Published:Updated:

`ஆண் குழந்தை ஆசை; கர்ப்பிணி நாடகம்!' -மெரினாவில் பலூன் வியாபாரி குடும்பத்தைப் பதறவைத்த இளம்பெண்

குழந்தையைக் கடத்திய ரேவதி
குழந்தையைக் கடத்திய ரேவதி

திருமணமாகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில் ரேவதிக்குப் பிறந்தது எல்லாம் பெண் குழந்தைகள் என்பதால் சினிமா ஆசைகாட்டி ஆண் குழந்தையை அவர் கடத்தியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டம், ஏகாதி பாரதி காலனியைச் சேர்ந்தவர் ஜான்போஸ்லே. இவரின் மனைவி ரந்தீஷா. இந்தத் தம்பதிக்கு ஜான் என்கிற 7 மாத ஆண் குழந்தை உள்ளது. குடும்பத்தோடு சென்னை மெரினா கண்ணகி சிலை அருகில் தங்கியிருக்கும் ஜான்போஸ்லே, பலூன்களை விற்று பிழைப்பு நடத்திவருகிறார்.

இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி பலூன்களை விற்றுக் கொண்டிருந்த ஜான்போஸ்லே மற்றும் ரந்தீஷாவிடம் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பேச்சுக் கொடுத்தார். பின்னர், `உங்கள் குழந்தை அழகாக இருக்கிறது, சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தால் உங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும். நீங்களும் வசதியாக வாழலாம்' என ஆசை வார்த்தையைக் கூறியிருக்கிறார்.

குழந்தையைக் கடத்திய ரேவதி
குழந்தையைக் கடத்திய ரேவதி

அந்தப் பெண்ணின் பேச்சை நம்பிய தம்பதி, தங்களின் குழந்தையை சினிமாவில் நடிக்க வைக்க ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அந்தப் பெண், `குழந்தைக்கு சில மருத்துவ பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். அதனால் நீங்கள் குழந்தையை அழைத்துக்கொண்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வாருங்கள்' என்று கூறியுள்ளார். அதன்படி குழந்தையை தூக்கிக்கொண்டு அந்தத் தம்பதி மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு, குழந்தையை கையில் வாங்கிக்கொண்ட அந்தப் பெண், `டாக்டரிடம் காட்டிவிட்டு வந்துவிடுகிறேன். நீங்கள் இங்கு காத்திருங்கள்' என்று கூறினார். பின்னர் குழந்தையோடு சென்ற அந்தப் பெண் திரும்பி வரவில்லை. இதையடுத்து, மருத்துவமனை முழுவதும் ஜான்போஸ்லே, ரந்தீஷா ஆகியோர் குழந்தையையும் பெண்ணையும் தேடினர்.

இதையடுத்து, பூக்கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர்கள் சித்தார்த் சங்கர் ராய், அகமது அப்துல்காதர், சசி ஆகியோர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு தனிப்படை போலீஸாரும் குழந்தையையும் அந்தப் பெண்ணையும் தீவிரமாக தேடிவந்தனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

சிசிடிவியில் சிக்கிய பெண்
சிசிடிவியில் சிக்கிய பெண்

அப்போது மருத்துவமனையிலிருந்து அந்தப் பெண் குழந்தையோடு வெளியில் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்தன. தொடர்ந்து சிசிடிவிக்களை கண்காணித்தபோது எழும்பூர் பகுதியில் அந்தப் பெண் மாயமானது தெரியவந்தது. அதன்பிறகு சிசிடிவியில் அந்தப் பெண் மற்றும் குழந்தை ஆகியோரின் உருவம் பதிவாகவில்லை. இதனால் எழும்பூர் பகுதியில் போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர். 8 நாள்களுக்குப்பிறகு குழந்தையோடு தலைமறைவாக இருந்த அந்தப் பெண்ணை போலீஸார் பிடித்தனர். அவரிடமிருந்து குழந்தையை மீட்ட போலீஸார் அந்தப் பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார்,

``அரசு மருத்துவமனையிலிருந்து குழந்தையைக் கடத்திக் கொண்டு எழும்பூர் பகுதிக்கு அந்தப் பெண் சென்றது சிசிடிவி மூலம் தெரியவந்தது. அதனால் எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். ஆனால், அந்தப் பெண் ரயில் நிலையத்துக்கு வரவில்லை என்பது உறுதியானது. இதனால் எழும்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் விசாரித்துவந்தோம். மேலும், குழந்தையைக் கடத்திய பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறினோம்.

