Published:Updated:

உருக்கப்பட்ட தங்கம்... களவு போன பொக்லைன்கள்... சிக்கிய பலே கொள்ளையன்! #TamilnaduCrimeDiary

#TamilnaduCrimeDiary
#TamilnaduCrimeDiary

தஞ்சை மக்களை பீதியில் ஆழ்த்தி வந்த கொள்ளையன் சேட் காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளது, இப்பகுதி மக்களை நிம்மதி பெருமூச்சில் ஆழ்த்தியுள்ளது. #TamilnaduCrimeDiary

வல்லம், தமிழ்ப்பல்கலைக்கழகம், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பல்வேறு கொள்ளைச்சம்பவங்கள் நடைபெற்று வந்தன. குறிப்பாக, அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர் என ஆசிரியர்களைக் குறிவைத்து நடைபெற்ற நகைக்கொள்ளைச் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. கொள்ளையர்களை விரைவாகக் கண்டுபிடித்து, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனக் காவல்துறையினரிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தார்கள். இந்நிலையில்தான் தஞ்சை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மகேஷ்வரன், கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்தார்.

வல்லம்
வல்லம்

வல்லம் டி.எஸ்.பி சீதாராமன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அப்பாசாமி தலைமையில் செயல்பட்ட தனிப்படையானது, தீவிர புலன்விசாரணையிலும் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டு வந்தது. கடந்த ஜனவரி 19-ம் தேதி காலை, வல்லம் சவேரியார் காலனியைச் சேர்ந்த ஆரோக்கியமேரி, ஆலக்குடி புறவழிச்சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, டூவீலரில் வந்த மர்மநபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரது ஒரு சவரன் செயினை அபகரித்துவிட்டு மாயாகியுள்ளான். உடனடியாகத் தனிப்படை போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வல்லத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் வாகன சோதனை துரிதப்படுத்தப்பட்டது.

`போலீஸ் விசாரணையின்போது வக்கீலை சந்திக்க வேண்டும்!' - அப்துல் சமீம் கோரிக்கையை நிராகரித்த கோர்ட்

வல்லம் புறவழிச்சாலையில், டூவீலரில் வந்த இளைஞர் ஒருவர் போலீசாரைப் பார்த்ததும் வண்டியை வேறு பக்கம் திருப்ப முயன்றுள்ளார். உஷாரான போலீசார் அவரைப் பிடித்து விசாரித்த பொழுதுதான், இப்பகுதிகளில் அந்த இளைஞர் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்தது தெரியவந்தது. அவனது பெயர் சேட். சொந்த ஊர் கிருஷ்ணகிரி அருகில் உள்ள ஊத்தங்கரை. திருச்சியில் தங்கியிருக்கும் சேட், கொள்ளையடிப்பதற்காகவே தஞ்சை வரை பயணம் செய்து, வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் தன் கைவரிசையைக் காட்டியுள்ளான். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் எட்டு பொக்லைன் இயந்திரங்களைத் திருடிச்சென்று, தஞ்சை மாவட்ட காவல்துறையையே அதிர வைத்துள்ளான். கொள்ளையன் சேட் மீது நாகப்பட்டினம், விழுப்புரம், சிவகங்கை காவல்நிலையங்களிலும் வழக்குகள் உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

சேட்டு
சேட்டு

வல்லம் போலீஸ் டி.எஸ்.பி சீதாராமனிடம் நாம் பேசியபோது, ``பொதுவாகவே வல்லம் பகுதியில் திருட்டுச் சம்பவங்கள் அதிகமாக நடக்கும். இதுபோன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர்கள், பல பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து பதுங்கிவிடுவதே இதற்குக் காரணம். நாங்களும் விடாமல், தொடர்ந்து கண்காணித்து கைது செய்கிறோம். இப்போது கொள்ளையன் சேட்டையும் எங்களின் தனிப்படை பிடித்துள்ளது" என்றார். தனிப்படைக்குத் தலைமை வகிக்கும் இன்ஸ்பெக்டர் அப்பாசாமி, ``கொள்ளையன் சேட்டின் திருச்சி வீட்டில் சோதனையிட்ட போது, கொள்ளையடித்த நகைகளை எல்லாம் தங்கக்கட்டிகளாக உருக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 35 கிராம் மதிப்புள்ள மூன்று தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்துள்ளோம்" என்றார்.

டோர் டெலிவரி கஞ்சா!
அதிரும் கோவை

கோவை மாவட்டத்தில் குறிப்பாக கோவை மாநகரம் கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா மையமாக மாறி வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம் கஞ்சாப் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பு ஆங்காங்கே கண்டும் காணாமல் விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒவ்வொரு ஏரியாவிலும் ஏராளமானோர் கஞ்சா தொழிலில் வெளிப்படையாகவே இறங்கிவிட்டனர். இளைஞர்களும், வட மாநிலத்தவர்களும் அந்தந்தப் பகுதியில் கஞ்சா ஏஜென்ட்களாக மாறிவிட்டதால் விற்பனை கனஜோராகக் கொடிகட்டிப் பறக்கிறது. ஒரு போன் செய்தால் போதும், அவர்களே கஞ்சாவை டோர் டெலிவரி செய்து விடுவார்கள். இதனால், யார் விற்கிறார்கள்?, யார் வாங்குகிறார்கள்? என்பதைக் கண்டறிவது மிகவும் கடினமாகியுள்ளது.

சமீபத்தில், கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த, ரோஷன் ஃபரீத், அபாஸ், அக்பர் ஆஷிஃப் என்ற மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பல்சர் பைக்கில் வைத்து, 1.450 கிராம் கஞ்சாவைக் கடத்தி வந்த சக்திவேல் என்ற இளைஞரை போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர். ஆனாலும், கஞ்சா சப்ளையில் எந்தத் தொய்வும் ஏற்படவில்லை. காரணம் இவை எல்லாமே சம்பிரதாயக் கைதுகள்தான். ஆந்திரா, தெலங்கானா, தேனி, கம்பம் என்று பல்வேறு பகுதிகளிலிருந்து விற்பனைக்காக கஞ்சா கோவைக்குள் வருகிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை மாநகர போலீஸ் அதிகாரிகள், ``கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, கஞ்சா வழக்குகள் குறைந்துள்ளன. கஞ்சா விற்பனை தொடர்பாக, பொது மக்கள் எப்போது வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்" என்றனர்.

`வாகன வசூல்; நிறுவனங்களில் ரெய்டு!' - ராமநாதபுரம் போலீஸுக்கு அதிர்ச்சிகொடுத்த மோசடி இளைஞர்

இதற்கிடையே கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு காரில் கஞ்சா விற்று வந்த கோவிந்தன், மஞ்சுநாதன், பிரவீன், ஜோதி ஆகிய நான்கு பேரை வடவள்ளி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களை கைது செய்து விசாரித்தபோது கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்றது தெரியவந்தது. இவர்களிடமிருந்து அரைகிலோ கஞ்சாவையும் ஒரு காரையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் குற்றவாளிகளைச் சிறையில் அடைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு