Published:Updated:

`அந்தப் பெண்ணிடம் ஏமாந்தது நான் மட்டுமல்ல!' -என்ன சொல்கிறார் கோடம்பாக்கம் ஸ்ரீ?

`என் மீது புகார் கொடுத்த பெண் எப்படிப்பட்டவர் என்பது விரைவில் தெரியும்' என்று இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ நம்மிடம் தெரிவித்தார்.

கோடம்பாக்கம் ஸ்ரீ
கோடம்பாக்கம் ஸ்ரீ

இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ என்று அழைக்கப்படும் ஸ்ரீகண்டன் மீது திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். அந்தப் புகாரில், கோடம்பாக்கம் ஸ்ரீ, தனக்கு மனரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில், புகார் கொடுத்த பெண் மீது கோடம்பாக்கம் ஸ்ரீயின் மனைவி நான்சி நேற்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில் அந்தப் பெண் குறித்த தகவல்களைக் குறிப்பிட்டிருந்தார்.

`அவரால் தொல்லைகளை அனுபவித்தேன்!' -கோடம்பாக்கம் ஸ்ரீ மீது புகார் கொடுத்த பெண் யார்?

கோடம்பாக்கம் ஸ்ரீயிடம் பேசினோம்.

``என் மீது புகார் கொடுத்ததும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து என்னிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போதே நான் அந்தப் பெண் குறித்த முழுவிவரங்களை விசாரணை அதிகாரியிடம் கூறியதோடு அதற்கான ஆதாரங்களையும் காட்டினேன். என்னுடைய விளக்கத்தை ஏற்றுக்கொண்ட போலீஸார், விசாரித்துவிட்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்கள். அங்கிருந்து வந்த ஒரு மணி நேரத்தில் என் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணை என்னுடைய அலுவலகத்துக்கு ஒருவர் அழைத்துவந்து எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது அவரின் கதையைக் கேட்ட நான், அந்தப் பெண் மீது பரிதாபப்பட்டு இந்து மகா சபாவில் சேர்த்தேன்.

அவருக்கு மகளிர் அணியில் மாநிலச் செயலாளர் பதவி வழங்கினேன். இந்தச் சமயத்தில்தான் என் அலுவலகத்தில் துப்பரவுப் பணிகளை மேற்கொள்ளும் பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி செல்போனை ஏமாற்றி வாங்கியுள்ளார். அடுத்து எம்.பி.ஏ படித்த ஒருவரிடமும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். இன்னொருவரின் லட்சம் ரூபாய் மதிப்பிலான டூவிலரை வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். அந்தப் பெண்ணின் தரப்பில் உள்ளவர்களின் செல்போன்கள், டூவீலர் ஆகியவற்றுக்கு என் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் இஎம்ஐ செலுத்திவருகின்றனர்.

புகார் கொடுத்த பெண்
புகார் கொடுத்த பெண்

டெல்லியில் உள்ள ஜெயமான ஒருவர் மூலம் அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகிகளுடன் அறிமுகமாகி அவர்களுடன் போட்டோவும் எடுத்துள்ளார் அந்தப் பெண். அவர் கொடுத்த புகாரில், நான் கடந்த 6 மாதங்களாக அவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாகக் கூறியுள்ளார். அப்படியானால், அவரின் தம்பி திருமணம் நடந்தபோது என்னோடு சேர்ந்து அவர் எப்படி போட்டோ எடுக்க சம்மதித்தார்.

இந்தக் கேள்விக்கு அவர் பதில் கூறினால் போதும். மேலும், பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபருடன் அந்தப் பெண்ணுக்குப் பழக்கம் இருந்தது. அந்தத் தொழிலதிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வழக்கில் 2-வது குற்றவாளியாக அந்தப் பெண்மணி சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில் தலைமறைவானவர், பல கெட்அப்களில் வலம் வந்தார். அந்த வழக்கு தவிர இன்னும் சில வழக்குகள் அவர் மீது உள்ளன.

தம்பியின் திருமணத்துக்கு டெல்லியிலிருந்து பா.ஜ.க-வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரும் சாமியார் ஒருவரும் வந்திருந்தனர். மாங்காடு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள பங்களாவில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அந்த பங்களா, இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது. தற்போது அவர் உயிரோடு இல்லை. அவரின் மனைவியின் கட்டுப்பாட்டில்தான் அந்த பங்களா உள்ளது. இலங்கையைச் சேர்ந்த அந்த நபர் குற்றப்பின்னணியில் இருந்தவர். அவர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தை நான் கண்டித்தேன். மேலும், சம்பந்தப்பட்ட பா.ஜ.க பிரமுகர் குறித்து கட்சித் தலைமைக்கும் தகவல் தெரிவித்தேன். அதோடு, அந்தப் பெண்ணின் தம்பி திருமணத்துக்காக நான் செலவழித்த ரூபாயைத் திரும்பக் கேட்டேன். அதற்கு அவர் என் மீது இந்தப் புகாரை கூறியுள்ளார். எதையுமே விசாரிக்காமல் போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

புகார் கொடுத்த பெண்
புகார் கொடுத்த பெண்

அந்தப் பெண்ணும் நானும் பேசிய ஆடியோக்களை ஆதாரமாக அவர் சொல்கிறார். அவர் குறித்த பல ஆடியோக்கள், வீடியோக்கள் என்னிடம் ஆதாரமாக உள்ளன. அதை வெளியிட்டால் அவருக்குத்தான் அவமானம். என்னை மட்டுமல்லாமல் இந்த அரசாங்கத்தையும் சட்டத்தையும் அவர் ஏமாற்றி வருகிறார். இந்தப் புகாரையடுத்து அவரின் இன்னொரு முகம் வெளியில் தெரியும். கவுன்சிலர் ஒருவருடன் அந்தப் பெண்ணுக்குப் பழக்கம் உள்ளது. அந்த கவுன்சிலரும் அந்தப் பெண் மீது புகார் கொடுத்துள்ளார். ஏன், சினிமாவில் கலக்கிய நகைச்சுவை நடிகர் ஒருவரும் அவரால் ஏமாற்றப்பட்டு காவல் நிலையத்துக்கு அலைந்துகொண்டிருக்கிறார்" என்றார்.

இதனைத் தொடர்ந்து, கோடம்பாக்கம் ஸ்ரீயிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

நீங்கள் பாலியல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளதே?

ஒரு வெள்ளைத்தாளில் புகார் கொடுத்தால் அது உண்மையாகிவிடுமா.... நான் கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையில் போலீஸார் விசாரித்திருந்தால் என் மீது இந்த எப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்க மாட்டார்கள்.

உங்கள் மீது புகார் கொடுத்த பெண்மணி, எத்தனை ஆண்டுகள் இந்து மகா சபாவில் பணியாற்றினார்.

அவரின் முகநூல் பக்கத்தைப் பாருங்கள். அதில் பா.ஜ.க-வின் உறுப்பினர் என்றுதான் பதிவு செய்திருப்பார். இந்து மகா சபாவில் மகளிரணிச் செயலாளர் என்று குறிப்பிட்டிருக்க மாட்டார். சில காலம் அவர் இந்து மகா சபாவில் இருந்தார். அவரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் நீக்கிவிட்டோம்

அவருக்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதே?

கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட என் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு வேலைக்காக 5 லட்சம் ரூபாயை அவருக்கு அனுப்பியுள்ளேன். அவர்தான் எனக்குப் பணம் தர வேண்டும். நான் அவருக்குக் கொடுக்க வேண்டியதில்லை. என்னை மட்டுமல்லாமல் என் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களையும் அவர் ஏமாற்றியுள்ளார்.

உண்மையிலேயே அந்தப் பெண்ணுக்கும் உங்களுக்கும் என்னதான் பிரச்னை?

புகார் கொடுத்த பெண்
புகார் கொடுத்த பெண்

அவர் பல பிசினஸ்களைச் செய்துவருகிறார். குறிப்பிட்ட பிசினஸ் என்று சொல்ல முடியாது. ஆனால், சமூக சேவகி என்றுதான் அவரை பா.ஜ.க-வில் உள்ள பிரமுகர் ஒருவர், டெல்லியில் உள்ள வி.வி.ஐ.பி-க்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அவர் தலைமறைவாக இருந்தபோது முஸ்லிம் வேடத்தில் இருந்த புகைப்படங்கள் என்னிடம் உள்ளன. ஏன் அவர் சிலருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோகூட உள்ளது.

கோடம்பாக்கம் ஸ்ரீயின் குற்றச்சாட்டுகள் குறித்து ர் கொடுத்த பெண்ணிடம் விளக்கம் கேட்டோம். அவர், நமக்கு எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், ``நான் ஏற்கெனவே இந்தப் பிரச்னை குறித்து காவல் துறையினரிடமும் தேசிய மகளிர் ஆணையத்திடமும் அனைத்து விவரங்களையும் கூறிவிட்டேன்" என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார்.