திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள்மலையை அடுத்த பாலமலைப் பகுதியில் யானைத் தந்தங்களை வாங்க விற்க முயன்ற வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த பிரபாகர் (40), கொடைக்கானல் பெருமாள் மலையைச் சேர்ந்த ஜோசப் சேவியர் (44), மதுரை தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் (40), பிரகாஷ் (24), கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல் ரஷீத் (47), திருச்சூரைச் சேர்ந்த சிபின் தோமஸ் (26), பழநி பாலாறு டேம் பகுதியைச் சேர்ந்த அயப்பன் (56), காரைக்குடியைச் சேர்ந்த ராஜ்குமார் (29) ஆகியோரை வனத்துறையினர் கைதுசெய்தார்கள். இதில் தப்பி ஓடிய கொடைக்கானல் பெருமாள் மலையைச் சார்லஸ் (44) என்பவரை வனத்துறை, போலீஸார் தேடிவருகின்றனர். இவர்களிடமிருந்து இரண்டு யானைத் தந்தங்கள், ஒரு நாட்டுத் துப்பாக்கி, இரண்டு சொகுசு கார்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்தக் கும்பலை பிடிக்க வனத்துறையினருக்கு உதவிய விலங்குகள் நல தன்னார்வலர் பால்ராஜிடம் பேசினோம். ``கடந்த 15-ம் தேதி நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஒரு கும்பல் யானைத் தந்தத் துண்டுகள், புலிப்பல், புலிநகம் ஆகியவற்றைப் பதுக்கிவைத்து விற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்தக் குழுவில் நானும் இருந்தேன். அந்த விசாரணையில்தான் அப்துல் ரஷீத் கும்பல் யானைத் தந்தம் பதுக்கிவைத்திருப்பதை அறிந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதனடிப்படையில், நான், பழநி வனச்சரகர் பழனிகுமார் உட்பட மூன்றுபேர் முதலில் கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல் ரஷீத்தை பொருள் வாங்கும் நபர்களைபோல் சந்தித்தோம். அவர் `பழநியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் பொருள் இருக்கிறது. அங்கு வைத்து பொருளைக் காட்டுகிறோம்’ என்றார். இதையடுத்து நாங்கள் அவருடன் சென்றோம். அப்போது அய்யப்பன் என்பவர் எங்களுடன் சேர்ந்துகொண்டார். அவர் `பொருள் வேறு இடத்தில் இருக்கிறது’ எனக் கூறி வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுவிட்டு கடைசியாக பெருமாள்மலைக்குக் கூட்டிச் சென்றனர். அங்கு திருச்சூரைச் சேர்ந்த சிபின் தோமஸ் என்பவர் குத்தகைக்கு எடுத்து விடுதி நடத்திவருகிறார். அங்கிருந்த சிலர் எங்களை சாமைக்காட்டு பள்ளம் என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றனர். ஒரு வழியாக மாலை 6 மணிக்குத்தான் தந்தங்களைக் காட்டினர்.

இதையடுத்துதான் தேவதானப்பட்டி மற்றும் பெருமாள்மலை வனத்துறையினர் அங்கு வந்தனர். யானைத் தந்த கடத்தல் கும்பல் கடத்தலுக்குப் பயன்படுத்திய ஜீப் பறிமுதல் செய்யப்படவில்லை. மேலும் இந்த வழக்கில் மொத்தம் 11 பேர் ஈடுபட்டிருந்தனர். ஆனால் வனத்துறை எட்டுப் பேரை மட்டுமே கைதுசெய்துள்ளது. தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சார்லஸை, பெருமாள்மலை வனச்சரக வேட்டைத் தடுப்பு வனக்காவலர் பத்மநாபன் என்பவர் தப்பவைத்தார்.
அவர்கள் யானைத் தந்தத்தால் ஆன ஆபரணம் வைத்திருந்தனர், வனவிலங்கு வேட்டைக்காகப் பயன்படுத்திய 3 ஏர் கன்கள், 2 டபுள் பேரல் துப்பாக்கிகள் வைத்திருந்தனர், சிபின் தோமஸ் விடுதியில் காட்டுமாட்டுக் கறியும் இரவு சமையலுக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. அதை வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை.

மேலும் விசாரணையில் ஆயிரம் வனவிலங்குகளை கொன்றிருப்பதாக வாக்குமூலம் அளித்தனர். அய்யப்பன் தனது வீட்டில் எறும்புதின்னி ஓடுகள் 5 கிலோ இருப்பதாகக் கூறினார். ஆனால் இவையெல்லாம் வனத்துறை கைப்பற்றிய பட்டியலில் இடம்பெறவில்லை. குற்றவாளிகள் மூன்று பேரைத் தப்பவைத்துவிட்டனர். கேரளாவைச் சேர்ந்த குற்றவாளிகளுக்கு சாதமாகச் செயல்பட்டு விடுவித்துள்ளனர்.

இந்தக் கும்பலை முறையாக விசாரித்தால் யானைத் தந்த கடத்தல் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும். எனவே வனத்துறை உயரதிகாரிகள், விலங்குகள் நலவாரியம், மத்திய, மாநில அரசுகளுக்கு முறையாக மனு அளிப்பியிருக்கிறேன். அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
பெருமாள்மலை வனச்சரகர் சிவக்குமாரிடம் பேசினோம். ``விஜிலென்ஸ் டீமுடன் சேர்ந்துதான் அந்தக் கும்பலைப் பிடித்தோம். நாங்கள் அவர்களிடமிருந்து கைப்பற்றிய பொருள்களை மறைக்கவில்லை. மேலும் அந்தக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரைத் தப்பவைக்கவில்லை. அவர்களிடம் ஒரு நாட்டுத்துப்பாக்கி மட்டுமே இருந்தது. தொடர்ச்சியாக விசாரணை நடந்துவருகிறது” என்றார்.