Published:Updated:

கடத்தப்பட்ட குழந்தைக்குக் கொரோனா.. ட்ராக் ஹிஸ்டரியில் சிக்கிய 22 பேர்!- அச்சத்தில் சாலையோர மக்கள்

குழந்தை
குழந்தை ( மாதிரிப் படம் )

குழந்தையின் தாய் மதுவுக்கு அடிமையானவர் என்ற தகவல் கிடைக்க போலீஸார், காப்பகத்தில் குழந்தையைச் சேர்க்க முடிவு செய்தனர்.

கொரோனா வைரஸ் பரவல் குழந்தைகள் உலகையும் விட்டுவைக்கவில்லை. பிறந்த குழந்தை முதல் 6 மாதங்கள் ஆன குழந்தை வரை கொரோனா பரவல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தக் குழந்தைகளுக்கு எல்லாம் அவர்களது தாய் அல்லது உறவினர்கள் அல்லது மருத்துவமனை மூலமாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும். ஆனால் ஹைதராபாத்தில் ஒரு குழந்தைக்குக் கடத்தல்காரர்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

ஹைதராபாத்தில் சாலையோரத்தில் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. இதற்கிடையே, கடந்த புதன்கிழமை அந்தக் குடும்பத்தில் இருந்த 18 மாதக் குழந்தையைக் காணவில்லை. இதையடுத்து அந்தக் குழந்தையின் தாய் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். சாலையோரத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது குழந்தை காணாமல் போனது எனப் புகாரில் கூறியிருந்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இளம்நபர் ஒருவர் பழங்களைக் கொடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் 27 வயதுடைய நபர் ஒருவரை சமீபத்தில் கைது செய்தனர். அந்த நபரோ, ``தனக்குப் பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டது. குழந்தை ஆசையில் சாலையோரத்தில் தங்கியிருந்த குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டேன்" எனக் கூறியுள்ளார். இதையடுத்து அவரிடமிருந்து குழந்தையை மீட்ட போலீஸார் தாயிடம் சேர்த்து வைக்க முடிவு செய்தனர். ஆனால் குழந்தையின் தாய் மதுவுக்கு அடிமையானவர் என்ற தகவல் கிடைக்க போலீஸார், காப்பகத்தில் குழந்தையைச் சேர்க்க முடிவு செய்தனர்.

குழந்தை
குழந்தை

காப்பகத்துக்கு அழைத்துச் சென்றபோது குழந்தைக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், வைரஸ் தொற்று உறுதியாக போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். உடனே குழந்தையின் தாய், கடத்தியவர் எனக் குழந்தைக்குத் தொடர்புடைய 22 பேரை வளைத்து அவர்களையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி தனிமைப்படுத்தியுள்ளனர். குழந்தை கடத்தப்பட்டபோது அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக தீவிரமாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தால், சாலையோரத்தில் வசிக்கும் மக்கள் கொரோனா பீதியில் உறைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு