Published:Updated:

பணத்துடன் தப்பிய கடத்தல் கும்பல்; ஜேம்ஸ்பாண்டாக மாறிய தலைமைக் காவலர் - சென்னையில் பரபர ஆக்‌ஷன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கடத்தல் கும்பலின் காரில் தலைமைக் காவலர்  சரவணக்குமார்
கடத்தல் கும்பலின் காரில் தலைமைக் காவலர் சரவணக்குமார்

சென்னையில் தொழிலதிபர் மூசா என்பவர் கடத்தல் வழக்கில் பிரபல ரௌடியைப் பிடிக்க காரின் முன் பகுதியில் உயிரைப் பணயம் வைத்து தலைமைக் காவலர் சரவணக்குமார் செல்லும் சிசிடிவி வீடியோ காட்சிகள் அனைவரையும் பதற வைக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்கடன் ரோடு, 2-வது அவென்யூவைச் சேர்ந்தவர் மூசா (73). இவர் செம்மரம் தொடர்பான தொழில் செய்து வருகிறார். கடந்த 3-ம் தேதி காலை 10 மணியளவில் மூசா வீட்டிலிருந்தபோது வந்த சிலர், அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். மூசா, சத்தம் போடாமலிருக்க அவரின் வாயை பிளாஸ்திரியால் மூடியதோடு, கைகளில் கைவிலங்கையும் போட்டிருக்கிறது கடத்தல் கும்பல். பின்னர் மூசாவின் இளைய மகன் செரீப்பை போனில் தொடர்பு கொண்டு ”உங்கள் அப்பாவை உயிரோடு விட வேண்டும் என்றால் 3 கோடி ரூபாய் ரூபாய் கொடு” என கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கேட்டு மிரட்டியிருக்கின்றனர்.

தொழிலதிபர் மூசா
தொழிலதிபர் மூசா

இதுகுறித்து கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள உத்தண்டியில் குடியிருக்கும் மூசாவின் மூத்த மகன் பஷீருக்கு அவரின் தம்பி ஷெரீப் தகவல் தெரிவித்தார். அதனால் கானாத்தூர் காவல் நிலையத்தில் பஷீர் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

தனிப்படை ஒன்றை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நியமித்தார். இந்த டீமில் இணை கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில் துணை கமிஷனர் கார்த்திக்கேயன், உதவி கமிஷனர்கள் சுதர்சன், ரமேஷ், இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட், தலைமைக் காவலர் சரவணக்குமார், காவலர் மகேஷ் உள்பட சில போலீஸார் இருந்தனர்.

சிசிடிவி கேமரா பதிவுகளை தனிப்படை ஆய்வு செய்ததில் சேத்துப்பட்டு பகுதியில் மூசா கடத்தப்பட்டது தெரியவந்தது. சிசிடிவி, செல்போன் சிக்னல் மூலம் தொழிலதிபரைக் கடத்திய கும்பலை அடையாளம் கண்டனர். ஆனால் பணம் கொடுத்து தொழிலதிபரை மீட்க போலீஸார் முடிவு செய்தனர்.

இரண்டாவது முறை போன் மூலம் தொடர்பு கொண்ட கும்பல், பணம் கேட்டது. 3 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பேரத்தைத் தொடங்கிய கடத்தல் கும்பல் இறுதியில் 25 லட்சம் ரூபாய் கொடுத்தால் மூசாவை விடுவிப்போம் என்று கூறியது. போலீஸுக்குச் சென்றால் மூசாவை கொன்றுவிடுவோம் எனவும் அச்சுறுத்தியிருக்கின்றனர்.

இதையடுத்து சினிமாவில் வருவதைப் போல கடத்தல் கும்பல் பல இடங்களைக் கூறிவிட்டு இறுதியாக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் பகுதிக்கு வரும்படி கூறியது. 25 லட்சம் ரூபாய் பணத்துடன் மூசாவின் மகன் ஏற்பாடு செய்த ஒருவர் அங்கு தனியாகச் சென்றார். அவருக்கு போன் செய்த கடத்தல் கும்பல், பணத்தை சில அடையாளங்களைக் குறிப்பிட்டு அங்கு காத்திருந்த ஒருவரிடம் கொடுக்கும்படி கூறியது.

