பேரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். கடந்த வருடம் ஜூலை 2-ம் தேதி, அர்ஜூன், நிபினின் சகோதரனுடன் பைக்கில் வெளியே சென்றுள்ளார். அப்போது நடந்த விபத்தில் நிபினின் சகோதரன் சம்பவ இடத்திலேயே பலியாக, அர்ஜூன் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். பின்னர், இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற பிறகே, அர்ஜூன் குணம் அடைந்துள்ளார். இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்த தனது சகோதரன் மறைவுக்கு அர்ஜூன் தான் பொறுப்பு என்றும், அவரை பழிக்குப் பழியாகக் கொலை செய்வேன் என்றும் அப்போதிருந்தே கூறிவந்துள்ளார் நிபின். இதற்கு முன்பு பலமுறை அவரைக் கொலை செய்ய நிபின் முயற்சி செய்தும் கடைசியாகத் தம்பியின் நினைவு நாளிலேயே அர்ஜூனைக் கொலை செய்து பழி வாங்கியுள்ளார். தலையை சிதைத்து கொடூரமாக அவரைக் கொன்றுள்ளனர்.

நிபின் மற்றும் அவரது கூட்டாளிகள்
நிபின் மற்றும் அவரது கூட்டாளிகள்
manoramaonline

கொலைச் சம்பவத்தை விவரிக்கும் போலீஸார், ``நிபின் கூட்டாளிகள் அனைவரும் போதைக்கு அடிமையானவர்கள். போதைக் கும்பலுடன் நெருக்கமான தொடர்பு உள்ளவர்கள். கடந்த வருடத்திலிருந்தே அர்ஜூனைக் கொல்ல பல பிளான்களை செயல்படுத்தியுள்ளார் நிபின். ஆனால் அது சொதப்பியதால், தான் தம்பியின் நினைவு நாளிலேயே அவரைக் கொலை செய்துள்ளார். விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. நான்கு பேருக்கு மட்டுதான் தொடர்பா அல்லது போதைப்பொருள் கும்பலும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதா என விசாரணை நடத்தி வருகிறோம்" என்று கூறியுள்ளனர்.

`திரிஷ்யம்' பட பாணியில் கொலை!

சம்பவத்தன்று, அர்ஜூனை திட்டமிட்டபடியே தூக்கிய நிபினின் கூட்டாளிகள், அவரை யாருமே போக முடியாத சதுப்பு நிலப்பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு, `தம்பியை ஏன் கொன்றாய்' எனக் கேள்வி எழுப்பிய நிபினின் கூட்டாளிகள் நான்கு பேரும், அர்ஜூனை சுற்றிநின்றுக்கொண்டு, கம்பி போன்ற பொருளால் அவரைத் தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பல முறை அப்படி தாக்கிய அவர்கள், அர்ஜூன் இறந்த பின்பு கயிற்றில் கட்டி நீரில் வீசியுள்ளனர். பின்னர், கொலை எப்படியும் போலீஸுக்குத் தெரிந்துவிடும் என்பதால், அவர்களைத் திசை திருப்புவதற்காக `திரிஷியம்' பட பாணியில் அர்ஜூனின் செல்போனை எடுத்து லாரி ஒன்றில் போட்டுள்ளனர். இதனால், அர்ஜூன் காணாமல் போனபிறகு அவரை செல்போன் சிக்னல் மூலமாகக் கண்டுபிடிக்க முயன்ற போலீஸ், முதலில் விசாரணையில் தடுமாறியுள்ளது. இதேபோல், விசாரணைக்கும் கொலையாளிகள் ஒத்துழைக்கவில்லை என போலீஸ் தரப்பு கூறியுள்ளது. முதலில், ``அர்ஜூன் பைக் ரைடர். அதனால் எங்காவது வெளியூருக்குச் சென்றிருப்பான். மேலும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பிருக்கிறது" எனக் கூறி போலீஸின் விசாரணையைத் திசைதிருப்ப முயன்றுள்ளனர் கொலையாளிகள்.

அர்ஜுன் கொலைசெய்யப்பட்ட இடம்
அர்ஜுன் கொலைசெய்யப்பட்ட இடம்
mathrubhumi
Vikatan

அப்போது, புகார் கொடுத்த அர்ஜூனின் பெற்றோர்களுடன் போலீஸார் கொலையாளிகளைப் பேசவைத்துள்ளனர். அதில், நான்கு பேரும் முன்னுக்குபின் முரணான தகவல்களைத் தெரிவிக்க, போலீஸாருக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது. அதன்பிறகுதான் உண்மையைக் கண்டறிந்துள்ளனர். கொலையாளிகளைத் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ``ஏற்கெனவே, விபத்துக்குப் பிறகு 10 லட்ச ரூபாய் செலவுசெய்து அவனை உயிர் பிழைக்க வைத்தோம். இருந்தும் அவன் செய்யாத குற்றத்துக்கு இப்படி அவனைக் கொலைசெய்துள்ளார்கள். காணாமல்போன முதல் நாளே அவனை கண்டுபிடிக்கச் சொல்லி புகார் கொடுத்தோம். ஆனால், போலீஸ் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் கொடுத்த உடனே நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த அளவுக்கு நிலைமை சென்றிருக்காது" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார் அர்ஜூனின் தந்தை வித்யன். இந்த கொலைச் சம்பவம் கேரளாவை உலுக்கியுள்ளது.