`மூன்று மாதம்தான் அவருடன் வாழ்ந்தேன்'- குழந்தைக் கடத்தலில் சிக்கிய இளம்பெண் பகீர் வாக்குமூலம்

இந்தச் சமயத்தில் எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் உள்ள நர்ஸ் ஒருவர், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். நீங்கள் சந்தேகப்படும் பெண் ஒருவர் ஆண் குழந்தையுடன் மருத்துவமனையில் உள்ளார் என்று போனில் கூறினார். உடனடியாக தனிப்படை போலீஸார் அங்கு சென்று விசாரித்தனர். ஆனால், அதற்குள் அந்தப் பெண் குழந்தையோடு எஸ்கேப் ஆகிவிட்டார். அதனால், மருத்துவமனையில் உள்ள பதிவு மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அப்போது குழந்தையைக் கடத்திய பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தது தெரியவந்தது.

மருத்துவமனையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரித்தபோதுதான் அந்தப் பெண்ணின் பெயர் ரேவதி (27), மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. இவர் பி.எஸ்ஸி நர்ஸிங் படித்துள்ளார். ஆனால், அந்தப்படிப்பை முடிக்கவில்லை. சிசிடிவி உதவியாலும் நர்ஸ் கொடுத்த தகவலாலும் ரேவதியைப் பிடித்து குழந்தையை மீட்டோம். இதற்காக 80-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை தொடர்ந்து கண்காணித்துள்ளோம். ரேவதியிடம் விசாரித்தபோது அவர், எதற்காக குழந்தையைக் கடத்தினார் என்ற விவரம் தெரிந்தது.

ரேவதிக்கும் அரக்கோணத்தைச் சேர்ந்த டெய்லர் இளங்கோவனுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் 4 குழந்தைகள் இறந்துவிட்டன. ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ளார். இளங்கோவன் குடும்பத்தினர் ரேவதியிடம் ஆண் குழந்தைப் பெற்றுதரும்படி வற்புறுத்தியுள்ளனர்.

நீங்கள் சந்தேகப்படும் பெண் ஒருவர் ஆண் குழந்தையுடன் மருத்துவமனையில் உள்ளார்.
நர்ஸ்

ஆண் குழந்தை பிரச்னை ரேவதி குடும்பத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் ரேவதி, கணவர் குடும்பத்தினரிடம் தான் மீண்டும் கர்ப்பமாகியுள்ளதாகக் கூறியுள்ளார். அதனால், அரக்கோணத்திலிருந்து மேற்கு மாம்பலத்தில் உள்ள தாய்வீட்டுக்கு ரேவதி வந்துள்ளார். கர்ப்பிணி போல நடிக்க வயிற்றில் துணிகளை வைத்துள்ளார். கர்ப்பிணி நாடகத்தை நிஜமாக்க ரேவதி யோசித்தபோதுதான் மெரினா கடற்கரையில் பலூன் வியாபாரியின் ஆண் குழந்தையைப் பார்த்துள்ளார்.

அந்தத் தம்பதியிடம் பணத்தாசையைக் காட்டி 7 மாத ஆண் குழந்தையைக் கடத்தியுள்ளார். குழந்தைக்கு 7 மாதமானதால் ரேவதிக்கு அடுத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. கணவர் குடும்பத்தினரை எப்படி நம்ப வைப்பது எனத் திட்டமிட்டுள்ளார். இதற்காக குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அதுவே ரேவதியை சிக்க வைக்க காரணமாகிவிட்டது" என்றனர்.

குழந்தையைக் கடத்திய ரேவதிக்கு அவரின் அம்மா ஜெயலட்சுமி உதவி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக்குப்பிறகு ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரியவரும்.

பின் செல்ல