பிரபல ரௌடி அறுப்புக்குமார்
பிரபல ரௌடி அறுப்புக்குமார்

அதன்படி பணத்தைக் கொடுத்ததும் அந்த நபர் 100 மீட்டர் தூரத்தில் பைக்கில் காத்துக் கொண்டிருந்த இன்னொருவரிடம் பணத்தைக் கொடுத்தார். அந்த சமயத்தில் வேகமாக ஒரு கார் பைக்கின் அருகில் வந்து நின்றது. அந்தக் காரிலிருந்து தொழிலதிபர் மூசாவை பிரபல ரௌடி அறுப்புக்குமார் கீழே இறக்கிவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு காருக்குள் ஏறினார். கார் மின்னல் வேகத்தில் எழும்பூர் கோஆப்டெக்ஸ் வழியாக ஆயிரம் விளக்கு பகுதியை நோக்கிச் சென்றது. துணை கமிஷனர் கார்த்திக்கேயனின் தனிப்படையிலிருக்கும் தலைமைக் காவலர் சரவணக்குமார், காவலர் மகேஷ் ஆகியோர் நடப்பதை மப்டியில் இருந்தபடி ரகசியமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். கார் புறப்பட்டுச் சென்றதும் பணத்தை மீட்க தலைமைக் காவலர் சரவணக்குமாரும் மகேஷும் பல்சர் பைக்கில் காரைப் பின்தொடர்ந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மழை பெய்து கொண்டிருந்ததால், எழும்பூர் கோஆப்டெக்ஸ் பகுதியில் உள்ள சிக்னல் வேலை செய்யவில்லை. அதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் கடத்தல்காரர்களின் கார் சிக்கியது. அதனால் பல்சர் பைக்கைக் கொண்டு காரை போலீஸார் மடக்கினர். பின்னர் காரை இருவரும் சுற்றி வளைத்து உள்ளே இருந்த பிரபல ரௌடி அறுப்புக்குமாரை பிடித்து வெளியில் இழுத்தனர். அறுப்புக்குமார் காவலர் மகேஷிடம் சிக்கிக் கொண்டார். ஆனால் பணம் காருக்குள் இருந்தது. அறுப்புக்குமார் சிக்கியதும் டிரைவர் பிரகாஷ் காரை வேகமாக எடுத்தார். உடனே தலைமைக் காவலர் சரவணக்குமார், அதிரடியாக கடத்தல் கும்பல் காரின் முன்பகுதியில் ஜேம்ஸ்பாண்ட் போல தாவினார். அப்போது டிரைவர் காரை வேகமாக ஓட்டியபோதும் அதன் முன்பகுதியைப் பிடித்துக் கொண்டே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரைச் சென்றார்.

இறுதியாக கடத்தல் கும்பலின் கார் ஆயிரம் விளக்கு போலீஸ் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அப்போது அங்குள்ள தனியார் பள்ளியின் கேட்டில் காரை டிரைவர் மோதினார். அப்போது காலை தூக்கி தலைமைக் காவலர் சரவணக்குமார் மயிரிழையில் உயிர் பிழைத்தார். காரில் தொங்கிக் கொண்டே தலைமைக் காவலர் சரவணக்குமார் சத்தம் போட்டதைக் கேட்ட பொதுமக்கள் விபத்து எனக்கருதி பைக்கிலும் ஆட்டோவிலும் காரை விரட்டினர். இறுதியாக ஆயிரம் விளக்கு போலீஸ் குடியிருப்பு பகுதியில் வைத்து காரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். காருக்குள் இருந்த பணத்தையும் போலீஸார் பத்திரமாக மீட்டனர். காவலர்கள் இருவரின் இந்த துணிச்சலான செயலை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர். இணை கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர் கார்த்திக்கேயன் ஆகியோர் பாராட்டி வெகுமதியையும் கொடுத்திருக்கின்றனர்.

மீட்கப்பட்ட பணம்
மீட்கப்பட்ட பணம்

சினிமா காட்சிகளைப் போல நடந்த இந்தச் சம்பவத்தை நம்மிடம் விவரித்தார் போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அறுப்பு குமார். இவர் மீது ஒரு கொலை வழக்கு, இரண்டு கடத்தல் வழக்குகள் உள்பட 5 வழக்குகள் உள்ளன. மூசா, செம்மரம் பிசினஸுக்கு முன்பு போலீஸ் எஸ்.ஐ-யாக பணியாற்றியவர். தொழிலதிபரான மூசாவுக்கு சில வேலைகளை அறுப்பு குமார் செய்து கொடுத்திருக்கிறார். மூசாவிடம் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதைத் தெரிந்துக் கொண்ட அறுப்புக்குமார், மூசாவைக் கடத்தி பணத்தைப் பறிக்க திட்டமிட்டிருக்கிறார். அதன்படி மூசாவைக் கடத்திக் கொண்டு போரூரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் அடைத்து வைத்திருக்கின்றனர். அந்த போதை மறுவாழ்வு மையத்தை காந்தி என்பவர் நடத்திவருகிறார். இந்த வழக்கில் இன்னும் சிலரைத் தேடிவருகிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு