Published:Updated:

`9 டீம்.. 35 போலீஸ்.. சேஸிங்..!’ - 21 நாள்களுக்குப் பிறகு கடத்தல் கும்பலிடமிருந்து இளைஞர் மீட்பு!

accused members
accused members

சினிமா பாணியில் கடத்தல்காரர்களிடமிருந்து இளைஞர் மற்றும் கார் டிரைவர் மீட்கப்பட்ட சம்பவங்கள் வெளிவந்துள்ளன.

பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் சித்துராஜு. பெங்களூரு மாநகரைச் சுற்றிலும் இவருக்கு ஒன்பது பைக் ஷோரூம்கள் உள்ளன. இதற்கிடையே, கடந்த மாதம் 26-ம் தேதி இரவு பதைபதைப்புடன் ராஜனுகுன்டே காவல் நிலையத்துக்கு விரைந்துள்ளார். பதைபதைப்புக்குக் காரணம், 26-ம் தேதி காலை தன் மகன் ஹேமந்த், டிரைவர் கேசவ் ரெட்டியுடன் காரில் ஷோரூமுக்குக் கிளம்பிச் சென்றுள்ளார். சித்துராஜு ஷோரூமில் இறங்கியபின் டிரைவர் கேசவ் ஹேமந்த்தை கல்லூரியில் விடுவதற்குச் சென்றுள்ளார். இதன்பிறகு மாலை நேரம் காலேஜ் முடிந்து நீண்ட நேரமாகியும் ஹேமந்த்தும் டிரைவர் கேசவ்வும் திரும்பி வரவில்லை. இதனால் பதற்றமடைந்த சித்துராஜு இருவருக்கும் போன் செய்துள்ளார். பல முறை போன் செய்தும் `சுவிட்ச் ஆப்' என பதில் வரவே பதறியடித்து காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கு மகனையும் டிரைவரையும் காணவில்லை எனப் புகார் கொடுத்துள்ளார்.

kidnap
kidnap

அதன்பேரில் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர் போலீஸார். ஆனால், அன்றைய இரவு முழுவதும் எந்தவித க்ளூவும் கிடைக்கவில்லை. மறுநாள் சித்துராஜுவின் மொபைல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. எதிர்பார்த்ததுபோலவே ``ஹேமந்த்தையும், டிரைவரையும் கடத்தியுள்ளோம். 3 கோடி கொடுத்தால் விடுவிக்கிறோம்' என எதிர்முனையில் பேசிய நபர்கள் சொல்ல, மொத்த போலீஸ் டீமும் உஷாராகியுள்ளது. கடத்தல்காரர்களைப் பிடிக்க தனி டீம் அமைத்து விசாரணையில் ஈடுபட்டனர். முதலில் வந்த அழைப்பை டிராக் செய்துள்ளனர். ஆனால், அது சரிப்பட்டு வரததால் கடத்தல்காரர்களிடம் சித்துராஜுவை வைத்தே டீல் பேசியுள்ளனர். முதலில் பேரம் பேசுவதுபோல் நடித்துள்ளனர்.

அதன்படி ``3 கோடி அளவுக்கு என்னிடம் பணம் இல்லை'' என போலீஸின் பிளான்படி சித்துராஜு கடத்தல்காரர்களிடம் பேச பின்னர் 20 நாள்கள் கழித்து பணத்தைக் குறைத்து வாங்க ஒப்புக்கொண்டுள்ளனர். 1.7 கோடி கேட்க, அதற்கு சித்து ஒப்புக்கொண்டுள்ளார். 1.7 கோடி பணத்துடன் சித்துவை குறிப்பிட்ட இடத்துக்கு வரச் சொல்லியுள்ளனர். அதன்படி நேற்று அதிகாலை 4 மணி அளவில் சித்து அந்த இடத்துக்குச் செல்ல அவரைப் பின்தொடர்ந்த போலீஸார் ஒரு புதரில் மறைந்துள்ளனர். பணத்தைப் பெறுவதற்கு பைக்கில் ஒரே ஒருவர் மட்டும்வர போலீஸார் அவரை மடக்கியுள்ளனர். ஆனால், அவர் சப்இன்ஸ்பெக்டரை கத்தியால் தாக்க, பின்னர் துப்பாக்கியால் சுட்டு அவரைப் பிடித்துள்ளனர்.

kidnap
kidnap

பிடிபட்டவரின் பெயர் நவீன் எனத் தெரியவர அவரை கஸ்டடியில் எடுத்து தங்கள் பாணியில் போலீஸார் விசாரித்தனர். நவீன் உண்மையை கக்கியுள்ளான். ``எங்களின் பிளானின்படியே எல்லாம் நடந்தது. குற்றவாளி எஸ்.ஐ.யை தாக்கியதால் துப்பாக்கி பயன்படுத்த வேண்டியதாயிற்று. நவீனிடம் விசாரித்ததில் அவர்மட்டும் இந்தக் கடத்தலில் இல்லை என்பது உறுதியாகியது. இன்னும் மூன்றுபேர் இருப்பதாகக்கூற அவர்களைத் தேடினோம். ஓர் இடத்தில் பிரசாந்த் மற்றும் தங்கபாலா என்ற இருவர்தான் ஹேமந்த்தையும், டிரைவரையும் அடைத்துவைத்திருந்தது தெரியவந்தது. அவர்கள் இருந்த இடத்தைச் சுற்றிவளைத்தபோது கத்தியை ஹேமந்த் மற்றும் டிரைவரின் கழுத்தில்வைத்து இருவரையும் கொலை செய்துவிடுவோம் என மிரட்டினர்.

அப்போது கூர்மையான ஆயுதங்களுடன் காவலர்களையும் தாக்கியுள்ளனர். இருப்பினும் சாதுரியமாக செயல்பட்டு அவர்களை காவலர்கள் பிடித்தனர். 9 டீம்களாகப் பிரிந்து 35 போலீஸார் இந்த ஆபரேஷனில் வேலை செய்தனர். 21 நாள்களுக்குப் பிறகு கடத்தப்பட்ட இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம். இப்போதைக்கு இந்தக் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் சதீஷ் என்பவன். இவன் சித்துராஜுவின் பைக் ஷோரூமில் வேலைபார்த்தவன். இந்தக் கடத்தலுக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்தது எல்லாம் அவன்தான். தலைமறைவாகியுள்ள அவனைத் தேடிவருகிறோம். அவனையும் விரைவில் பிடித்துவிடுவோம்" எனக் கூறியுள்ளார் பெங்களூரு ஐ.ஜி ஷரத் சந்திரா.

hemanth
hemanth

சித்துராஜுவின் ஷோரூமில் பணிபுரிந்தபோது சதீஷ் அவரை நோட்டமிட்டுவந்துள்ளார். அதன்படி நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். ஆனால், இதில் போலீஸ் இருந்தது அவர்களுக்குத் தெரியாததால் கையும் களவுமாக மாட்டிக்கொண்டுள்ளனர். பிடிபட்ட மூவரில் ஒருவரான தங்கபாலா தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதனால் இந்த விவகாரம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு